
நம்மில் சிலருக்கு இப்படியொரு பழக்கம் இருக்கும். யாருக்காவது கெட்டது நடந்தால், அது நமக்கும் நடந்துவிடுமோ? என்று எண்ணி பயப்படுவதுண்டு. இதுபோன்ற தேவையற்ற பயத்தை எவ்வாறு நீக்குவது? இதைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் ஒரு அம்மாவும், மகனும் இருந்தார்கள். அதில் அந்த மகனுக்கு ஒரு பிரச்னை இருந்தது. அது என்னவென்றால், யாருக்காவது கெட்டது நடப்பதை பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ நமக்கும் அப்படி நடந்துவிடுமோ? என்று எண்ணிப் பயப்படுவான். இதை கவனித்த அந்த தாய் தன்னுடைய மகனை குணப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், அந்த ஊரில் இருக்கும் சிறந்த மனோத்தத்துவ நிபுணரிடம் தன் மகனை அழைத்துச் செல்கிறார்.
அந்த தாய் தன்னுடைய மகனின் பயத்தைப் பற்றி அந்த மனோதத்துவ நிபுணரிடம் விவரிக்கிறார். அவரும் அந்த பையனை சிறிது நேரம் தனியாக கூட்டிச் சென்று பேச்சுக் கொடுக்கிறார். அந்த டாக்டர் அந்த பையனுடைய மனது இருந்த நிலையை புரிந்துக் கொண்டு அவனுக்கு அறிவுரையும் சொல்லி அனுப்பி வைக்கிறார்.
டாக்டர் பெரிதாக சிகிச்சை ஏதும் செய்யாததைப் பார்த்த தாய் சலித்துக் கொண்டார், ‘இவர் என்ன மாத்திரை, மருந்து எதுவுமே தரவில்லையே?’ என்று நினைத்து வேதனையடைந்தார்.
சரியாக ஆறு மாதங்கள் கழித்து அந்த தாய் கையில் பூங்கொத்துடன் அந்த டாக்டரை சந்திக்க வந்தார். அந்த பூங்கொத்தை டாக்டரிடம் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக பேசத்தொடங்கினார். ‘டாக்டர் நீங்கள் அப்படி என் பையனிடம் என்னதான் கூறினீர்கள்? முன்பு போல சோகமாகவும், சோர்வாகவும் அவன் இருப்பதேயில்லை. இப்போதெல்லாம் அவன் முகத்தில் ஒரு தெளிவு இருக்கிறது’ என்று ஆச்சர்யமாக கேட்டார்.
அதற்கு அந்த டாக்டர், ‘அம்மா! உங்கள் பையன் இங்கே வந்தபோது அவனுக்குள் சுயநலம் அதிகமாக இருந்தது. அதனால்தான் யாருக்காவது கெட்டது நடந்தால் அவர்களைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் தனக்கு அது நடந்து விடுமோ? என்று பயந்தான். அந்த எண்ணத்தை சிறிது மாற்றி பொது நலமாக அவனுக்கு யோசிக்கக் கற்றுக்கொடுத்தேன்.
யாருக்காவது கெட்டது நடக்கும் பொழுது அவர்களுக்கு ஏதேனும் நம்மால் உதவி செய்ய முடியுமா? அல்லது அவர்களுக்காக வேண்டிக் கொள்ள முடியுமா? என்று யோசித்துப்பார் பயம் தன்னாலேயே குறைந்துவிடும்’ என்று கூறினேன்.
‘அதுபோலவே அவனும் யோசித்ததால், அவனுள் இருந்த பயம் வெளியே போய் இப்போது தெளிவான ஆளாக மாறிவிட்டான்’ என்று கூறினார்.
எவ்வளவு பெரிய பிரச்னைகக்கு எவ்வளவு சிறிய தீர்வு இருந்திருக்கிறது பாருங்கள். அது தெரியாமல்தான் நாமும் வாழ்வில் தேவையில்லாத பல விஷயங்களுக்கு பயந்துக் கொண்டிருக்கிறோம். இனி அவ்வாறு பயம் தோன்றும் போது இந்த அறிவுரையை நினைவில் வைத்துக் கொள்வோம். என்ன நான் சொல்வது சரிதானே? முயற்சித்துப் பாருங்கள்.