நம் எதிர்காலம் நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

May our future be better...
health care...
Published on

‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்று சொல்வார்கள். உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்காமல் என்னதான் காசு, பணம், புகழ் என்று சேர்த்தாலும், அது பயனற்றுப்போகும். இதை தெளிவாகப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் மிகபெரிய எழுத்தாளர். தன் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும், எழுத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால், அவருக்கு ஓய்வெடுக்க போதிய நேரமே இல்லை. சரியாக தூங்க மாட்டார், சரியாக சாப்பிட மாட்டார். இப்படியே இருக்க அவருக்கு சீக்கிரமே உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த மருத்துவர் இவருக்கு நன்றாக தெரிந்த மருத்துவர்தான் என்பதால், ‘நீங்கள் சென்று ஒரு மாதம் நன்றாக தூங்கி, ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடம்பை தேற்றிவிட்டு பிறகு மறுபடியும் என்னை வந்து பாருங்கள்’ என்று கூறி அனுப்பினார்.

சரி என்று சொல்லிவிட்டு சென்ற பெண்மணி தான் வழக்கம்போல செய்வதையேதான் செய்தார். இதனால், அவர் உடல்நிலை மேலும் பாதிப்படைந்ததே தவிர குணமாகவில்லை. ஒரு மாதம் கழித்து மருத்துவரைக் காண வந்த அந்த பெண்மணி தனக்கு மாத்திரை, மருந்து தருமாறு கேட்டுக்கொண்டார். ‘மருந்து, மாத்திரை தருவதற்கு முன் நான் உங்களுக்கு ஒரு சிகிச்சை தருகிறேன்’ என்று டாக்டர் கூறினார்.

ஒரு அறையில் பெரிய பாத்திரத்தில் மணல் மற்றும் பானை வைக்கப்பட்டிருந்தது. மருத்துவர் அந்த பெண்மணியிடம், ‘இந்த மணலை பானையில் முழுதாக நிரப்பிய பிறகு என்னை கூப்பிடுங்கள்’ என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார். இப்போது அந்த பெண்மணியும் மணலை அள்ளி அள்ளி பானையில் போட்டு நிரப்ப முயற்சிக்கிறார். ஆனால், பானையின் நடுவிலே ஒரு பெரிய ஓட்டை இருந்தது. மணலை போட போட நிரம்பாமல் அந்த ஓட்டையின் வழியாக சிந்திக் கொண்டேயிருந்தது.

சிறிதுநேரம் கழித்து மருத்துவர் அந்த பெண்மணியை காண வந்தார். ‘என்ன பானையை நிரப்பி விட்டீர்களா?’ என்று கேட்டார். அந்த பெண்மணியும், ‘எப்படி நிரப்ப முடியும். அதான் பானைக்கு நடுவே பெரிய ஓட்டை இருக்கிறதே? நான் எவ்வளவுதான் மணலைப் போட்டு நிரப்ப முயற்சித்தாலும் பானை நிரம்பாமல் அதன் வழியாக மணல் கொட்டிவிடுகிறது’ என்று கோபமாகக் கூறினார்.

இதையும் படியுங்கள்:
நாம் ஆசைப்படுவதை ஈர்க்கும் சக்தி நம் மனதிற்கு உண்டா?
May our future be better...

இதைக்கேட்ட மருத்துவர் சிரித்துக்கொண்டே கூறினார், ‘எப்படி ஓட்டை பானையில் மணலை போட்டால் சிந்திக் கொண்டேயிருக்குமோ? அதைப்போலதான் உடல் நலத்தை சரியாக பேணாமல் பேர், புகழ், செல்வத்தை சேர்த்தாலும் அதை சரியாக அனுபவிக்க முடியாமல் போகும். தயவு செய்து இப்போதாவது உங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்’ என்று கூறினார்.

நம்மில் பலபேர் இந்தக் கதையில் வந்தது போலத்தான். எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று தினம் தினம் கடுமையாக உழைக்கிறோம். ஆனால், அந்த எதிர்காலத்தை அனுபவிப்பதற்கு தேவையான நம் உடம்பை சரியாக கவனித்துக் கொள்வதில்லை. இனியாவது உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அதுவே நம்மிடம் இருக்கும் மிகபெரிய செல்வமாகும். நான் சொல்வது சரிதானே? முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com