விபத்து என்பது சம்பந்தப்பட்டவர் சம்பந்தப்படாதவர் என அனைவருக்கும் வருத்தத்தைத் தரும் ஒரு துயரமான நிகழ்வாகும். நம்மில் பலருக்கு சாலைப் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லை என்பதே உண்மை. சீக்கிரமாக அலுவலகத்தையோ, வீட்டையோட அடைந்து விடவேண்டும் என்ற முனைப்பு பலருக்கு உள்ளது.
சாலை விபத்துக்களில் பெரும்பான விபத்துக்கள் முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனத்தை முந்திச் செல்ல முயலும் போதே ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது. போதிய விழிப்புணர்வு இன்றி, கணிப்பு இன்றி வாகனங்களை முந்திச் செல்ல முயலும்போதுதான் விபத்துகள் ஏற்படுகின்றன.
வாகனங்களை முந்திச் செல்ல முயலுவதைத் தவறு என்று கூற முடியாது. நமக்கு முன்னே சென்று கொண்டிருக்கும் ஒரு வாகனம் மெதுவாகச் சென்று கொண்டிருக்கும் பட்சத்தில் நாம் அதை முந்தி முன்னேறிச் செல்வது தவறில்லை. ஆனால் அப்படிச் செய்வதற்கு முன்னால் நமக்கு முன்னே சென்று கொண்டிருக்கும் வாகனத்தைக் கடக்க முயற்சிக்கும்போது எதிர்புறத்தில் வேறெந்த வாகனமும் வரவில்லை என்பதை நிச்சயம் உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த பிரச்னையும் இல்லாமல் முந்திச் சென்று விடலாம் என்று மனதில் உறுதியாகத் தோன்றினால் முந்திச் செல்லலாம்.
சில சமயங்களில் எதிரே சற்று தொலையில் வாகனம் வந்து கொண்டிருக்கக் கூடும். அப்படி நம்மை நோக்கி எதிர்புறத்தில் வந்து கொண்டிருக்கும் வாகனத்தின் வேகத்தை நாம் துல்லியமாகக் கணிக்க வேண்டும். அது நம்மை நெருங்கி வருவதற்குள் முந்திச் சென்று நமது இலக்கை அடைந்து விடலாம் என்று சரியாக தீர்மானித்தால் மட்டுமே நமக்கு முன்னே செல்லும் வாகனத்தைக் முந்திச் செல்ல வேண்டும். ஒரு துளி சந்தேகம் ஏற்பட்டாலும் முந்திச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அவசரமாகச் சென்றடைய வேண்டும் என்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே நமக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல முயல வேண்டும். அதுவும் மிகவும் பாதுகாப்பாக. அவசர வேலை எதுவும் இல்லை எனும் பட்சத்தில் மெதுவாகச் செல்லலாமே. ஒரு விபத்து ஏற்பட்டால் இரண்டு தரப்பினருக்கு இழப்பு என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் வாகனத்தினுள் உட்கார்ந்து வாகனத்தை இயக்கத் தொடங்கும் முன் “இன்று நான் வாகனத்தை பாதுகாப்பாக விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓட்டுவேன்” என்று உங்களுக்குள்ளேயே ஒருமுறை கூறிக் கொள்ளும் வழக்கத்தைக் கடைபிடியுங்கள். இது நிச்சயம் நல்ல பலனைத் தரும்.
சில வாகன ஓட்டிகள் ஏதாவது ஒரு வாகனம் தம்மை வேகமாகக் கடந்து ஓவர்டேக் செய்தால் அதை எப்படியாவது ஓவர்டேக் செய்துவிட வேண்டும் என்ற மனப்பான்மையில் செயல்படுவதையும் நாம் அவ்வப்போது பார்க்க நேரிடுகிறது. இது முற்றிலும் தவறு. நம்மைக் கடந்து செல்பவருக்கு ஏதேனும் அவசர வேலைகள் இருக்கலாம். அதை பெரிதாக எண்ணிக்கொண்டு நானும் அவரைக் கடக்கிறேன் பேர்வழி என்று தேவையில்லாமல் முந்திச் செல்ல முயலுவதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் நமக்காக சில ஜீவன்கள் நம்முடைய வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வாகன ஓட்டிகள் மனதில் கொள்ள வேண்டும். எதிர்பாராமல் விபத்து நடந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் ஒரு விபத்து உருவாக நாம் காரணமாக இருக்கக் கூடாது அல்லவா?
சாலைகளில் தேவையில்லாத ஆபத்தான சந்தர்ப்பங்களில் வாகனங்களை முந்தும் எண்ணத்தைக் கைவிட்டு வாழ்க்கையில் முந்திச் செல்ல முயற்சி செய்யுங்கள்.
யோசியுங்கள் நண்பர்களே. சாலை விதிகளை நூறு சதவிகிதம் கடைபிடியுங்கள். மகிழ்ச்சியாக வீடு திரும்புங்கள். நம் வாழ்வின் அடிப்படை மகிழ்ச்சிதானே. அதை நம்மைத் தவிர வேறு யாரால் உருவாக்க முடியும்?