நாம் வேலை வேலை என்று வேலையின் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கான நேரத்தை நாம் ஒதுக்குவதில்லை. ஒவ்வொரு வாரமும் நமக்காக ஒரு நேரத்தை ஒதுக்கி வாழ்க்கையை நேசிப்போம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வாழவேண்டும். ஒவ்வொன்றையும் நேசிக்க வேண்டும். காலையில் எழுந்து வெளியே வந்ததும் சூரிய ஒளி உடலில் படும்போது ஏற்படுகிற வெப்பத்தை உணரவேண்டும். மெல்லியக் காற்று நம்மீது படும் போது ஏற்படுகிற அந்த இதமான இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததுதான். வெற்றியும் தோல்வியும் நிறைந்ததுதான். அதை நடுநிலையோடு எதிர்கொள்கிற போது சுமைகள் மாறி, சுகமாக தெரியும். அதற்கு நாம் நம்மை எப்போதும் இயங்கி கொண்டு இருப்பவர்களாக மாற்ற வேண்டும். இயங்குதல் என்றால் வழக்கமாய் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு வேலைகள் செய்வது மட்டுமல்ல. அந்த வட் டத்தை கடந்து கிடைக்கும் நேரத்தில் நமக்கு பிடித்த ஒரு வட்டத்தை உருவாக்க வேண்டும்.
உதாரணமாக இலக்கியம் மீது ஆர்வம் என்றால் ஓய்வாக இருக்கும் நேரத்தில் இலக்கிய கூட்டங்களில் பங்கு பெறலாம். திரைப்பட ஆர்வலர் என்றால் திரைப் படங்களை பார்க்கலாம். திரைப் படங்கள் குறித்து கலந்துரையாடுகிற நிகழ்வுகளில் பங்கு பெறலாம். எது உங்களுக்கு பிடிக்கிறதோ எந்த இடத்தில் இருந்தால் உங்களுக்கு ஒரு மாற்றம் கிடைக்கும் என நினைக்கிறீர்களோ அந்த இடத்தோடு, அந்த நபர்களோடு உங்கள் ஓய்வு நேரத்தை செலவிடுங்கள். அது உங்களுக்குள் உள்ளார்ந்த மாற்றத்தை கொடுக்கும்.
ஏதோ ஒன்றை திரும்ப, திரும்ப யோசித்து உங்களையே குழப்பிக் கொள்ளாமல் உங்கள் மனநிலையை சீராக வைக்க உங்கள் சிந்தனைகளை ஒருங்கிணைக்க உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அது உங்களை மாற்றும். ஏதாவது ஒரு செயலை அன்றாடம் செய்வேன் என முடிவு எடுங்கள். அது காலையில் சிறிது நேரம் நடப்ப தாக இருக்கலாம். செடிக்கு தண்ணீர் ஊற்றுவதாக இருக்கலாம். எதுவானாலும் சரி,
அதை தொடர்ந்து செய்யவேண்டும். குடும்பத்திற்காகவும், எதிர்காலத்திற்காகவும் ஓடிக்கொண்டே இருக்கும் பலர் தங்களுக்கென ஓடுவதில்லை. ஒரு நாளின் பத்து நிமிடத்தையாவது உங்களுக்கென செலவிடுங்கள். அமைதியாக அமருங்கள். எல்லாம் கடந்து போகும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் நகர்த்துங்கள். என்ன நேர்ந்தாலும் அதை எதிர் கொள்ளுங்கள். நாம் செய்கிற ஒவ்வொரு வேலை களையும் ரசித்து, கவனத்தோடு, நிகழ்கால உணர்வோடு இணைந்து செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்களுக்கு அர்த்தமானதாகவும், அழகானதாகவும் தெரியும்.