
எதற்கும் ஒரு அளவு உண்டு என்பதில் உடன்படுகிறீர்களா? அன்பு காட்டுவதிலும், பரிவு காட்டுவதிலும், அக்கறை கொள்வதிலும் எதற்கு அளவு காட்டவேண்டும். தாராளமாக கொடுக்கலாமே. அன்பு, பரிவு, அக்கறை எல்லாமே கொடுப்பவரையும், அதனை பெற்றுக் கொள்பவரையும் பொறுத்த விஷயங்கள். தாய் தன் குழந்தையிடம் அளவு கடந்த அன்பு, பரிவைக் காட்டலாம்.
அதே அளவில் பிறரிடம் நம்மால் எதிர்பார்க்க முடியுமா? ஒருவரிடம் பேசும்பொழுது அவர் முகத்தை கவனித்தாலே தெரியும் அவர் சிடுமூஞ்சியா அல்லது நல்ல நட்புடன் பழகுபவரா என்று. சிலர் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். அவர்களுடைய கண்கள் கூட சிரிப்பையும், அன்பையும் எதிர்நோக்கும் வகையில் இருக்கும். அப்படிப்பட்டவர் களிடம் தாராளமாக அன்பைப் பொழியலாம்.
சிலர் தேவைக்காக நம்மை பயன்படுத்திக் கொண்டு பிறகு தூக்கி எறியும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். அப்படித் தேவை முடிந்ததும் தூக்கி எறிவது அவர்களின் இயல்பாக இருந்தாலும் நாம் அப்படி பிறரிடம் பழகக் கூடாது. அன்பையும் பரிவையும் காட்டுவதில் சிக்கனம் பிடிக்கக் கூடாது. சிலரின் சுபாவம் நேற்றைய தேதியை காலண்டரில் இருந்து கிழித்து எறிவதுபோல் மனிதர்களையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிவார்கள்.
இது எதிர் தரப்பினருக்கு எவ்வளவு மனவேதனையை உண்டு பண்ணும் என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் போலும். சாப்பிட்ட இலையை குப்பையில் போடுவது போல் பிறரை உதாசீனப்படுத்துவது மிகவும் தவறு. நாளை அதே நிலை அப்படி உதாசீனப் படுத்துபவருக்கும் நேரிடலாம் என்பதை மறக்கக்கூடாது.
இப்படி உதாசீனப்படுத்துபவர்களைக் கண்டு எந்த ஆதங்கமும் அடைய வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் வாழ்க்கையின் எதார்த்தமான நிலை என்பதை புரிந்து கொண்டு அவர்கள் மனம் புண்படும்படி எந்த செயலையும் செய்யாமல் விலகி விடுவது நல்லது. அவர்களாகவே அதை உணர்ந்து திரும்பி வந்து நம்மிடம் பழகும் பொழுது மறந்தும் அவர்களைப்போல் உதாசீனப்படுத்தாமல் அன்பையும் பரிவையும் காட்ட தயங்க வேண்டாம். இந்த செயல் அவர்களை வெட்கித் தலைகுனிய வைப்பதுடன், அவர்கள் செய்த செயலுக்கு வருத்தமடையவும், மனம் மாறவும் உதவும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். எல்லோரிடமும் அன்பாகவும், யார் மனமும் துன்பப்படாமலும் பேசுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் ஒருவரிடம் அன்பையும் பரிவையும் காட்டத் தொடங்கும் பொழுதே அவரிடம் இருந்தும் அது திரும்ப கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல் இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையில் ஏமாற்றம் மிஞ்சாது. சொல்வது எளிது. ஆனால் நடைமுறையில் அது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும் பழகத்தான் வேண்டும்.
ஒருவர் மீது நாம் செலுத்தும் அன்பையும் பரிவையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அள்ள அள்ள குறையாதது அறிவு மட்டுமல்ல அன்பும்தான். அன்பு செலுத்துவதை குழந்தைகளிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்தும் உள்ளங்கள் அவர்கள். பெரியவர்களுக்கு ஏதாவது ஒரு எதிர்பார்த்து இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் கள்ளம் கபடமற்ற குழந்தைகளோ சிரிக்கும் சிரிப்பில் நம்மை வெகுவாக கவர்ந்து விடுவார்கள். அன்பு செலுத்துவது என்பது வாழ்க்கையில் பலவீனம் அல்ல. அன்பு, அக்கறைை, பரிவு காட்டத் தெரியாதவர்கள்தான் பலவீனமானவர்கள். வாழ்க்கையை, அதன் சந்தோஷத்தை அனுபவிக்க தெரியாதவர்கள்.
என்ன நான் சொல்வது உண்மைதானே?