

ஞாயிற்றுக்கிழமை மாலையே, திங்கட்கிழமை நினைத்து ஒருவித பதற்றம் வருகிறதா? கவலைப்படாதீங்க, இந்த மனநிலை உங்களுக்கு மட்டும் இல்லை. இன்றைய சூழலில் வேலைக்குப் போகும் 90 சதவீத பேருக்கு இந்த எண்ணம் இருக்கிறது. இதை நாம் சாதாரணமாக "வேலை செய்யப் பிடிக்காத சோம்பேறித்தனம்" என்று நினைத்து, நம்மை நாமே திட்டிக் கொள்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. உங்களுக்கு வேலை செய்யப் பிடிக்காமல் போவதற்குப் பின்னால், நீங்கள் கவனிக்காத சில முக்கிய உளவியல் மற்றும் உடல் ரீதியான காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.
சார்ஜ் தீர்ந்துபோன பேட்டரி (Burnout):
நம்ம ஊர்ல ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. 6 மணிக்கு வேலை நேரம் முடிந்தாலும், 8 மணி வரைக்கும் உட்கார்ந்து வேலை பார்த்தாதான் "நல்ல ஊழியர்"னு ஒரு முத்திரை குத்துவாங்க. விடுமுறை நாளில் கூட லேப்டாப்பைத் திறப்பது, சாப்பிடும்போது கூட போன் பேசுவதுன்னு ஓய்வே இல்லாம ஓடினால் என்ன ஆகும்? இன்ஜின் சீஸ் ஆகிடும். அதுபோலத்தான், உங்கள் உடலும் மனசும் மொத்தமா சோர்ந்து போவதைத்தான் 'Burnout'னு சொல்றாங்க. இது சோம்பேறித்தனம் இல்ல, உங்க உடம்பு கேட்குற ஓய்வு.
வளர்ச்சி இல்லாத வெறுமை!
வருஷக் கணக்கா ஒரே சம்பளம், ஒரே சீட், ஒரே வேலை... யாருக்குத்தான் போர் அடிக்காது? ஒரு வேலையில் புதுசா கத்துக்க எதுவுமே இல்லாம, செக்கு மாடு மாதிரி சுத்திக்கிட்டே இருந்தா, நம்ம மூளை மழுங்கிப் போயிடும். "வேற வழி இல்லை, இஎம்ஐ கட்டணும்"ங்குற ஒரே காரணத்துக்காகப் பல பேர் பிடிக்காத வேலையைச் செஞ்சுட்டு இருக்காங்க. மனசுக்குப் பிடிக்காத வேலையைச் செய்யும்போது, அதுல ஈடுபாடு வராது, வெறுப்புதான் வரும்.
நரகமாகும் அலுவலகச் சூழல்!
உங்களுக்குத் திறமை இருக்கலாம், ஆர்வமும் இருக்கலாம். ஆனா, வேலை செய்யற இடத்துல நிம்மதி இல்லைன்னா என்ன பண்ணுவீங்க? சின்ன தப்புக்குக் கூட கத்துற பாஸ், குழி பறிக்கிற சக ஊழியர்கள், பாலிடிக்ஸ்னு சுத்தி இருக்கிறவங்க விஷமா இருந்தா, திறமையானவன் கூட சோர்ந்து போயிடுவான். தினமும் ஒரு போர்க்களத்துக்குப் போற மாதிரி உணர்வு இருந்தா, வேலை பார்க்க யாருக்குப் பிடிக்கும்?
வேலைக்காக வாழ்க்கையா?
வேலை செஞ்சாத்தான் சாப்பிட முடியும், மறுக்கல. ஆனா, வேலைக்காகவே வாழ்றது தப்பு. நம்ம வாழ்க்கையில வேலைங்கிறது ஒரு பகுதிதான். ஆனா, காலையில லாக்-இன் பண்ணா, ராத்திரி தூங்கப் போற வரைக்கும் வேலை வேலைனு இருந்தா, தனிப்பட்ட வாழ்க்கை என்ன ஆகுறது? குடும்பத்தோட செலவழிக்க நேரமே இல்லைன்னா, அந்த வேலை மேல கோபம் வரத்தான் செய்யும்.
மேலே சொன்ன விஷயங்கள்ல எது உங்களுக்குப் பொருந்துதுன்னு யோசிச்சுப் பாருங்க. ஒருவேளை உடல் சோர்வா இருந்தா, ஒரு சின்ன பிரேக் எடுத்துட்டு டூர் போயிட்டு வாங்க. இல்ல, அந்த இடமே சரியில்லைன்னா, தைரியமா வேற வேலையைத் தேடுங்க. மன நிம்மதியை விடப் பெரிய சம்பளம் எதுவும் இல்லை. வேலையை நேசிங்க, ஆனா அதுக்காக உங்க வாழ்க்கையைத் தொலைச்சிடாதீங்க.