
தீக்குச்சி ஒரு வீட்டை எரிப்பதற்கு முன்பு தன்னைத்தானே எரித்துக்கொள்ளும். அதைப்போல உங்கள் கோபம் பிறரை எரிப்பதற்கு முன்பு, அதாவது பிறர் மனத்தையும், உடலையும் பாதிப்பதற்கு முன்பு அது உங்கள் மனதையும், உடலையும் முதலில் பாதிக்கிறது. அப்பொழுதுதான் அந்த முழுமையான கோபத்தை உங்களால் வெளியே அனுப்ப முடியும். ஆகவே முன்கோபமோ அல்லது பின்கோபமோ அது உங்களைத்தான் முதலில் பாதிக்கிறது இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
புத்தர் ஒரு சமயம் தன் சீடர்களோடு, ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குச் சென்றார். வழியில் ஒருவன் அவரை நெருங்கி அவர் முகத்தில் காரி உமிழ்த்தான். உடனே எல்லா சீடர்களும் கொதித்து விட்டார்கள். புத்தர் உடனே அவர்களை கையமர்த்தி, அந்தப் பெரிய மனிதரிடம், ஒரு பிரசங்கம் பண்ண அவசரமாக போய்க் கொண்டு இருக்கிறேன். திரும்பி இதே வழியில்தான் வருவேன். உன்னிடம் மீதி மிச்சம் கோபம் என்மேல் இருந்தால், அதை அப்பொழுது தீர்த்துக்கொள் என்றார்.
பிறகு சிறிது தூரம் சென்று தன் சீடர்களிடம் கோபத்தை வெளிப்படுத்துவதில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அடிக்கலாம், திட்டலாம். மிரட்டலாம். ஆனால் இந்தப் மனிதனுக்கு இந்த வழிதான் தெரிந்திருக்கிறது. என்ன செய்வது?
பாவம் எப்படியோ அவன் என்மேல் உள்ள கோபத்தால் கஷ்டப்படக்கூடாது அதுதான் எனக்கு முக்கியம் என்றார்.
இந்த மனநிலை நமக்கும் வந்தால், நாம் எல்லோரும் ஞானிகள்தான். சந்தேகமே இல்லை ஆனால், அது சாதாரணமாக வராது. அதற்காக நீங்கள் சுவலைப்படவேண்டாம்.
மன உறுதியோடு கோபம் வராமல் விழிப்புணர்வாக எதிலும் செயல்படுங்கள். அப்படியும் அது உங்களை அறியாமல் வந்துவிட்டால் அதை அடக்காமல், தனியே உட்கார்ந்து வெளியே தள்ளுங்கள்.
ஒரு மனிதனிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருக்கலாம். உதாரணமாக பெருந்தன்மை, உதவி செய்யும் மனப்பான்மை, கருணை உள்ளம் இப்படி பல. ஆனால் கோபம் அதாவது முன்கோபம் இவைகள் அனைத்தையும் போக்கிவிடும்.
ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற கெட்ட குணங்களை உங்கள் உள்ளத்தில் அடக்கி வைக்காதீர்கள். அதை அடக்க அடக்க அது உங்கள் மனதில் இருந்து ஆழ்மனதிற்குள் சென்று உங்கள் உடல் நிலையை பாதிக்கும். எப்படியாவது கத்தி கதறி அழுது தலகாணியை போட்டு குத்தியாவது வெளியேற்றி விடுங்கள்.
உங்கள் இலக்கை அடைய ஒரு மாபெரும் தடங்கலாக இருப்பது கோபம்தான் என்பதை நீங்கள் அனுபவத்தின் மூலம் புரித்து கொள்வீர்கள்.