மஞ்சள் நிற நபர் யாராவது உங்களுக்கு நண்பராக இருக்கிறார்களா? அல்லது நீங்கள் யாருக்காவது மஞ்சள் நிற நபராக இருந்திருக்கிறீர்களா?
மஞ்சள் நிற நபரா...? ஆச்சிரியமாக இருக்கு இல்லையா...
மஞ்சள் நிறம் பொதுவாக மகிழ்ச்சி, புத்துணர்ச்சி, நம்பிக்கை, அறிவு போன்ற நல்ல உணர்வுகளைத் தரும் நிறம். மேலும், மஞ்சள் நிறம் சூரிய ஒளியுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது.
மஞ்சள் நிறம் புத்துணர்ச்சியையும் புதுமையையும் அளிக்கிறது.
அறிவு மற்றும் ஞானத்துடன் மஞ்சள் நிறம் தொடர்புடையது, மேலும் இது ஒருவரின் சிந்தனையைத் தூண்டுகிறது.
மஞ்சள் நிறம் சூரிய ஒளியின் அடையாளமாக இருப்பதால், அது நேர்மறையான ஆற்றலை வழங்குகிறது.
மஞ்சள் நிறம் மங்கலகரமானது. ஆகவே தான் நாம் எந்த பூஜையை செய்தாலும், முதலில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து அவருக்கு பூஜை செய்த பின்னரே நாம் செய்யப் போகும் பூஜையை ஆரம்பிப்போம், இல்லையா? அந்த மஞ்சள் நிறப் பிள்ளையாரை வைத்தால் தான் ஒரு பிரகாசமே நமக்கு கிடைக்கிறது.
திருமணங்களில் கூட சில பேர் கல்யாண பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் மஞ்சள் நிறத்தில் தான் உடை உடுத்துவார்கள்.
ஆகவே மஞ்சள் என்பது அரவணைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள், அறிவு, ஞானம் மற்றும் உற்சாகத்தின் நிறம் ஆகும். இப்போது, ஒரு நபருக்குள் இத்தனை உணர்ச்சிகள் மற்றும் பண்புகள் பொதிருந்தால் கற்பனை செய்து பாருங்கள். எப்படி இருக்கும். அப்படிப்பட்ட நபரைத் தான் நாம் 'மஞ்சள் நபர்' என்று அழைக்கிறோம்.
இப்படிப் பட்ட குணம் நிறைந்துள்ள ஒருவர் உங்களோடு துணையாக ஆறுதலாக இருந்தால் எப்படி இருக்கும். யோசித்து பாருங்கள்.......
உங்கள் வாழ்க்கையில் யாராவது ஒருவர் அவரின் அன்பான, மகிழ்ச்சியான, நம்பிக்கையான உண்மையான நட்போடு இருப்பதன் மூலம் உங்கள் உற்சாகத்தை உயர்த்தி இருந்தாலும் நீங்கள் அடித்து கம்பீரமாக நம்பிக்கையுடன் சொல்லக்கூடிய ஒருவராக அவர் இருந்தாலும் அவர் தான் உங்களின் வாழ்க்கையில் உங்களோடு இருக்கும் 'மஞ்சள் நிற நபர்' ஆவார்.
இப்படிபட்டவர்கள் நம் அருகில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே ஒரு சந்தோஷம், புத்துணர்ச்சி, தைரியம், எந்த பிரச்சினை இருந்தாலும் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை தானாகவே வரும். இவர்களைப் பார்த்தாலே மனதில் 1000 வாட் பல்பு எரிவது போல் ஒரு பிரகாசம் வரும். இவர்களின் நேர்மறை சிந்தனையாலும் ஞானத்தாலும் பெரிய பெரிய பிரச்சினைகளில் இருந்தும் சுலபமாக நம்மால் வெளி வர முடியும். 10 பேர் நம்முடன் இருந்தாலும் இந்த நபர் மட்டும் நம் கண்களுக்கு தனியாக சிறப்பாக தெரிவார். இப்படிப்பட்டவர்கள் நம் கூடவே இருந்தால் அது ஒரு பெரிய வரப் பிரசாதம்.
இத்தகைய சிறப்பு அம்சங்கள் உங்களிடம் இருந்தால் நீங்களும் ‘மஞ்சள் நிற நபர்’ தான். இத்தகைய குணம் இருந்தால் நீங்களும் அடுத்தவர்களை மகிழ்விக்கலாம்.