
பாலிவுட், கோலிவுட்டை சேர்ந்த சினிமா பிரபலங்கள் சமீபகாலமாக தங்கள் பணத்தை பல்வேறு துறைகளில் முதலீடு செய்து சம்பாதித்து வருகின்றனர். நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் சொந்த தொழிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். பல பிரபலங்கள் பணத்தை ஷேர் மார்கெட், துணி கடை, ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்து வருகின்றனர். தலைநகர் டெல்லி மற்றும் மும்பை உட்பட பல இடங்களில் ஆடம்பர ஹோட்டல்களை வைத்திருக்கும் பல பாலிவுட் பிரபலங்கள் உள்ளனர்.
அந்த வகையில் நடிகை மலைக்கா அரோரா மும்பையில் ஜூஹு பகுதியில் ஸ்கார்லெட் ஹவுஸ் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். நடிகர் ஷாருக்கான் மனைவி கௌரி கான், நடிகை ரகுல் ப்ரீத் சிங், சன்னி லியோன், ஈஷா குப்தா, சுஷ்மிதா சென், ஷில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா, கங்கனா ரனாவத், நடிகர் பாபி தியோல், அர்ஜுன் ராம்பால் போன்ற பல பிரபலங்கள் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் நடத்தி வரும் ‘டோரி’ உணவகத்தில் போலி பன்னீர் பரிமாறப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான், ஒரு பிரபலமான உள்துறை வடிவமைப்பாளரும் ஆவார், இவர் பல பாலிவுட் நடிகர்களின் வீடுகளை வடிவமைத்துள்ளார். அதுமட்டுமின்றி கௌரி கான், பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் அவரது சூப்பர் ஸ்டார் கணவரின் பெரும்பாலான படங்களுக்கு நிதியுதவி செய்கிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு 'டோரி'யின் திறப்பு விழா மூலம் சமையல் துறையில் அறிமுகமானார். மும்பையின் உயர்தர பாந்த்ராவில் அமைந்துள்ள இந்த உணவகம் ஜப்பானிய உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்றது. இந்த உணவகத்தில் சுஷி, பாலாடை, ராமன், சிக்னேச்சர் காக்டெய்ல் மற்றும் சுரோஸ் (churros)போன்ற பிரபலமான உணவுகள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி இந்த உணவகத்தின் உட்புறத்தை கௌரியே வடிவமைத்துள்ளார்.
உயர்தர உணவகங்களில் உணவின் தரம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள யூடியூப்பர் சர்தக் சச்சிதேவ் ஒவ்வொரு ரெஸ்டாரண்ட்டிற்கும் சென்று சாப்பிட்டு சோதனை செய்து அதை யூடியூப்பில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் கௌரி கானின் உயர்தர ‘டோரி’ உணவகத்தில் போலி பன்னீர் பரிமாறப்பட்டதாக யூடியூபர் சர்தாக் சச்தேவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் ‘இந்த உணவகத்தில் பரிமாறப்படும் பன்னீரில் ஸ்டார்ச் உள்ளது என்றும் இது கலப்படம் கலந்த போலியான பன்னீர் என்று கூறிய அவர், அதனை அயோடின் டின்ஜர் ஆய்வுக்கு உட்படுத்தி அதன் மூலம் அது போலி பன்னீர் என உறுதி செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இதன் தொடர்ச்சியாக அந்த யூடியூபர், மும்பையின் மிகவும் பிரபலமான விராட் கோலியின் ஒன்8 கம்யூன், ஷில்பா ஷெட்டியின் பாஸ்டியன் மற்றும் பாபி தியோலின் சம்ப்ளேஸ் எல்ஸ் உள்ளிட்ட மூன்று இடங்களிலும் பரிமாறப்படும் பன்னீர் சோதனைக்கு எதிர்வினையாற்றவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து ‘டோரி’ உணவகம் விளக்கம் அளித்துள்ளது.
யூடியூபரின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ‘டோரி’ உணவகம், “அயோடின் சோதனை, பன்னீரின் நம்பகத்தன்மையை அல்ல, ஸ்டார்ச் இருப்பதையே பிரதிபலிக்கிறது. உணவில் சோயா சார்ந்த பொருட்கள் இருப்பதால், இந்த முடிவு வந்திருக்கலாம். எங்கள் பன்னீரின் தூய்மை மற்றும் டோரியில் உள்ள எங்கள் பொருட்களின் நேர்மையை நாங்கள் ஆதரிக்கிறோம்," என்று உணவகம் யூடியூபரின் இன்ஸ்டாகிராம் பதிவில் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், குழு வெளியிட்ட அறிக்கையில், "டோரியில் 'போலி பன்னீர்' பரிமாறப்படும் செய்தியில் நாங்கள் முற்றிலும் ஆச்சரியப்படுகிறோம். விளைபொருட்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது முதல், தட்டில் பரிமாறப்படும் உணவு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் தர சோதனைகள் உள்ளன. நாங்கள் வழங்கும் உணவில் சிறந்து விளங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாகவே உள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.