நீங்க கோடீஸ்வரர் ஆகணுமா? இந்த குணாதிசயம் உங்ககிட்ட இருக்கா? இல்லனா போச்சு!

millionaire
Millionaire
Published on

'வாய்ப்பு அரிதாகவே இரண்டாவது முறை தட்டும்' என்பது பழமொழி. 

வாய்ப்புகள் அரிதாகவே இரண்டாவது முறை வீட்டின் கதவைத் தட்டுகின்றன. எனவே முதல் முறையே அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது முறை கிடைக்கும் என சொல்ல முடியாது. ஒரு வேளை கிடைத்தால் கூட முதலாவது கிடைத்த வாய்ப்பைப் போலவே இருக்காது. அது சற்று வித்தியாசமான வாய்ப்பு தான். இதனைத் தான் நமது முன்னோர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள், அதாவது வாய்ப்பு கிடைக்கும்போதே பயன்படுத்திக் கொள் என்று கூறினார்கள். எனவே, வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொண்டு நாம் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும். 

அமெரிக்காவில் கோடீஸ்வரர்களைப் பற்றி சில தசாப்தங்கள் ஆராய்ச்சி நடந்து "த மில்லியனர் நெக்ஸ்ட் டோர்" என்ற ஒரு புத்தகம் வெளியானது. அதில்  வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது என்பது கோடீஸ்வரர்களின் குணாதிசயங்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொண்டதால்தான் அவர்கள் கோடீஸ்வரர்களாக ஆக முடிந்தது. மேலும் கோடீஸ்வரர்களாகத் தொடர முடிகிறது. 

இப்போது வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி ஒரு கதையைப் பார்ப்போம்.

ஒரு மனிதனுக்கு ஆயுள் முடிந்து விட்டது. அவன் பல்வேறு தீவினைகளையும் ஒரே ஒரு நல்வினையையும் செய்திருந்தான். அவன் செய்த தீவினைகளின் காரணமாக அவன் நெடுங்காலம் நரகத்தில் கழிக்க வேண்டும். அவன் செய்த நல்வினையின் காரணமாக அவனுக்கு ஒரே ஒரு நாளைக்கு மட்டும் இந்திரலோகத்தின் அரசனான இந்திர பதவி கிடைத்தது. 

அவனுக்கு முன்பு எமதூதர்களும் தேவ தூதர்களும் வந்து நின்றனர். நீ முதலில் நரகத்திற்கு வந்துவிட்டு பின் சொர்க்கம் செல்வாயா அல்லது சொர்க்கம் சென்று விட்டு நரகம் வருகிறாயா என்று வினவினர். அவன் தான் ஒரு நாள் சொர்க்கத்தில் இருந்து விட்டு பின்பு நரகம் வருவதாகக் கூறினான். தனக்குக் கிடைத்த ஒரு நாள் இந்திர பதவியை, பொன்னான வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான்.

பதவியில அமர்ந்த அடுத்த கணமே மாபெரும் அளவில் தான தர்மங்களைச் செய்ய தொடங்கினான். பல்வேறு தங்கக்கட்டிகள், வைர, வைடூரியங்களைத் தானமாக அள்ளி வழங்கினான். இவன் தனக்குப் போட்டியாக இந்திர பதவிக்கு வந்து விடுவானோ என்று அப்போதைய பதவியில் இருந்த இந்திரன் அச்சமடையும் அளவிற்கு இவன் பெருமளவில் தான தர்மங்கள் செய்தான். 

அவனது ஒரு நாள் இந்திர பதவி முடிவடைந்தது. அவன் எமதூதர்களை எதிர்நோக்கி காத்திருந்தான். நரகத்திற்குச் செல்லத் தயாரானான். ஆனால், எமதூதர்கள் வரவில்லை. அதற்கு மாறாக மறுபடியும் தேவதூதர்களே வந்தனர். அவன் தனக்குக் கிடைத்த அந்த ஒரு நாளில் அதிக அளவில் தான தர்மங்கள் செய்ததால் பெரிய அளவில் நல்வினைகளை அவன் தனக்கு உருவாக்கிக் கொண்டு விட்டான். எனவே அவன் இனி இந்திரலோகத்திலேயே இருக்கலாம். எமலோகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லையென கூறினர். அவனும் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். தனக்கு கிடைத்த ஒரு நாள் இந்திர பதவி வாய்ப்பினைச் சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது எதிர்காலத்தை வளமாக்கி கொண்டான் அந்த மனிதன்.

இதையும் படியுங்கள்:
நமது வாழ்க்கை நேரத்தால் ஆனது எப்படி?
millionaire

நமக்கு கிடைத்த இந்த உலக வாழ்க்கையும் அந்த இந்திர பதவியைப் போலத்தான். சொர்க்கமும் நரகமும் இந்த உலகத்திலேயே உள்ளன. இந்த வாழ்க்கையில் நாம் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தான், வாழ்க்கையை நாம் சொர்க்கமாக்கிக் கொள்கிறோமா அல்லது நரகமாக்கிக் கொள்கிறோமா என்பது உள்ளது. நமது கண் முன்னேயும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி நமது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோம்.‌

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com