
ஒருவருடைய புத்திசாலித்தனம் பல்வேறு வடிவங்களில் வெளிப்படும். புத்திசாலியான நபர்கள் முக்கியமான சில குணாதிசயங்களை கொண்டிருக்கிறார்கள். தங்களை மெருகேற்றிக் கொள்ள அவர்கள் கடைப்பிடிக்கும் ஒன்பது விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. ஆர்வம்;
புத்திசாலிகள் எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். புதிய யோசனைகளை ஆராயவும் கேள்விகளை கேட்கவும் ஒரு வலுவான விருப்பம் இருக்கும். பல்வேறு பாடங்கள், கலாச்சாரங்கள் மற்றும் அனுபவங்களில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவற்றைக் கற்றுக்கொள்வதன் மூலம் தங்களுடைய அறிவையும் புத்திசாலித்தனத்தையும் மெருகேற்றிக் கொண்டே இருப்பார்கள்.
2. பகுப்பாய்வு திறன்கள்;
தாங்கள் கேட்ட, பார்த்த விஷயங்களை, தகவல்களை மற்றும் சூழ்நிலைகளை தர்க்க ரீதியாக பகுப்பாய்வு செய்யும் திறன் உள்ளவர்கள். அவர்களுக்கு சிக்கல்களை கண்டறியும் திறமை இருக்கும். மனம் கலங்காமல் அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்குவதில் வல்லவர்கள்.
3. திறந்த மனது;
அவர்கள் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மையோடு இருக்க மாட்டார்கள். வெவ்வேறு கண்ணோட்டங்களையும் பிறருடைய யோசனை களையும் கருத்தில் கொள்வார்கள். அதே சமயத்தில் அவற்றில் உள்ள உண்மைத்தன்மையை கண்டறிந்து அதன் பின்பு தெளிவான முடிவு எடுப்பார்கள். புதிய சான்றுகள் அல்லது வாதத்தின் அடிப்படையில் எண்ணங்கள் அல்லது நம்பிக்கைகளை மாற்றி அமைக்கும் திறன் கொண்டவர்கள்.
4. உணர்ச்சி நுண்ணறிவு; (Emotional Intelligence)
ஒருவரின் சொந்த உணர்ச்சிகள், பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்ளும் திறன் உள்ளவர்கள். பிறருடைய கஷ்டங்களை, நிலைமையை அவர்களுடைய இடத்தில் இருந்து பார்த்து அவர்கள் மேல் பச்சாதாபம் கொள்ளுவார்கள். தனிப்பட்ட உறவுகளை நன்றாக கையாளுவார்கள்.
5. தவறுகளை ஒத்துக்கொள்ளும் திறன்;
புத்திசாலிகள் என்றால் வெறுமனே அறிவுத் தேடலில் மட்டும் இறங்க மாட்டார்கள். அத்துடன் தவறு செய்தால் அவற்றை ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும். அவற்றைத் திருத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். வாழ்நாள் முழுக்க தனது அனுபவத்திலிருந்தும் பிறருடைய அனுபவங்களை கேட்டு அறிந்தும் கற்றுக் கொண்டே இருப்பார்கள்.
6. அனுசரிப்பு;
மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒருவரின் எண்ணங்களையும் நடத்தைகளையும் சரி செய்யும் திறன் கொண்டவர்கள். புதிய சூழ்நிலைகளில் தங்களைப் பொருத்திக் கொண்டு அதற்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வார்கள். புதிய ஆட்களையும் நன்றாகக் கையாளத் தெரிந்தவர்கள்.
7. தோல்வியிலிருந்து பாடம்;
அடையக்கூடிய இலக்குகளை அமைக்கும் திறன் பெற்றவர்கள். அவற்றை அடையத் தேவையான எதிர்காலத் திட்டங்களை வைத்திருப்பார்கள். அவற்றுக்கு ஏற்ப செயல்படுவார்கள் முறையான அணுகுமுறைகள் மூலம் அவற்றை நிதானமான போக்கில் அடைவார்கள். தங்கள் முயற்சியில் தோல்வி ஏற்பட்டால் அதற்காக மனம் கலங்காமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பின்னடைவுகளில் இருந்து மீண்டு வந்துவிடுவார்கள்.
8. சுய உந்துதல்;
இவர்களுக்கு வெளிப்புற ஊக்கங்கள் தேவையில்லை. தன்னைத்தானே செல்ஃப் மோட்டிவேஷன் செய்து கொண்டு தங்களுடைய வேலைகளில் ஆர்வமாக இறங்கி, திட்டங்களை திறமையாக செயலாற்றுவார்கள். பணிகளிலும் இலக்குகளிலும் கவனம் செலுத்தும் திறனும் விடாமுயற்சியான குணமும் இவர்களுக்கு வெற்றியை தேடித்தரும்.
9. சமூகப் பிரச்னைகளில் பேரார்வம்
சுயநலவாதியாக இல்லாமல் சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமும் இருக்கும். தன்னுடைய அறிவையும் செல்வத்தையும் பிறருக்கு பயன்படுத்துவதில் மகிழ்வார்கள்.