
‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்பது பழமொழி. சில காரியங்களை அவசரப்பட்டு உடனே செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகும். பொறுமையாக அதை கையாளும்போது நல்ல பலன் கிடைக்கும். பொறுமையாக இருப்பது பலவீனமல்ல அதுவே நம்முடைய மிகப்பெரிய பலம் ஆகும். இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒருமுறை தாமஸ் ஆல்வா எடிசன் வெஸ்டர்ன் யூனியன் கம்பெனிக்கு மிஷின் ஒன்றை தயாரித்துக் கொடுக்கிறார். அதற்கு என்ன விலை நிர்ணயம் செய்யலாம்? என்று யோசிக்கிறார். அவருக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. எடிசனும் அவரது மனைவியும் இதைப்பற்றி பேசுகிறார்கள். எடிசனின் மனைவி 20,000 டாலர்கள் கேட்க சொல்கிறார். இந்த தொகை சற்று பெரிய தொகையாக இருக்கிறதே? வாங்காமல் போய்விட்டால் என்ன செய்வது? என்று யோசிக்கிறார்.
அப்போது பணம் எடுத்துக்கொண்டு வெஸ்டர்ன் யூனியன் கம்பனி அதிகாரி ஒருவர் வந்திருந்தார். அவர் எடிசனிடம் மிஷினுக்கான பணத்தை கேட்கும்போது, எடிசன் ஒரு சில நிமிடம் மௌனம் காக்கிறார். எப்படி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருகிறார். இதைப் பார்த்து பொருமை இழந்த அதிகாரி, ‘எடிசன் சார்! இதோ உங்கள் மிஷினுக்கான முதல் தவனைத் தொகை 100,000 டாலர் என்று சொல்லி காசோலையைக் கொடுக்கிறார். மீதி எவ்வளவு தொகை என்று சொல்லுங்கள் காசோலையை அனுப்பி வைக்கிறேன்’ என்று சொல்லி மிஷினை எடுத்துச் செல்கிறார்.
அவசரம் காட்டாமல் பொறுமையாக இருந்த எடிசனுக்கு நான்கு மடங்கு லாபம் கிடைத்தது. அவசரப்பட்ட அந்த கம்பெனி ஆபிஸருக்கு நான்கு மடங்கு நஷ்டம் கம்பெனிக்கு ஏற்பட்டது.
இந்தக் கதையில் சொன்னதுப்போல, அவசரம் நமக்கு சிப்பிகளை தரலாம். ஆனால், பொறுமையே நமக்கு முத்துக்களை கொடுக்கும். ஒருவருடைய திறமையை வெற்றிகளாக உருமாற்றி தருவது அவர்களது பொறுமையேயாகும். நிதானமாக செயல்படுவது நம்மை நல்ல முடிவுகள் எடுப்பதற்கு உதவுகிறது. எனவே, எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும். முயற்சித்துப் பாருங்கள்.