
நம் கண் முன்னே கஷ்டப்படுபவர்களை பார்க்கும்போது நம்மால் முடிந்த ஏதேனும் உதவியை கட்டாயம் செய்துவிட வேண்டியது அவசியமாகும். உதவி என்பது பலனை எதிர்ப்பார்த்து செய்வதில்லை என்றாலும், நிச்சயம் நாம் செய்த நல்ல காரியம் நமக்கு தேவைப்படும் சமயம் திரும்ப கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒருநாள் வரிசையாக போய்க் கொண்டிருந்த எறும்புகளின் காதுகளில் ஒரு சோகக்குரல் கேட்டது. அந்த எறும்புகள் நின்று திரும்பி பார்த்தபோது ஒரு புழு வெயிலில் கிடந்து சூடு தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு சின்ன எறும்பு, ‘நண்பர்களே! இந்த புழு பாவம்.
இதை நிழலில் விட்டுவிட்டு செல்லலாம்’ என்று கூறியது. இதைக்கேட்ட மற்ற எறும்புகள், ‘இது நமக்கு வேண்டாத வேலை’ என்று கூறியது. அதைக்கேட்ட அந்த சின்ன எறும்பு, ‘இல்லை. ஒரு உயிர் துன்பப்படும்போது அதை அப்படியே கண்டும் காணாமல் விட்டுவிட்டு செல்வது தவறு’ என்று கூறியது. எனவே, மற்ற எறும்புகளும் சின்ன எறும்பின் வேண்டுகோளுக்கு இணங்கி, அந்த புழுவை ஒன்றாக இழுத்துச் சென்று நிழலில் விட்டுவிட்டு சென்று விட்டன.
நெடுநாள் கழித்து மழைக்காலம் வந்துவிட்டது. பெருமழை பெய்கிறது. எறும்புகளின் புற்றுக்குள் நிறைய தண்ணீர் போய்விட்டது. எறும்புகள், ‘எப்போது நீரில் மிதக்க நேரிடுமோ?’ என்று எண்ணி பயந்து போய் இருக்க... அப்போது ஒரு பட்டாம்பூச்சி வந்து, 'எறும்புகளே! என் மீது ஏறிக் கொள்ளுங்கள். உங்களை மேடான இடத்தில் விட்டுவிடுகிறேன்’ என்று சொன்னதாம்.
இதைப் பார்த்த எறும்புகள், ‘நீ யார்? எங்களுக்கு ஏன் உதவுகிறாய்?’ என்று கேட்டதாம். அதற்கு பட்டாம்பூச்சி சொன்னதாம், ‘ஒருநாள் வெயிலில் கிடந்த புழுவை நீங்கள் காப்பாற்றினீர்கள் அல்லவா? அந்த புழுதான் பருவ மாறுதலுக்கு பிறகு வளர்ந்து பட்டாம்பூச்சியாக ஆகிவிட்டேன். என்னை துன்பத்தில் இருந்து காப்பாற்றிய உங்களுக்கு இப்போது உதவ வந்திருக்கிறேன்' என்று கூறியதாம்.
இந்தக் கதையில் சொன்னதுபோல, இன்றைக்கு நாம் செய்யும் நல்ல காரியம் என்றைக்காவது ஒருநாள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு திரும்ப கிடைக்கும். எனவே, நல்லதே நினையுங்கள். நல்லதே செய்யுங்கள்.