எலான் மஸ்க் சொல்லும் வெற்றிக்கான ஆறு வரையறைகள் தெரியுமா?

Succes Story
elon musk
Published on

புகழ்பெற்ற அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர். மின்சார வாகனங்களை மறுவடிவமைப்பு செய்வதில் தொடங்கி தனியார் விண்வெளிப் பயணத்திற்கு முன்னோடியாக இருப்பதுவரை மஸ்கின் சாதனைகள் நிறைய உள்ளது. வெற்றிபெற நினைக்கும் நபர்கள் ஆறு விஷயங்களைப் பற்றி கவலைப்படக்கூடாது என்கிறார். அவை யாவை என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்

1. விமர்சனங்களை பற்றி அதிக அக்கறை கொள்வது;

எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்தாலும் பாராட்டுபவர்கள் பலர் இருந்தாலும் அதைக் குறைகண்டுபிடித்து விமர்சிப்பவர்களும் உண்டு. எதிர்மறையான கருத்துக்களை, விமர்சனங்களை கண்டு கொள்ளக் கூடாது. ஏனென்றால் ஒருவருடைய புதுமை மற்றும் படைப்பாற்றலை அது தடுத்துவிடும். உண்மையான வளர்ச்சி என்பது நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்வதும், எதிர்மறை விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதும்தான் என்கிறார் மஸ்க்.

2. முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடுதல்;

சிலர் சிறிய விஷயங்களுக்கு முடிவெடுப்பதற்குக்கூட தயங்கித் தள்ளிப் போடுவார்கள். எலான் மஸ்க் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தள்ளிப்போடும் பழக்கம் முடிவுகளை மட்டும் தாமதப்படுத்தாது. ஒருவருடைய உந்துதலை, மோட்டிவேஷனையே கூட சிதைத்து விடும்.

அந்த செயலை செய்யும் ஆசையும் விருப்பமும் போன பின்பு அதைப் பற்றி சிந்தித்து பயனில்லை. எனவே எப்போதும் விரைவான வெற்றிகரமாக முடிவெடுப்பது அவசியம் என்கிறார்.

இதையும் படியுங்கள்:
நல்லவராக இருப்பது நல்லதுதான்; நல்லது கெட்டது தெரியாமல் இருப்பது ஆபத்தானது!
Succes Story

3. கடந்தகால தோல்விகளை பற்றி சிந்திப்பது;

கடந்த காலத்தில் கிடைத்த தோல்விகளை எத்தனை முறை திரும்பத் திரும்ப சிந்தித்துப் பார்த்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை. ஒருபோதும் கடந்த காலத் தோல்வியிலும் வருத்தத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். தோல்வி என்பது நிரந்தரத் தடையல்ல.

அது கற்றலுக்கான கருவி. தன்னுடைய தொழில் முனைவோர் பயணத்தில் பல பின்னடைவுகளை சந்தித்தாலும் தோல்வியைப் பற்றி பெரிதாக எண்ணாமல் முயற்சித்ததால் வெற்றி பெற்ற தொழிலதிபராக திகழ்கிறார் எலான் மஸ்க்

4. பல வேலைகளை செய்தல்;

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது திறமையாக பணியாற்றும் ஆற்றலை குறைத்துவிடும் என்கிறார் மஸ்க். அவர் பல உயர் நிறுவனங்களை நிர்வகித்தாலும் ஒரு நேரத்தில் ஒரு பணியில் மட்டுமே கவனம் செலுத்தி உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்கிறார். இதையே அவர் பிறருக்கும் வலியுறுத்துகிறார். அதிகப்படியான மல்டி டாஸ்கிங் கவனத்தை திசை திருப்பி செயல் திறனைக் குறைக்கிறது. மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் உற்பத்தித்திறன் மற்றும் அறிவாற்றல் திறனைப் பாதிக்கிறது என்கிறார்.

5. அசௌகரியத்தை தவிர்ப்பது;

சிலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் ஆபத்தானதாக அல்லது சௌகரியக் குறைவாக இருந்தால் அதைத் தவிர்த்து விடுவார்கள். ஆனால் உண்மையான வளர்ச்சி என்பது கம்போர்ட் சோனில் இருப்பவர்களுக்கு கிடைக்காது என்கிறார் மஸ்க். வெற்றிகரமான மின்சார கார் பிராண்டை உருவாக்குவது முதல் விண்வெளியில் ராக்கெட்டுகளை தனது தனிப்பட்ட முறையில் ஏவுவதுவரை அவருக்கு சவாலான பணியாகவே இருந்தது. ஆனாலும் சங்கடங்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது திறமைகளையும் மீள்தன்மையையும் விரிவுபடுத்துகிறது என்கிறார்.

6. ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுதல்;

சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவழிப்பது குறித்து எச்சரிக்கை செய்கிறார். இலக்கின்றி ஸ்க்ரோலிங் செய்து கொண்டே இருப்பது கவனிச்சிதறலை அதிகரித்து செயலிழக்க செய்துவிடும். எனவே சமூக வலைதளங்களை கற்றலுக்கான கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்.

இந்த ஆறு பழக்கங்களை ஒரே நாளில் கைவிடுவது என்பது முடியாத காரியம். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்தால் இவற்றை நமது வாழ்வில் இருந்து மெல்ல மெல்ல நீக்கலாம். விரைவில் வெற்றி அடையலாம் என்கிறார் மஸ்க்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com