
நல்லவராய் இருப்பது நல்லதுதான் ஆனால் நல்லது கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது மிகவும் ஆபத்தானது. நல்லவராக இருக்கலாம் ஆனால் முட்டாளாக இருக்கக்கூடாது. எல்லோருக்கும் நல்லவராக இருப்பது என்பது சாத்தியமற்றது. அப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. சில நேரங்களில் நல்லவராக இருப்பதன் மூலம் நமக்கு பலன் கிடைக்காமல் போகலாம். மேலும் சில நேரங்களில் கெட்டவர்களும் நல்லவர்களாக நடித்து நம்மை ஏமாற்றலாம்.
நம்மை ஒருவர் ஏமாற்ற நினைத்தாலோ அல்லது முயற்சித்தாலோ நாம் அவர்களுக்கு நல்லவர்களாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. மற்றவர்கள் நம்மை நல்லவர் என்று பாராட்ட வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சியெல்லாம் எடுக்காமல் இயல்பாக இருந்தாலேபோதும்.
நான் நாமாக இருந்தாலே போதும்.நல்ல பெயர் எடுக்க முயலவேண்டாம். நல்ல செயல்கள் செய்யும்போது அதற்கு பாராட்டு, பெருமையெல்லாம் கிடைக்கும் என்று நினைக்காமல் நல்ல செயல்களுக்காக மட்டுமே செயல்படுவது சிறந்தது.
நாம் நல்லவராக இருக்கிறோம் என்பதைப் பயன்படுத்தி நம்மை யாரும் தவறாக அல்லது தவறான வழியில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டாம். நல்லவராக இருந்தால் மட்டும் போதாது எல்லா விஷயங்களிலும் கவனமாக நல்லது கெட்டது தெரிந்தவராய் இருந்தால்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும். நல்லவராக இருப்பது என்பது நம் இயல்பாக இருப்பின் அதை மற்றவர்களுக்காகவோ, மற்றவர்களைப் பார்த்தோ நம் இயல்பை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
ஏன் நல்லவராக இருக்க வேண்டும்? ஏனென்றால் நல்லவர்களாக இல்லாததன் விளைவுகளைவிட, நல்லதை செய்வதன் விளைவுகள் மிகவும் சாதகமாக இருக்கும் என்பதால் நல்லவராக இருக்க வேண்டும். நல்லவராக இருப்பது என்பது ஒரு நல்ல குடிமகனாக இருப்பதைக் குறிக்கிறது. இதன் மூலம் நாம் சமூகத்தில் சிறந்த அங்கீகாரத்தைப் பெற முடியும். நல்லவராக இருப்பது என்பது ஒருவருடைய மனசாட்சியின் கட்டளைகளுக்குக் கீழ்படிவதை குறிக்கும். இதன் மூலம் நாம் நேர்மையான உணர்வினை பெறுகிறோம்.
நல்லவராய் இருப்பது நல்லதுதான். ஆனால் அனைவருக்கும் நல்லவராய் இருப்பது என்பது மிகவும் கடினமானது. முதலில் நமக்கு நாமே நல்லவர்களாய், மனசாட்சிக்கு பயந்தவர்களாய் வாழ்ந்தால் போதும். அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்படாமல், பிறரைப் பார்த்து பொறாமை கொள்ளாமல் இருந்தால் போதும். நாம் நல்லவராக வாழ்வது நமக்குதான் நல்லது மனதாலும், உடலாலும். ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதான் வளர்ச்சி! வாழ்வது ஒருமுறைதான். அதை நல்லவராக, நல்ல எண்ணத்துடன் வாழ்வதே சிறந்தது. அத்துடன் நல்லது கெட்டது தெரிந்த நல்லவராய் இருப்பது மிகவும் நல்லது.
உண்மைதானே நண்பர்களே! வாழ்ந்து காட்டுவோம் இனிதே!