ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

Motivation image
Motivation imagepixabay.com
Published on

சில மணித்துளிகள்தானே என்று, மணித்துளிகள் அல்லது விநாடிகள் (நிமிடங்கள்) வீணாவதை கவனமின்றி விட்டுவிடக்கூடாது.  மணித்துளிகளை வீணாக்குவது என்பது சிறிது சிறிதாக நமக்கான நேரத்தை வீணாக்கிக் கொள்கிறோம் என்பது பொருள்.

மணித்துளிகள்தாம் யுகங்களாக மாறுகின்றன. ஒவ்வொரு விநாடியும் வாழ்நாளில் விலைமதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். அந்த மணித்துளிகளை பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும் (Every minute counts). அவசரமாக அல்ல, விரைவாகச் செயல்பட வேண்டும்...

சிலர் சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சுற்றி வளைத்து பேசும்போதும், சூழ்நிலை அறியாமல் மிகவும் மெத்தனமாகப் பேசும்போதும் கேட்பவர்கள்  எரிச்சல் அடைவார்கள்.

சில நேரங்களில் பொறுமை இழந்து நீங்கள் சொல்ல வந்தது என்ன...? அதை மட்டும் சொல்லுங்கள் என்று நேரடியாகக் கேட்டுவிடுவார்கள். தமது தேவையை ஒரு வரியிலோ ஒரு சொல்லிலோ சொல்லத் தெரியாதவர் – என்ன சாதிக்கப் போகிறார்...? அத்தோடு இத்தகையவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் நேரமும் வீணாகின்றது.

நேரம் வீணாகின்றதே என்ற உணர்வால் உந்தப் படுகிறார்கள். இவரோடு வீணாக்கிய நேரத்தைச் சரிகட்ட பணிகளை விரைவுபடுத்தி உழைக்க வேண்டியுள்ளது.

தெளிவான எண்ணமுடைய மனிதன் காலத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறான். தெளிவில்லாதவன் வாழ்வில் திசை தெரியாமல் அல்லல்படுகிறான்.

நேரத்தின் பெறுமதியை பின்வரும் வாய்ப்புகளைச் சந்தித்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். தேர்வில் தோற்ற மாணவருக்கு ஒரு ஆண்டில் பெறுமதி என்னவென்று புரியும்...!

குறைப்பிரசவம் செய்த தாய்க்கு ஒரு மாதத்தின் பெறுமதி என்னவென்று புரியும். வாராந்திர நாளிதழ் வெளியிடும் ஆசிரியருக்கு ஒரு வாரத்தின் பெறுமதி என்னவென்று புரியும். காத்திருந்த காதலருக்கு ஒரு மணித்தியாலத்தின் பெறுமதி என்னவென்று புரியும். தொடருந்தைத் தவறவிட்ட பயணிக்கு ஒரு விநாடியின் பெறுமதி என்னவென்று புரியும்.

விபத்திலிருந்து தப்பியவருக்கு ஒரு வினாடியின் பெறுமதி என்ன என்று புரியும். ஓட்டப் பந்தயத்தில் தோல்வி அடைந்தவர்களை கேட்டுப் பாருங்கள், ஒரு வினாடியின் அருமையை.

குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய பணியை நீட்டித்துச் செய்பவர்கள், ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டியதை இரண்டு மணி நேரம் வரை செய்து கொண்டிருப்பவர்கள்...

இவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பது மட்டுமல்ல, இவர்கள் வாழ்க்கை சரிந்து கொண்டே போய் பின்னர் அழிந்தும் போய்விடும்.

இத்தோடு மறதி, சோம்பல், அளவுக்கு விஞ்சிய தூக்கம் இவை மூன்றும் சேர்ந்து கொண்டால் போதும் பின்னர் அந்த மனிதன் மீளவே முடியாது.

இதையும் படியுங்கள்:
ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Motivation image

வளர்ந்த சமுதாயத்தின் அடையாளம் நேரத்தைச் சரியாக பயன்படுத்துவதுதான். இந்த வாரத்திற்குள் நமக்கு இறுதி முடிவு காத்து இருக்கிறது என்று நமக்கு முன் கூட்டியே தெரிந்து விடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன செய்வோம்...? முதன்மையான வேலைகளை எல்லாம் வரிசைப்படுத்தி விரைந்து விரைந்து செய்து முடிப்போம் அல்லவா...?! ஆனால்!, உண்மை என்னவென்றால் நமக்கு முடிவு ஒரு வாரத்தில் இல்லை, ஒரு நாளில் இல்லை, ஒவ்வொரு மணித் துளியிலும் காத்து   இருக்கிறது.

ஒவ்வொரு விநாடியிலும் காத்திருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம். அதனால் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில்,  சமுதாயத்திற்கு நன்மை தரும் வகையில் கழிப்பது  கடமையாகும். வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்ய வேண்டும்.

இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து நேரத்தை வீணாக்கா வேண்டாம். இன்று!, உங்கள் கையில் ஒரு நாளைய 24 மணிகள் 1440 நிமிடங்கள் -86,400 வினாடிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இவற்றை வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவிடத் தயாராகுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com