கடைசி நேர பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? நேரத்தை ஆளும் கலை!

நேர மேலாண்மையை கடைப்பிடிப்பதன் மூலம் கடைசி நேரத்தில் படித்து பதற்றம் அடைவதை தவிர்க்கவும், மன அழுத்தமின்றி நிம்மதியாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படவும் உதவும்.
Time Management
Time Management
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மாணவர்களுக்கு நேர மேலாண்மை(Time Management) என்பது கல்வியில் சிறந்து விளங்கவும், மன அழுத்தத்தைக் குறைத்து, ஒழுக்கமான வாழ்க்கையை வாழவும், பொழுதுபோக்குக்கும் படிப்பிற்கும் இடையே சமநிலையைப் பேணவும் மிகவும் முக்கியமானது. இது பாடத்திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்கவும், தேர்வுக்கு சிறப்பாக தயாராகவும், கவனச் சிதறல்களை குறைத்து இலக்குகளை அடையவும் உதவுகிறது.

நேர மேலாண்மை என்பது உண்மையில் சுய மேலாண்மை(self management). இதற்கு ஒழுக்கமும், பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவமும் அவசியம். எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் நேரத்தை நிர்வகிக்க தெரியவில்லை என்றால் முழுமையான பலனை அடைய முடியாது. கடினமாக உழைப்பதை விட புத்திசாலித்தனமாக உழைப்பதே(Work Smarter, Not Longer) வெற்றிக்கான வழியாகும்.

மாணவர்களுக்கான நேர மேலாண்மை என்பது படிப்பு, விளையாட்டு மற்றும் ஓய்வு நேரத்தை சரியாக திட்டமிட்டு, எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமோ அவற்றிற்கு முன்னுரிமை அளித்து மன அழுத்தமின்றி இலக்குகளை அடைவதே சிறப்பாகும்.

பெரிய பாடத்திட்டங்களை சிறிய பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி நேர இலக்குகளை நிர்ணயிப்பதும், படிப்பு நேரத்தில் தேவையற்ற பொழுதுபோக்குகளை தவிர்த்து முழு கவனத்துடன் செயல்பட வேண்டியதும் அவசியம். மூளை புத்துணர்ச்சி பெற சரியான தூக்கம், சீரான உடற்பயிற்சி ஆகியவையும் அவசியம்.

நேர மேலாண்மையை கடைப்பிடிப்பதன் மூலம் கடைசி நேரத்தில் படித்து பதற்றம் அடைவதை தவிர்க்கவும், மன அழுத்தமின்றி நிம்மதியாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படவும் உதவும். திட்டமிட்ட நேர மேலாண்மை மூலம் பாடங்களை ஆழமாகப் படித்து தேர்வுகள் மற்றும் பணிகளை சரியான நேரத்தில் முடிக்கவும் முடியும்.

நேர மேலாண்மையை கடைப்பிடிப்பதன் மூலம் பணிச்சுமையை குறைக்கலாம். அதிகப்படியான பாடங்களைப் படித்து முடிக்க வேண்டும் என்ற அழுத்தம் மற்றும் கவலை நீங்கி வேலைகளைப் பிரித்து செய்வதால் பணிச்சுமை குறையும். முக்கியமான பாடங்கள் மற்றும் அவசர வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நேரத்தை வீணடிப்பதை தவிர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
நேர மேலாண்மை எவ்வளவு அவசியம் தெரியுமா?!
Time Management

தினசரி அட்டவணையை பின்பற்றுவது மாணவர்களிடையே சுய ஒழுக்கத்தை வளர்ப்பதுடன், பொறுப்புணர்வையும் அதிகரிக்கும். படிப்பிற்கு நடுவே ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு போதுமான நேரத்தை ஒதுக்கவும் உதவுகிறது இந்த நேர மேலாண்மை. நேர மேலாண்மை என்பது ஒரு மாணவனின் சிறந்த நண்பன். இது கல்வி மட்டுமல்ல எதிர்கால வாழ்விலும் வெற்றியை உறுதி செய்யும்.

நேரத்தை திறம்பட நிர்வகிக்க முதலில் திட்டமிடுதல் என்பது மிகவும் அவசியம். தினமும் காலையில் அன்றாடப் பணிகளை பட்டியலிடுவதும், அதன்படி செயல்படுவதும் மிகவும் முக்கியம். படிக்கும் பொழுது 25 நிமிடங்கள் படித்து, 5 நிமிடங்கள் ஓய்வு எடுப்பதும், படிக்கும் பொழுது கவனிச்சிதறல்களை ஏற்படுத்தும் மொபைல் போன் போன்ற பயன்பாட்டை குறைப்பதும் அவசியம்.

தள்ளிப் போடுவதை தவிர்த்து திட்டமிட்ட வேலைகளை உடனுக்குடன் முடிப்பதும் கல்வியில் மட்டுமல்ல எதிர்கால வாழ்விலும் வெற்றியை பெற்றுத் தரும்.

logo
Kalki Online
kalkionline.com