'நாம் எதற்காக நேர்மையாக வாழவேண்டும்’ என்று எப்போதாவது நினைத்ததுண்டா? நம்மைச் சுற்றி நிறைய பேர் நேர்மையின்றி வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள். நாமும் நேர்மையாகத்தான் வாழ்கிறோம். இருப்பினும், அதனால் என்ன பெரிதாக பலன் கிடைத்துவிட்டது என்று எப்போதாவது தோன்றியதுண்டா? அப்படி தோன்றியிருந்தால், இந்த கதை உங்களுக்குத்தான்.
டாக்ஸி டிரைவர் ஒருவர் தன்னுடைய கடைசி சவாரியை முடித்துவிட்டு வீடு சென்று கொண்டிருக்கும்போது தன்னுடைய வண்டியின் பின் சீட்டில் நிறைய பணம் உள்ள ஒரு பையை பார்க்கிறார். அதை பார்த்ததும் இதை கண்டிப்பாக கடைசியாக வண்டியில் வந்தவர்தான் விட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஏன் இந்த பணத்தை நாமே வைத்துக் கொள்ளக்கூடாது? என்று யோசிக்கிறார். இருந்தாலும், அதற்கு மனமில்லாமல் கடைசியாக அந்த நபரை இறக்கிவிட்ட இடத்திற்கு திரும்ப சென்று அந்த பணத்தை அந்த நபரிடம் ஒப்படைக்கிறார்.
அதற்கு அந்த நபரோ இதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தீங்க? இதெல்லாம் சினிமா ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட ஜெராக்ஸ் காப்பி என்று சொல்கிறார்.
இதை கேட்டு நொந்துபோன டேக்ஸி டிரைவர் வீட்டிற்கு சென்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் தன் மனைவியிடம் சொல்கிறார். இன்னைக்கு நேர்மையாக இருந்ததற்கு எனக்கு 200 ரூபாய் பெட்ரோல்தான் தண்டமாக செலவு ஆனது என்று சொன்னார். அதற்கு அவர் மனைவியோ, நீங்கள் மட்டும் இன்று நேர்மையாக இல்லாமல் அந்த பணத்தை செலவு செய்திருந்தால், இந்நேரம் ஜெயிலில் கம்பி எண்ணிக்கிட்டிருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
இந்த கதையில் வருவது போல, நேர்மையாக இருப்பது முட்டாள் தனம் என்று பல சமயங்களில் நாம் நினைத்திருப்போம். நேர்மையாக இருப்பதால்தான் இவ்வளவு கஷ்டங்கள் வருகிறதோ? என்று கூட தோன்றியிருக்கும். நேர்மையாக இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் நமக்கு எல்லாமே கிடைத்திருக்கும் என்று கூட எண்ணியிருக்கலாம். ஆனால் நாம் நேர்மையாக வாழ்வதன் பலன் நமக்கு சிறிது காலம் சென்ற பிறகே தெரியும். நேர்மையாக இருப்பவர்களுக்கு படுத்ததுமே தூக்கம் வந்துவிடும். நேர்மையாக இருந்தால் யாருக்கும், என்றைக்கும் பயப்பட வேண்டிய அவசியமேயில்லை. இதை புரிந்து கொண்டால் போதும் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.