
நம் வாழ்க்கையில் நாம் செய்யும் செயல் அனைத்தையுமே தீவிரமாகத்தான் செய்கிறோமா? நாம் எவ்வளவு தீவிரமாக ஒரு செயலை செய்கிறோமோ அதைப்பொருத்தே அதில் வெற்றியடைவதும், தோல்வியடைவதும் உள்ளது. இதை தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
ஒரு ஆற்றங்கரையில் உள்ள மரத்தடியிலே தியானத்தில் இருந்த முனிவரிடம் ஒரு நபர் சென்று, ‘நான் கடவுளை காண விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறார்.
இதைக்கேட்ட முனிவர் அந்த நபரை சட்டென்று இழுத்துச் சென்று ஆற்றுக்குள் கழுத்தைப் பிடித்து அமுக்கினார். சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு அந்த நபரை ஆற்றில் இருந்து எடுத்து தரதரவென்று இழுத்து வந்தார்.
இப்போது முனிவர் அந்த நபரிடம், ‘நான் ஆற்றுக்குள் உன்னை முக்கியபோது, நீ எதை மிகவும் விரும்பினாய்? எது உனக்கு கிடைத்தே ஆக வேண்டும் என்று எண்ணினாய்?’ என்று கேட்டார்.
அதற்கு அந்த நபரோ, ‘காற்றுதான் எனக்கு வேண்டும் என்று எண்ணினேன். எப்படியாவது சுவாசித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்’ என்று கூறினார்.
இப்போது முனிவர், ‘நீ இந்த காற்று வேண்டும் என்று எவ்வளவு தீவிரமாக ஆசைப்பட்டாயோ? அதேயளவுக்கு கடவுளை உணரவேண்டும் என்று ஆசைப்படுகிறாயா?’ என்று கேட்டார். அதற்கு அந்த நபரோ ‘இல்லை’ என்று கூறினார். அப்படியென்றால், ‘இப்போது சென்றுவிட்டு எப்போது உனக்கு அந்த ஆசை தீவிரமாக இருக்கிறதோ அப்போது என்னை காண்பதற்கு வா!' என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
இந்த கதையில் சொல்லப்பட்டது போலத்தான். ஒரு செயலை நாம் எவ்வளவு தீவிரமாக செய்கிறோம் என்பதை பொருத்தே அதற்கான பலனும் இருக்கும். எவ்வளவுதான் முயற்சித்தாலும் வெற்றிபெற முடியவில்லை என்றால் அந்த செயலில் நாம் தீவிரமாக இல்லை என்று பொருள். அதற்காக வருத்தப்படாமல், தீவிரமாக செயலாற்றும் போது நிச்சயமாக வெற்றி பெற முடியும். நான் சொல்வது சரிதானே? முயற்சித்துப் பாருங்கள்.