நாம் பிறரிடம் எதையும் எதிர்ப்பார்க்காமல் காட்டும் அன்பும், பாசமும் நமக்கு பல மடங்காக திரும்ப கிடைக்கும். அடுத்தவர்களிடம் அன்பு காட்டுவதில் பாரபட்சம் இருக்கக்கூடாது. இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் மரியா என்ற பெண் ஒரு ரெஸ்டாரெண்டில் வேலை செய்து வந்தாள். மரியா மிகவும் அன்பானவள். எல்லோரிடமும் பாரபட்சம் பார்க்காமல் கனிவாக நடந்துக்கொள்வாள். ஒருநாள் அவளுடைய கடைக்கு ஒரு வயதான பிச்சைக்காரர் சாப்பிடுவதற்கு வருகிறார்.
அந்த பிச்சைக்காரரை பார்த்த மற்ற ஊழியர்கள் அவரை துரத்த முயற்சிக்கின்றனர். அவரிடம் காசு எதுவும் இருக்க போவதில்லை. எனவே, அவரை கவனிப்பது வீண் வேலை என்று நினைக்கின்றனர். ஆனால், மரியா மட்டும் அவரை வரவேற்று அவரிடம் கனிவாக நடந்துக் கொள்கிறாள். அவருக்கு வேண்டிய உணவை வழங்குகிறாள்.
அப்போது அந்த கடையின் மேனேஜர் மரியாவிடம், 'அந்த பிச்சைக்காரன் பணம் தரவில்லை என்றால் அதை உன் சம்பளத்தில் இருந்துதான் கழிப்பேன்' என்று கடுமையாக கூறிவிட்டு சென்று விடுகிறார். இப்போது மரியா அந்த முதியவரிடம் சென்று, 'இன்று எங்களுடைய கடையின் பத்தாவது Anniversary. அதனால், இந்த உணவை உங்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்' என்று கூறுகிறாள். இதைக்கேட்ட அந்த பிச்சைக்காரனும் அந்த உணவை மகிழ்ச்சியாக சாப்பிட்டுவிட்டு கிளம்பி விடுகிறான்.
சிறிது நேரம் கழித்து மரியா அந்த டேபிளை சுத்தம் செய்ய வந்தப்போது அங்கே ஒரு துண்டுச்சீட்டு இருப்பதை கவனிக்கிறாள். அந்த சீட்டில் என்ன எழுதியிருந்தது தெரியுமா?
அன்புள்ள மரியா, 'நான்தான் இந்த ரெஸ்டாரெண்ட் முதலாளி. என் கடையில் வேலை செய்பவர்கள் கஸ்டமரிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளத்தான் பிச்சைக்காரன் வேடத்தில் வந்தேன்.
என் உருவத்தை பார்த்து எல்லோருமே என்னை வெறுத்து ஒதுக்கியபோது நீ மட்டுமே என்னிடம் அன்பாக நடந்துக்கொண்டாய்! எனவே உன்னையே இந்த ரெஸ்டாரெண்ட்டிற்கு மேனேஜராக ஆக்குகிறேன்' என்று சொல்லி மரியாவை அந்த ரெஸ்டாரெண்டிற்கு மேனேஜராக ஆக்குகிறார்.
இந்த கதையில் வந்தது போலதான் நீங்கள் மற்றவர்களிடம் பாரபட்சம் பார்க்காமல் காட்டும் அன்பு உங்களுக்கு பத்து மடங்காக திரும்ப கிடைக்கும். இதை புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.