
வெற்றி பெற விரும்பும் மனிதர்கள் தங்களது வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உள்ள சில குறிப்பிட்ட பழக்க வழக்கங்களை கைவிட வேண்டும். அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. எந்த நோக்கமும் இல்லாமல் நாளைத் தொடங்குதல்;
இன்று என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி எந்த தெளிவும் இல்லாமல் ஒரு நாளை தொடங்குவது வீண். செய்யவேண்டிய வேலைகள் பற்றி எந்த விதமான நோக்கமும் இல்லாமல் இருக்கும்போது மனம் எதிர்வினையாற்றத் தொடங்கும். தேவையற்ற சமூக ஊடகப் பதிவுகள், செய்திகள், அரட்டை என்று கவனம் சிதறும். சீரற்ற எண்ணங்கள் மனதில் தோன்றுவதால் உபயோகமான செயல்கள் எதுவும் நடக்காது.
இதனால் மதியத்திற்கு முன்பே மனம் சோர்வடைந்துவிடும். எனவே ஒவ்வொரு நாள் காலையிலும் அன்று என்ன செய்யவேண்டும் என்கிற குறிக்கோளைத் தீர்மானிக்க வேண்டும்.
2. தள்ளிப் போடுதல்;
ஒருவரின் முன்னேற்றத்தை தடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் தள்ளிப் போடுதல். ஒரு வேலையை செய்யாமல் தள்ளிப்போட்டு கடைசி நிமிடத்தில் செய்யும்போது அது சிறப்பாக அமையாது. வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க பழகவேண்டும். பிறகு செய்ய வேண்டிய பணிகள், உடனே செய்து முடிக்க வேண்டிய வேலைகள் என்று பிரித்துக்கொண்டால் அவற்றை முடிக்க சுலபமாக இருக்கும்.
3. எதிர்மறை எண்ணங்கள்;
எந்த ஒரு விஷயத்திலும் சிலர் நேர்மறையாக யோசிப்பதற்குப் பதிலாக எதிர்மறையாக எண்ணுவார்கள். இது தோல்வியையே தரும். தேவையில்லாமல் தன்னைப் பற்றிய ஒரு எதிர்மறை பிம்பத்தை வளர்க்க வழி செய்யும். எனவே நேர்மறை எண்ணத்தோடு இருப்பது அவசியம்.
4. கம்ஃபோர்ட் சோனை விட்டு வர மறுப்பது
எந்த ஒரு புதிய விஷயமும் ஆரம்பத்தில் பயமுறுத்துவதாக இருக்கக்கூடும். ஆனால் முயற்சியே செய்யாமல் அதைப்பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. தோல்வி அல்லது சங்கடம் குறித்த பயத்தை விலக்கிவிட்டு சௌகரியமான சூழலை விட்டு வெளியே வந்தால் மட்டுமே ஒரு மனிதரால் வெற்றி அடைய முடியும். அப்போதுதான் சிறிய இலக்குகளை கூட ஒருவரால் நிறைவேற்றிக்கொள்ள முடியும். அதன் பிறகு பெரிய இலக்கங்களை நோக்கி செல்ல முடியும்.
5. யோசிக்காமல் உதவுதல்;
பிறருக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால் தன்னால் முடியுமா என்று யோசித்து தான் அவர்களுக்கு வாக்குத் தர வேண்டும். பிறர் ஏதாவது உதவி கேட்டால் முடியாவிட்டால் கூட செய்கிறேன் என்று ஒப்புக்கொள்வது . ஏனென்றால் தான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கும்போது பிறருக்கு உதவி செய்தால் தன்னுடைய வேலைகள் அப்படியே முடிக்கப்படாமல் இருக்கும்.
எனவே ‘என்னுடைய வேலையை முடித்துவிட்டு உங்களுக்கு செய்து தருகிறேன்’ என்று சொல்லலாம். இல்லாவிட்டால் முடியாது என்று சொல்வதில் தயக்கம் கூடாது. நம்முடைய நேரத்தை முழுவதும் பிறர் உறிஞ்சிக் கொள்ள அனுமதிக்க கூடாது.
6. உடல் மன ஆரோக்கியத்தை புறக்கணித்தல்;
ஆரோக்கியமான உணவுகளையும் உடற்பயிற்சி போன்ற மனதுக்கும் உடலுக்கும் நன்மை செய்யும் பழக்கவழக்கங்களை ஒதுக்கக்கூடாது.இதனால் உடல் நலன் கெட்டுப் போவதுடன் மனநலனும் கெட்டுவிடும். எனவே எத்தனை வேலைகள் இருந்தாலும் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
7. மனநிலை (Fixed mindset);
‘நான் இப்படித்தான்’, ‘இந்த விஷயத்தில் நான் மிகவும் திறமைசாலி’, ‘குறிப்பிட்ட விஷயத்தில் நான் மிகவும் பலவீனமானவன்’ என்று எண்ணிக் கொள்வார்கள். குறிப்பிட்ட, மாறாத மனநிலையை தவிர்க்க வேண்டும்.
திறமைசாலியாக இருந்தாலும் புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதே சமயத்தில் பலவீனமாக இருக்கும் விஷயங்களில் தேவையானவற்றைக் கற்று, அதில் தேர்ந்துவிட வேண்டும். இந்த ஏழு பழக்கங் களையும் விட்டு விட்டால் ஒருவர் தன் வாழ்வில் விரைவில் நடந்து வெற்றி பெற்றுவிடலாம்.