தொழிலதிபர்கள் என்றாலே பரபரப்பானவர்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் வெற்றி பெற தொழிலதிபர்களின் தினசரி பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை காண்போம்.
1. படிப்பு
வெற்றி பெற்ற தொழிலதிபர்கள், மிகப்பெரிய ஜாம்பவான்கள் இவர்களிடம் தினசரி புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கும். தினமும் ஒருமணி நேரமாவது புத்தகங்கள் படிக்கிறார்கள். அப்போதுதான் புதுமையான விஷயங்கள் அவர்களுக்கு தோன்ற ஆரம்பிக்கிறது. அதனை முயற்சி செய்து பார்க்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
2. தூக்கம்
தொழில்முனைவோருக்கு மிக முக்கியமான பழக்கம் நல்ல தூக்கம். நல்ல தூக்கமே தோற்றம் முதல் சிந்தனை வரை எல்லாவற்றையம் தீர்மானிக்கிறது. நல்ல தூக்கம் இருப்பதால் சரியான முடிவு எடுக்கும் பழக்கம் அமைகிறது.
3.நிதி நிர்வாகம்
இவர்கள் அனைவரிடமும் நிதி நிர்வாகம் சிறப்பாக இருக்கும். நேர்முக மற்றும் மறைமுக நிதி வருவாயை அறிந்து வைத்திருப்பார்கள். ஓரிடத்துக்கு செல்கிறார்கள் என்றால் அதற்கு ஆகும் பெட்ரோல் செலவு உள்ளிட்ட இதர செலவுகள், வாகன தேய்மானம் முதல் நேரம் வரை அனைத்தையும் தீர்மானித்து அவர்கள் முடிவெடுப்பார்கள்
4. உடற்பயிற்சி
தினசரி உடற்பயிற்சி செய்வதிலும் சமரசம் செய்து கொள்ளமாட்டார்கள். உடல் வலிமையே மனவலிமை என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அத்துடன் உணவு விஷயத்திலும் மிக கவனமாக இருப்பார்கள். காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் எதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார்கள்.
5. நேரம் ஒதுக்குதல்
தொழில் செய்வதாலேயே வெற்றி பெற்றுவிட முடியாது. அந்த தொழிலை எப்படியெல்லாம் முன்னேற்றலாம், எங்கெல்லாம் தவறு நடக்கிறது என்பதை தனிப்பட்ட முறையில் அலசி ஆராய்வதற்கு என ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி பரிசீலனை செய்து கொள்ளும் வழக்கமும் வெற்றி பெற்ற தொழில் முனைவோர் களிடத்தில் இருக்கிறது.
6. இலக்குகளை நிர்ணயித்தல்
இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய முயற்சி செய்வதில் தொழில்முனைவோர்களுக்கே இருக்கும் பழக்கம். வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் எல்லோரிடமும் இந்த பழக்கம் நிச்சயம் இருக்கிறது. அவர்களுடைய பேச்சிலேயே மிக சாதாரணமாக தாங்கள் ஆரம்ப காலத்தில் நிர்ணயித்த இலக்குகளையும், அதனை அடைய அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அறிய முடியும்.
7. கவனம் எதில் செலுத்த வேண்டும்?
எல்லோருக்கும் ஒரே மாதிரியான நேர அமைப்புதான் இருக்கிறது. வெற்றி குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு மட்டும் ஏன் செல்கிறது என்றால் அவர்கள் தங்களின் கவனத்தை எதில் செலுத்த வேண்டும் என்பதில் தெளிவாக செலுத்துகிறார்கள். அதனால் வெற்றி பெறுகிறார்கள்.
8. நெட்வொர்க் உருவாக்குதல்
எப்போதும் ஒரு நெட்வொர்க் இருக்கும். அவர்கள் சார்ந்த துறைகளில் வெற்றி பெற்றவர்களிடம் தொடர்பு வைத்திருப்பார்கள். அதனைப் போன்ற நெட்வொர்க்குகளை வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் அனுபவம் மற்றும் தொழில் வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் எல்லாம் ஈஸியாக கிடைக்கும்.
9. தோல்வியை எதிர்கொள்கிறார்கள்
வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் தோல்விகளை பல எதிர்கொண்டவர்களாகவே இருப்பார்கள். திடீரென எந்த வெற்றியும் வந்து சேராது. பல தோல்விகள் மூலம் கிடைக்கும் அனுபவம் சிறந்த வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும். அதனால் எப்போதும் தோல்வி அடைவதில் துவண்டு போகாதீர்கள். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை வெற்றி பெற்ற தொழிலதிபர்களிடம் இருந்து கற்றுக் கொள்வது மிக மிக முக்கியம்.
இந்த 9 வகையான பழக்கவழக்கங்களை தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்ற லட்சியம் உடையவர்கள் கடைபிடித்தாலே வெற்றி இலக்கை எளிதில் அடையலாம்.