
சிலர் தனியாக ஒரு செயலை செய்யும்பொழுது அழகாக அற்புதமாக நினைத்தபடி செய்து முடிப்பார்கள். அதையே அவர்கள் பலருடன் சேர்ந்து செய்யும்பொழுது தடுமாறுவார்கள். அந்த தடுமாற்றத்திற்கு காரணம் நாம் அவர்களைப்போல் இல்லையோ? அவர்கள் நம்மை விட திறமைசாலிகளாக இருப்பார்களோ? நம்மால் அவர்களோடு போட்டி போட முடியாதோ என்ற தயக்கம்தான் இந்த தடுமாற்றத்திற்குக் காரணம். அந்த தடுமாற்றத்தை நீக்கினால் வாழ்க்கையில் வசந்தம் வீசும். தொட்ட காரியம் துலங்கும். நினைத்ததை முடிக்கலாம்.
அந்தத் தயக்கத்தைப் போக்குவது எப்படி? என்பதற்கு ஜென்குரு கூறும் விளக்கம் இது.
அந்த ஜென் குருவிடம் பல சீடர்கள் தர்ப்பாப்பு கலைகள் கற்று வந்தனர். அவரின் தலையாய சீடன் ஒருவன் இருந்தான். அவன் குரு தனியே சொல்லிக் கொடுக்கும் போது அனைத்தையும் சிறப்பாகச் செய்வான். எல்லோருடனும் சேர்ந்து செய்யும்போது தவறி விடுவான். உனக்கு என்ன பிரச்னை என்றார் குரு.
அவன் தெரியவில்லை என்பதைப்போல தலையாட்டினான். குரு அவனுடன் காட்டுக்குள் நடந்துச்சென்றார். வழியில் ஓர் ஓடை ஓடியது. அங்கே நின்றார் குரு. இந்தத் தண்ணீரைப்பார் வழியில் பாறைகள் இருக்கின்றன. அங்கே அது நின்று விடவில்லை. பக்கத்தில் வழிந்து ஓடுகிறது. நீயும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றார். அதன் பின் எந்த ஒரு விஷயமும் அந்தச் சீடனை தொல்லைப்படுத்தவில்லை.
நாமும் எந்த ஒரு செயலை செய்யும் பொழுதும் தேங்கி நிற்கக் கூடாது. நீரைப்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தயக்கத்தை தவிர்க்கவேண்டும். அந்தத் தயக்கத்தை போக்கினால் தடுமாற்றம் வராது. "தடுமாறாத குதிரையே நல்ல குதிரை; முணுமுணுக்காத மனைவியே நல்ல மனைவி" என்பது பொன்மொழி.
தடம் மாறும்போது தட்டிக் கேட்பவர்களோடும், தடம் பதிக்கும்போது தட்டிக்கொடுப்பவர்களோடும் பயணியுங்கள்!
அதுதான் வெற்றிக்கு முடடுக்கட்டையான தயக்கத்தைப் போக்கும் மாமருந்து!