
மனிதன் பிறக்கும்போது அழுதுகொண்டே பிறக்கிறான். அப்போதே உலகத்தைப்பாா்க்கும் ஆசை வந்துவிடுகிறதோ என்னவோ!
பெற்றவர்களுக்கு ஆசை வந்துவிடுகிறது, குழந்தை நோய் நொடி இல்லாமல் வளரவேண்டும் என்ற ஆசை. பொதுவாக ஆசையில்லா மனிதர்களே இல்லை. அது இல்லை என்றாலும் வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காதே!
சொந்த பந்தங்கள் இருந்தாலும், நட்பு வட்டங்கள் நிறைந்திருந்தாலும், உயர் பதவி வகித்தாலும், குடிசையில் கால் வயிறு கஞ்சியோடு வாழ்ந்தாலும், அடுக்குமாடியில் ஆடம்பரமாய் வாழ்ந்தாலும், அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்திருப்பது ஆசைதான். ஆசைப்படுவதில் தவறில்லை! அது பேராசையாக மாறிவிடக்கூடாது. அதுதான் வாழ்க்கையில் நமக்கான கோட்பாடு.
சிலருக்கு நல்ல படிப்பு படிக்க ஆசை. நல்ல கணவன் கிடைக்க ஆசை. நல்ல குணவதியான மனைவி கிடைக்க ஆசை. எல்லாமும் நமக்கே கிடைக்க வேண்டும் என்ற ஆசை.
சிலருக்கு சைவத்தின் மீது ஆசை. சிலருக்கு அசைவத்தின் மீது ஆசை. சிலருக்கு தகுதிக்கு மீறிய ஆசை.
சிலருக்கு பெண் மீது ஆசை.
பொன் மீது ஆசை.
நிலத்தின் மீது ஆசை.
நெறிமுறையோடு வாழ ஆசை.
நோ்மை தவறி நடக்க ஆசை. உழைக்காமலே முன்னேறிவிட ஆசை. ஊரைக்கொள்ளை அடித்து தான் மட்டுமே வாழ ஆசை.
சிலருக்கு அடுத்தவர் வாழ்வு கண்டு பொறாமைப்பட ஆசை.
ஆசைக்கு அளவு கோலே இல்லாத நிலை வளா்ந்து வருகிறதே அதுவே அபாயம்தான்.
விலை கூடினாலும் நகை வாங்க பலருக்கு ஆசை. சிலருக்கோ, இருப்பது நிலைத்தால் போதுமென்ற பக்குவமான ஆசை. மேலே மேலே வாழ்வில் வளர வேண்டுமென்ற ஆசை. சிலருக்கு ஆட்சி மீது ஆசை. உழைக்காமலே முன்னேற ஆசை. தான்மட்டுமே நன்றாக வாழவேண்டுமென்ற ஆசை. இதனால்தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சொன்னாா். அது ஏட்டளவில் உள்ளது.
சிலர் அதை கடைபிடித்து, நோ்மை தவறாமல் இறை நம்பிக்கையோடு நியாயமாகவும், அடுத்தவருக்கு தொல்லை தராமலும், நேர்மறை எண்ணங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறா்கள். இருந்தபோதிலும் ஆசை, பேராசை இல்லா மனிதர்களை நினைக்கும்போது இதுதான் வாழ்க்கை என நினைக்கத்தோன்றுகிறது.
ஆசையே அலைபோலே, நாமெல்லாம் அதன் மேலே, என்ற பாடல் நினைவில் வந்துபோகிறது! பொதுவாக ஆடி அடங்கும் வாழ்வில் கொஞ்சம் ஆட்டத்தைக்குறைப்பதே நல்லது.
அதே பாடலில் வாழ்வில் துன்பம் வரவு, சுகம் செலவு, இருப்பது கனவு காலம் வகுத்த கனவை இங்கே யாா் கானுவாா்? ஆக எது, எது, எப்போது எப்படி வரும் என்பது இறைவன் கையில்தான் உள்ளது.
அதுவே வேத தத்துவம். மொத்தத்தில் நாமும் நமது மனமும் எவ்வளவு வேண்டுமானாலும் ஆசைப்படலாம், அது அவரவர் விருப்பம், அது நடப்பதும், நிலைப்பதும், அவன் செயலாலே! அதுவே உண்மை.
நிறைவாக மனிதன் ஒன்றை நினைத்துப்பாா்க்க வேண்டும் "ஆடி அடங்கும் வாழ்க்கையடா அதில் ஆறடி நிலமே சொந்தமடா"
வரும்போது அழுகையோடு வந்தோம்! போகும்போது அழுகையோடு மட்டுமே போகிறோம்! அதுதான் வாழ்க்கை!