
பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பது நிறைய பேரின் கனவு. இந்த கனவை நிஜமாக்குவது எப்படி என்று பலருக்கு தெரிவதில்லை. வேலை தேடுபவர்கள் மத்தியில் ஒரு பக்கம் போட்டி அதிகரித்து உள்ளது. ஒரே சமயத்தில் பெரிய நிறுவனங்களால் திறமைசாலிகளை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதாவது படித்து முடித்தவர்கள் வேலை தேடுவது வேலைக்கு பொருத்தமான மனிதர்களை நிறுவனங்களும் தேடுகின்றன.
இந்த தேடலில் சரியாக பொருந்தி ஒரு வேலைக்கு தேர்வு பெறுவது என்பது ஒரு கலை. தங்கள் பொருட்களின் தரத்தை பிரமாதமாக விளம்பரப்படுத்த நிறுவனங்கள் இருக்கின்றன. அதேபோல வேலைக்கான மார்க்கெட்டில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஒருவர் தன்னை நல்ல சம்பளத்துக்கு விற்றுக்கொள்ள வேண்டும் .
வேலை தேடல் என்பதன் எளிமையான விளக்கம் இதுதான். அதற்கு சில வழிகளை பயன்படுத்தவேண்டும். தெளிவான அடிப்படை வேண்டும்.
எந்த வேலை கொடுத்தாலும் பரவாயில்லை சார், 'சிறப்பாக செய்வேன்' என்று சொல்பவர்களை பெரும்பாலான நிறுவனங்கள் விரும்புவதில்லை. நான் இந்த ஒரு விஷயத்தில் கில்லாடி, எனக்கு இதில் மிகச்சிறந்த திறமை இருக்கிறது. இந்த வேலையை நான் செய்வதைபோல யாராலும் செய்ய முடியாது. என்று தன்னம்பிக்கையுடன் குறிப்பிட்ட ஒரு வேலையை கேட்பவர்களுக்கே வரவேற்பு இருக்கிறது.
எனவே நாம் எந்த வேலைக்கு போவது என்று தெளிவு வேண்டும்.
ஒருவரின் படிப்பு அவருக்கு இருக்கும் திறமைகள் அவரின் பலம் அந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் மற்றவர்களைவிட கூடுதலாக இருக்கும் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் வேலை தேட வேண்டும்.
வேலை தெரிந்து மாறுங்கள்
இந்த நிறுவனத்தில் வேலை செய்வது உங்கள் கனவு? அந்த நிறுவனத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். எப்படிப்பட்ட நபர்களுக்கு அங்கு வாய்ப்பு தருகிறார்கள்? என்னென்ன திறமைகளை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? எப்படிப்பட்ட பண்புகளை அவர்கள் விரும்புகிறார்கள்? எல்லாவற்றையும் அறிந்து கொண்டு அதேபோல மாறுங்கள்.
அனுபவங்களை சேகரியுங்கள்
படித்து முடித்துவிட்டு அனுபவம் ஏதும் இல்லாமல் கல்லூரியில் இருந்து வெளியே வரும் இளைஞர்களைச் சில பெரிய நிறுவனங்கள் நேரடியாக பணிக்கு எடுப்பதில்லை.
அதே சமயத்தில் வேறு சிறிய நிறுவனங்களில் பணியில் இருப்பவர்களை வேலைக்கு எடுப்பார்கள். அப்படிப்பட்ட சிறிய நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து அனுபவங்களை சேகரித்துக் கொண்ட பிறகு பெரிய நிறுவனத்துக்கு முயற்சி செய்யலாம்.
சில விஷயங்களைக் குறிப்பிடுங்கள்
எனக்கு இத்தனை ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது என்று ரெஸ்யூமில் குறிப்பிடும் ஒருவர் தான் இதற்கு முன்பு வகித்த பொறுப்புகளை மட்டுமே விவரிக்க கூடாது. இத்தனை பேருக்கு சூப்பர்வைசராக இருந்தேன், இத்தனை துறைகளைப் பார்த்தேன் என்று பொதுவாக இல்லாமல் இந்த வேலையில் இப்படிப்பட்ட சாதனைகளைச் செய்தேன், என்று சில விஷயங்களை குறிப்பிடுங்கள்.
திறமையை நிரூபியுங்கள்
எனவே எங்கு வேலை இருந்தாலும் நல்ல மனிதர்களின் தொடர்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் திறமையாக வேலை செய்பவர் என்பது அவர்களிடம் நிரூபித்துக் காட்டுங்கள். நமக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கான் என்று சிலர் பரிந்துரையும் செய்வார்கள். பிறகு அவர்களே உங்களுக்கான வாசல்களை திறந்து வைப்பார்கள் சொல்லுங்கள்.
திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்
நீங்கள் எந்த வேலையை செய்கிறீர்களோ? எந்த வேலையில் அடுத்த கட்டத்துக்கு போகவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ? அது தொடர்பான திறமைகளை தினம் தினம் வளர்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி சொல்லுங்கள்.
வேலை தேடும்போது எந்த கட்டத்திலும் சோர்ந்து போகாதீர்கள்.சிலருக்கு அதிர்ஷ்டவசமாக ஒரே நாளில் வேலை கிடைத்துவிடும்.
பலருக்கு நாள் கணக்கில் இழுக்கும். உற்சாகம் இழக்காமல் வேலைக்கான நேர்முகத் தேர்வுகளை அணுகுங்கள். உங்களை நேர்காணல் செய்பவர்களுக்கு எரிச்சலோ, அலுப்போ ஏற்படாதபடி சுவாரசியமாக பதில்களை சொல்லுங்கள்.
உங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொள்ளுங்கள். இந்த வேலையை ஏன் விரும்புகிறீர்கள் என்பது போன்ற கேள்விகளுக்குக்கூட சுவாரஸ்யமாக பதில் தரலாம். நேர்காணல் முடிந்ததும் மறக்காமல் நன்றி சொல்லுங்கள்! வெற்றி நிச்சயம்!