

'கனவு காணுங்கள், என்று கூறினார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள். பல்வேறு கனவுகளைப் பற்றிய குறிப்புகளை படித்து, நாம் தூக்கத்தில் கண்ட கனவை அதனுடன் ஒப்பிட்டு நேர்மறையாக இருந்தால் சந்தோசத்தையும் , எதிர்மறையாக இருந்தால் சற்று கவலையையும் அடைவது உண்டு .ஆனால் ஒரு மாணவர் தான் கண்ட கனவை மெய்ப்பித்து காட்டி, தன்னை அதீதமாக கற்பனை செய்வதாக கூறிய ஆசிரியரே, அந்த மாணவரிடம் சென்று மன்னிப்பு கேட்ட ஒரு கதையை இதில் காண்போம்!
அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த ஒரு ஏழைச் சிறுவனைப் பார்த்து அவனது ஆசிரியர் பிற்காலத்தில் என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டார். உடனே அந்த ஏழைச் சிறுவன் இரவு பகலாக பல மணி நேரம் முயற்சி செய்து ஒரு வரைபடத்தை தயாரித்தான். அந்த வரைபடத்தில் இருநூறு ஏக்கர் நிலத்தை குறிப்பிட்டு அதில் குதிரைலாயம், நீச்சல் குளம், நாலாயிரம் சதுர அடிக்கு மாளிகை என்ற அளவில் திட்டமிட்டு வரைபடத்தை தயாரித்து ஆசிரியரிடம் கொடுத்தான்.
ஆசிரியர் அதைப் பார்த்துவிட்டு குறைந்த மதிப்பெண் அளித்து தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு குறிப்பு எழுதி இருந்தார்.
சிறுவன் மிகவும் வருத்தத்துடன் ஆசிரியரை சந்தித்தான். "நீ எதார்த்தமாக யோசிக்காமல் அதீத கற்பனையில் பிற்காலத்தில் இருநூறு ஏக்கருக்கும், மாளிகைக்கும் சொந்தக்காரர் ஆவதாக குறிப்பிட்டு இருந்தது ஏற்பதற்கு இல்லை "என்று ஆசிரியர் கூறினார். பிற்காலத்தில் அந்த எதிர்பார்ப்புடன் செயல்பட்டு விரக்தி அடைந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன்தான் அறிவுரை வழங்கியதாக அவர் கூறினார்.
இதைக் கேட்டும் மனம் தளராத அந்தச் சிறுவன் அந்த கனவு திட்டத்தை உண்மையாக்கிவிடலாம் என்று முழுமையாக நம்பி முயன்றான். அவன் தான் 4000 சதுர அடியில் மாளிகை உருவாக்கி பெருமை பெற்ற 'மார்ட்டி ராபர்ட் 'பின்னாளில் அவனிடம் மன்னிப்பு கேட்டார் ஆசிரியர்.
யார் எப்படி எதிர்மறையான வார்த்தைகளை கூறினாலும், அவற்றையெல்லாம் நாம் மேன்மையுறுவதற்கான வார்த்தைகள் என்று நேர்மறையாக சிந்தித்து, அதனை செயல்படுத்த கடுமையாக உழைத்தால் நினைத்ததை முடிக்கலாம். மேலும் பிறர் வளர்வதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் தாம் விளங்கலாம் என்பதை இந்த உண்மைச் சம்பவத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது இல்லையா? ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும் என்றால், தன்னை ஊக்குவித்து உற்சாகப்படுத்த யாரும் இல்லை என்று முடங்கி கிடப்பவர்களுக்கு இது போன்ற கதைகள் ஒரு உந்து சக்தி என்பது வெள்ளிடைமலை.