இன்று நம்மில் பலரும் ஒரு செயலை தொடங்குவதற்கான முதல் அடியை எடுத்து வைப்பதற்கு பெரிதும் தயங்குகிறோம். அந்த முதல் அடியை எடுத்து வைக்க இருக்கும் தயக்கம், பதற்றம் போன்ற காரணங்களால் அந்த செயல் நடக்காமல் தடைப்பட்டுப் போகிறது. இந்த பதிவில் சொல்லப்போகும் கதை மூலம் முதல் அடி எடுத்து வைப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொள்ளமுடியும்.
ஒரு நாட்டுடைய மன்னர் தன் மக்களை சோதித்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில், முதல் நாள் இரவே சென்று ஒரு பெரிய பாறையை வைத்து விட்டு சென்று விடுகிறார்.
அடுத்தநாள் அந்த வழியாக வந்த மக்கள் அந்த பெரிய பாறையை பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். சிலபேர் அந்த பாறையை பார்த்து பின் வாங்குகிறார்கள். இன்னும் சிலபேர் ‘இந்த பாறையை யார் நடுரோட்டில் கொண்டு வந்து போட்டது’ என்று திட்ட ஆரம்பிக்கிறார்கள். இன்னும் சில பேர் ‘இதையெல்லாம் கவனிக்காமல் அந்த ராஜா என்னதான் பண்ணிக்கிட்டிருக்கார்’ என்று ராஜாவையே ஒருகட்டத்தில் திட்ட ஆரம்பிக்கிறார்கள்.
அப்போது அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர் அந்த பாறையை பார்த்துவிட்டு, இதனால் நிறைய பேருக்கு நேரம் வீணாகுமே? என்று நினைத்து அங்கிருந்த பாறையை கஷ்டப்பட்டு மெதுவாக சாலையோரத்தில் நகர்த்தி வைக்கிறார்.
அப்போது அந்த பாறையின் கீழ் இருக்கும் பையை பார்க்கிறார். அது முழுவதும் தங்க காசுகளும், அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது, ‘இந்த பாறையை சாலையோரமாக நகர்த்தி வைப்பவருக்கு மன்னனுடைய அன்பு பரிசு’ என்று இருந்தது. அதை பார்த்த முதியவர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
இந்த கதையிலே வந்ததுபோலத்தான், இன்று பலபேரும் ஒரு காரியத்தை தொடங்கும்போது அதில் ஏற்படும் தடைகளை எண்ணி புலம்ப ஆரம்பிக்கிறார்கள். இன்னும் சிலபேர் பின்வாங்குகிறார்கள். ஆரம்பிக்கிறார்கள். சிலர் இதற்கெல்லாம் காரணம் அவன்தான் என்று அடுத்தவர்கள் மீது பழியை போடுகிறார்கள்.
ஆனால் அந்த முதியவர்போல முதல் அடியை யார் எடுத்து வைக்கிறார்களோ, கஷ்டப்பட்டு தடையை தர்த்து எறிகிறார்களோ? அவர்களுக்கே நிறைய பரிசுகள் காத்துக் கிடக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். எந்த காரியம் செய்ய தொடங்கும் போதும் முதல் அடி எடுத்து வைப்பதற்கு தயக்கம் இருக்கவேக்கூடாது. அப்போது தான் வெற்றி பெற முடியும். முயற்சித்துப் பாருங்கள்.