ஒரு வேலையை செய்ய தொடங்கினால் அதை முடிக்கும் வரை ஓயக்கூடாது என்பதைத்தான், ‘கருமமே கண்ணாக இருக்க வேண்டும்’ என்று கூறுவார்கள். மனதை எங்கேயும் அலைப்பாய விடாமல் செயலை செய்யும்போதே முழு வெற்றியைப் பெறமுடியும். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு ஊரில் இரண்டு வியாபாரிகள் இருந்தார்கள். இருவருமே தினமும் கூடையில் பழங்களை எடுத்துச் சென்று ரயிலில் விற்கும் தொழிலை செய்து வந்தார்கள். இருவருமே ஒருநாளைக்கு எட்டு மணி நேரம் உழைக்கக்கூடியவர்கள், ஒரேமாதிரியான வியாபார திறமைக்கொண்டவர்கள்.
இருப்பினும், முதல் வியாபாரி ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பாதித்தார். ஆனால், இரண்டாவது வியாபாரி 300 ரூபாய் சம்பாதிக்கவே மிகவும் சிரமப்பட்டார். அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? இந்த இரண்டு பேருக்கும் இடையிலே என்ன வித்தியாசம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
முதல் வியாபாரி போனால் போன வேலையை மட்டும் பார்ப்பார். தன் வேலையிலே கண்ணும், கருத்துமாக இருப்பார். இரண்டாவது வியாபாரியோ மற்றவர்களிடம் கதை பேசுவது, போன் பேசுவது, என்று பல விஷயங் களுக்கு மத்தியிலே அவ்வபோது வேலையையும் பார்ப்பார்.
இவர்களைப் போலத்தான் நம்முடைய சம்பாத்தியம், வளர்ச்சி என்பது நாம் எவ்வளவு நேரம் வேலைப் பார்க்கிறோம் என்பதில் இல்லை. எவ்வளவு கவனமாக, கண்ணும் கருத்துமாக நம்முடைய வேலையை ஆர்வமாகப் பார்க்கிறோம் என்பதிலேயே இருக்கிறது.
வேலைக்கு நடுவே கவனக்குறைவு, கவனச்சிதறல் ஏற்படும்போது அலைப்பாயும் மனதைக் கட்டுப்படுத்தாமல் அதன் பின்னால் சென்று வேலையை கோட்டை விட்டுவிட்டு, ‘நானும் கடுமையாகத்தானே உழைக்கிறேன்’ என்று சொல்வதில் பிரயோஜனம் இல்லை.
நாம் செய்யும் வேலையை முழுமையாக கவனத்துடன் செய்து முடிக்கும்போதே, அதற்கான முழு வெற்றியும் நமக்கு கிடைக்கிறது. அதற்காகத்தான், ‘கடமையில் கண்ணாக இருக்க வேண்டும்’ என்று சான்றோர்கள் கூறினார்கள். இதை மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டு செயலாற்றினாலே போதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வெற்றியும் பெறலாம். முயற்சித்துத்தான் பாருங்களேன்.