'நன்றி 'என்பது ஒரு சின்ன வார்த்தைதான் ஆனால் அது மனதளவில் தரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அளவிட முடியாத ஒன்று. அது ஒரு வார்த்தையால் நின்று விடாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்று எடுக்க வேண்டும் என்பதே விஷயம்.
சின்ன சின்ன விஷயங்களில் கூட நன்றி.சின்ன சின்ன விஷயங்களில் கூட நன்றி சொல்லத் தெரியவில்லை என்றால், பெரிய விஷயங்களிலும் நன்றி சொல்ல முடியாது என்கிறது ஈஸ்தானிய பழமொழி.
ஏகப்பட்ட வழிகள்.
நன்றியைச் சொல்ல இந்த நவீன யுகத்தில் ஏகப்பட்ட வழிகள் உள்ளன. ஒரு எஸ்.எம்.எஸ்ஸில், வாட்ஸ் அப்பில் கூட நன்றி சொல்லலாம். தினமும் எனக்கு நீங்கதானே காபி போடறீங்க? இன்னிக்கு நான் போடறேன்? என உங்க அம்மா, மனைவியிடம் செய்து காட்டுங்கள் உங்கள் நன்றியை.
அப்பாவுக்குரிய ஆடைகளை இஸ்திரி செய்தும், வேற வேலை செய்து கொடுத்தும் நன்றி சொல்லலாம். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் அன்பின் செயல்களில் நன்றி சொல்வது வார்த்தைகளால் நன்றி சொல்வதை விட வலிமையானது.
சொல்லப்படாத ஒன்று.
நன்றி சொல்லும் நெஞ்சம் நமக்கு இருந்தால் நான்கு திசைகளிலும் உறவுகள் விரியும். முயற்சி எனும் அற்புதம் சிறகுகளிலிருந்தால் ஆகாயத்திற்கு அப்பாலும் அதிசயம் நிகழ்த்தலாம். மற்றவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் இன்றி நம்மால் வாழவே முடியாது. அவ்வாறு நமக்கு உதவிக்கரமாக இருக்கும் அனைவருக்கும் நமது நன்றி உணர்வை வாழ்நாள் முழுவதும் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதனை வள்ளுவரும் 'நன்றி மறப்பது நன்றன்று, என்று திருக்குறளில் கூறியுள்ளார்.
நன்றி கூறுங்கள்.
இதனை முயற்சித்து பாருங்கள். இதுநாள் வரை உங்களுக்கு உதவியவர்களை நெஞ்சில் நினைத்து நன்றி செலுத்திப் பாருங்கள் உங்களுக்குள் ஒரு பணிவுணர்வும் மென்மையும் தோன்றும். நன்றியை காட்டுங்கள் மகிழ்ச்சியை பெறுங்கள்.