என் தோழியின் மகள் பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு நிகழ்ச்சிக்காக அவளை பானையில் ஆட வைத்து ஒத்திகை பார்த்த பின்பு, அரங்கில் ஆட வைப்பதற்காக முயற்சி செய்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணோ அழுது கொண்டு என்னால் பானையில் எல்லாம் ஏறி ஆட முடியாது. அவ்வளவு திறமை எனக்கு இல்லை. வேண்டுமானால் நான் பரதநாட்டியம் கற்றுக் கொள்வதை நிறுத்தி விடுகிறேன் என்று கூறினாள். உடனே அவளது பெற்றோர் நீ முயற்சி செய். முயற்சி செய்து உன்னால் முடியவில்லை என்றால் விட்டுவிடு. நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம். முயல்வதற்கு முன்பே என்னால் முடியாது இயலாது என்று ஏன் எதிர்மறையாகப் பேசுகிறாய்? என்று கேட்டார்கள் .அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. முயற்சி செய்து செய்து நன்றாக பழகிக்கொண்டு பிறகு அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தாள். அதனால் முயற்சித்தால் எல்லாம் முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
முகலாய அரசர் தைமூர் பல போராட்டங்களை சந்தித்து சாதனை படைத்தவர். ஒரு தடவை அவர் தன்னுடைய எதிரிகளிடம் இருந்து தப்பித்து ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தங்கியிருந்தார். அப்பொழுது ஒரு எறும்பு தன்னைவிட பெரிய அளவில் உள்ள ஒரு தானியத்தை தன்னுடைய இருக்கைக்கு தள்ளிக் கொண்டு போக முயற்சி செய்தது. மேலே ஏறும்போது 67 முறை தானியம் கீழே உருண்டு தவறி விழுந்தது. கடைசியில் 68 வது முறைதான் தானியத்தை தன்னுடைய இருக்கையில் சேர்த்தது. அதைப் பார்த்த தைமூர் நான் எந்த விதத்தில் அந்த எறும்பை விட சாதாரணமானவன் என்ற வைராக்கியத்தோடு மறுபடியும் படையைத் திரட்டி போரில் வென்றாராம். இப்படி நம்மைச் சுற்றி எத்தனையோ நடந்து கொண்டிருக்கிறது. கூர்ந்து கவனித்தால் முயற்சி செய்து அனைத்திலும் வெற்றி அடையலாம்.
நீரோடைக்கும், பாறைக்கும்
இடையே நடக்கும்
இடைவிடாத போராட்டத்தின் இறுதியில்...
நீரோடை வெற்றி பெறுகிறது...!
தனது பலத்தினால் அல்ல
தொடர் முயற்சியினால்...!
முயற்சி செய்யுங்கள்
எதுவும் வெற்றியில் முடியும்...!