
எப்பொழுதும் நிம்மதியாக இருக்கவேண்டும் என்றால் தேவையில்லாத விஷயங்களை வெளிப்படுத்தி பேசாமல் இருப்பது முக்கியம். தேவையான நேரத்தில் பேசவேண்டிய விஷயங்களை பேசாமல் இருப்பதாலும் தொந்தரவுகள் வரும். எப்பொழுதும் எதையாவது பேசிக்கொண்டே இருப்பதால் வீண் பிரச்னைகளை சந்திக்க நேரும்.
"அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தேவையின்றித் தலையிடக்கூடாது. அதேபோல் நம் தனிப்பட்ட விஷயங்களில் யாரையும் தலையிட அனுமதிக்க கூடாது. இதுதான் நிம்மதியான வாழ்வுக்கு முக்கியமான சூத்திரம்". நாம் நம் மனநிம்மதிக்காக நம் மனதை சங்கடப்படுத்தும் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது மனதில் ஒரு சாந்தம் நிலவுவது உண்டுதான்.
என்றாலும், அந்த விஷயத்தை அவர்களிடம் கூறியதால், அவர்கள் மற்றவர்களிடம் நாம் கூறிய விஷயத்தை கூறி விடுவார்களோ என்ற பயம் ஏற்படும். இதற்காக அவர்களுடன் தேவையில்லாத சமரசங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக நேரிடும். அப்படி பணிந்து மென்மையாக நடந்து கொள்ளாவிட்டால் அவர்கள் எப்பொழுதும் பிளாக் மெயில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இது நமக்கு மிகப்பெரிய தலைவலியைக் கொடுக்கும்.
பிறகு நம் மனமும் அவர்கள் கூறும் விஷயத்தை காது கொடுத்து கேட்க ஆசைப்படும். பிறகு அவர்களின் தனிப்பட்ட குணநலன்களை நோட்டமிடுவதில் இருந்து மற்ற அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு தெரிந்துகொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம். இதனால் நன்றாக இருந்த உறவு, நட்பு விரிசலுக்கு வழிவகை செய்துவிடும். இதனால்தான் "சொல்ல வேண்டிய விஷயங்கள் அனைத்தும் சொல்லாமல் விட்ட சொல்லில் தொக்கி நிற்பதால் தான் கவிஞர் கண்ணதாசன் கூட சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை" என்று பாடினார் போலும்.
இது போன்ற பிரச்னைகள் வாழ்க்கையில் குறுக்கிடலாம். அந்த பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கிறோம் என்பதில்தான் நம் நிம்மதி இருக்கிறது. மேலும் அவற்றை பிரச்னைகளாகப் பார்க்காமல் நம்மை ஜெயிக்கவைக்கும் சவால்களாக நினைத்தோமானால் அதை எதிர்கொண்டு ஜெயிக்க துணிந்து விடுவோம். அந்த துணிவு வந்துவிட்டால் நிம்மதி கிடைக்கும்.
கடினமான ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை செய்ய தொடங்கும் பொழுது களைப்பு ஏற்படும். அந்த சோர்வுடன் அதைத் தொடர்ந்து செய்தால் வேலை முடியாது. அதற்காக சிறிது நேரம் ஓய்வெடுத்து, அதன் பின் அந்த வேலையைச் செய்யத் தொடங்கினால் நாம் நினைத்ததை விட நன்றாகவே செய்து முடித்து விட முடியும் என்ற ஒரு உற்சாகம் பிறக்கும். அப்போது மனதில் ஒரு நிம்மதி ஏற்படும். அந்த நிம்மதி நம் கையில்தான் இருக்கிறது.
நம் எல்லை எதுவென்று தெரிந்து கொண்டு நடந்தால் மட்டும் போதும். அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தேவை இன்றி தலையிடவும் மாட்டோம். அதேபோல் நம் தனிப்பட்ட விஷயங்களில் யாரையும் தலையிட அனுமதிக்கவும் விடமாட்டோம். இதனால் எந்த உறவிலும் பிரிவு என்பதே இருக்காது. அதுதான் மனதுக்கு நிம்மதி; நிம்மதியான வாழ்விற்கு முக்கியமான சூத்திரம்!.