
நாம் மற்றவர்களிடம் மரியாதையாகவும், பணிவாகவும் நடந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். பிறரை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதே நம் குணத்தை வெளிக்காட்டுகிறது. ஆகவே, நாம் அடுத்தவர்களுக்கு கொடுப்பது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அதுவே நம்மிடம் திரும்ப வரும் என்பதை மறக்க வேண்டாம். இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சி கடையிருந்தது. அந்த கடையின் முதலாளி தினமும் கடையை சரியாக மூடப்போகும் சமயம் ஒரு நபர் வந்து, ‘முதலாளி மூளையிருக்கிறதா?' என்று கேட்பார். அதற்கு முதலாளி ‘மூளையில்லை’ என்று சொன்னதும், ‘என்ன முதலாளி இன்னைக்கும் உங்களிடம் மூளையில்லையா?’ என்று நக்கலாக சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றுவிடுவார். இப்படி தினமும் நடந்துக் கொண்டிருந்தது.
இது அந்த முதலாளிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. இதைப்பற்றி அவர் நண்பரிடம் கூறினார் அந்த முதலாளி. இதைக் கேள்விப்பட்ட அவருடைய நண்பர் ஒருநாள் கடைக்கு வந்தார். வழக்கம்போல அந்த நபர் வந்து, ‘முதலாளியிடம் மூளையிருக்கா?’ என்று கேட்டதும் அதற்கு அவரின் நண்பர், ‘இதுவரை வந்த அனைவருக்கும் மூளையிருந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக உனக்குதான் முளையில்லை’ என்று கூறினார். இதைக்கேட்ட அந்த நபர் முகம் போன போக்கை பார்க்கவேண்டுமே! அன்றிலிருந்து அந்த கடைப் பக்கம் அந்த நபர் தலை காட்டுவதேயில்லை.
இந்த கதையில் சொன்னதுப்போல, நாம் மற்றவர்களுக்கு என்ன கொடுக்கிறோமோ அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும். நாம் யாருக்கு கொடுக்கிறோமோ அவர்கள் தான் நமக்கு அதை திருப்பி தரவேண்டும் என்றில்லை. ஏதோ ஒருவழியில் அது நம்மிடம் வந்து சேரும்.
அது நல்ல விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி. எனவே, மற்றவர்களிடம் பணிவாகவும், அன்பாகவும் நடந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இதைப்புரிந்துக்கொண்டு நடந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.