சிலர் எல்லோரிடமும் நண்பராக பழகவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக அதிகம் முயற்சி எடுப்பார்கள். அப்படி நன்றாக பழகி வரும் வேளையில் சிறிதே சிறிதளவு நண்பர்கள் விமர்சனம் செய்தால் கூட அதை தாங்கிக்கொள்ள முடியாமல் பிரிந்து விடுபவர்கள் உண்டு. இதனால் தேவையான நேரங்களில் நண்பர்கள் இல்லாமல் தவிக்க நேரிடுவதும் உண்டு. மீண்டும் அவர்களிடம் சென்று பேசுவதற்கோ, முன்பு போல் உரையாடவும் முடியாமல் ஒரு சிக்கலில் தவிப்பவர்களை பார்க்க முடியும்.
அதற்கு நீங்கள் உங்கள் நண்பர்களுடன் உண்மையாக பழக வேண்டும் என்று விரும்பினால் முதலில் கோபப்படும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.
ஆபிரகாம் லிங்கன் எவரிடமும் கடுமையாக பேச மாட்டாராம். விரோதிகள் என்றாலும் இனிமையுடன்தான் பழகுவாராம்.
அதனால் ஒரு நண்பர் "உங்களால் பகைவர்களை சாகடித்து விட முடியுமே ஏன் நண்பர்களாக பழகுகிறீர்கள்?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு லிங்கன் இப்போது மட்டும் என்ன செய்கிறேன். அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதால் பகைமையைச் சாகடித்து விடுகிறேனே" என்றாராம். இதுதான் பகைமையை துரத்தி அடிக்கும் யுக்தி.
எந்த நேரத்திலும் கடுமையான சொற்களை நாம் பயன்படுத்தாமல் இருந்தால், நம்மை பகைமை அண்ட விடாமல் செய்து விடலாம். சில நேரங்களில் நம் நண்பர்கள் நம்மைப் பற்றி ஏதாவது கிண்டல், கேலியாக கோபமாக பேசினாலும் கூட ஏன் அப்படி பேசுகிறார்கள்? என்று பொறுத்திருந்து கேட்டு தெரிந்துகொண்டால் பகைமையை அண்ட விடாமல் தடுக்கலாம்.
அதை விடுத்து எல்லா விஷயத்துக்கும் முனுக்கென்று கோபம் கொண்டால் முசுடு, முன் கோபக்காரர்கள் என்று நம்மிடம் யாரும் பழகாமல் ஒதுங்(க்)கி விடுவது உண்டு. இதனால் சாதாரணமாக பார்த்தால் கூட நம்மை அவர்கள் முறைத்துப் பார்ப்பதாக நினைத்து பகைமைதான் வளரும். பகைமையைத்தான் பாராட்ட வேண்டி வரும். ஆதலால் இயல்பாக பழகுவோம். எதையும் இடம், பொருள், பார்த்து பேசுவோம்.
பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே;
பகைவனுக்கு அருள்வாய் என்பதை மனதில் கொள்வோம்!
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்! என்ற வள்ளுவரின் வாய்மொழியில் கவனம் வைத்தால் பகைமை அழியும்; நட்பு மலரும் என்பது உறுதி அல்லவா?
நட்பும் உறவும் நல்ல புத்தகம் போன்றவை
அதில் ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் இருக்கும்
அதனை சரி செய்யுங்கள்
பிழை என்பதற்காக நல்ல நல்ல புத்தகங்களை தூக்கி எறிந்து விடாதீர்கள்!