
புத்தரின் வார்த்தைகளுக்காக சீடர்கள் காத்திருக் கிறார்கள். எப்போதும் அதிக வார்த்தைகளை சிந்தாதவர் அவர். மவுனம் தவழும் புன்னகையுடன் சீடர்களை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். புத்தரிடம் இருந்து கேள்வி பிறக்கிறது. மனித வாழ்க்கையில் சிறந்த தருணம் எது? சீடர்கள் ஒவ்வொன்றாக சொல்லிவர, புத்தர் இறுதியாக விடை அளிக்கிறார். இதோ கடந்து கொண்டிருக்கிறதே இந்த நொடிதான் மிகச்சிறந்தது.
நிகழ்காலத்தில் வாழ்வதுதான் தியானம். கடந்துபோன விநாடிகளை நினைக்காமல், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இறங்காமல், நழுவிக்கொண்டிருக்கும் இந்த விநாடியை... இந்த தருணத்தை உற்றுநோக்குவதுதான் தியானம்.
குழந்தையின் கண்களை எப்போதேனும் உற்று நோக்கியதுண்டா? கலங்கமற்ற வெண்மேகமாய் மிதக்கும் அந்த வெண்விழிகளில் எந்த சார்பும் கிடையாது. கோபம், மகிழ்ச்சி என எல்லா உணர்வுகளிலும் குழந்தையால் மட்டுமே முழுமையாக வாழ முடியும். ஒரு குழந்தை அழுகிறதென்றால் முழுமையாக அழும். சந்தோஷம் நிறைந்திருக்கும் தருணத்தில் பூந்தளிர்போல முழுமையாக சிரிக்கும். இதுதான் பரிபூரணம். இதுவே தியானம்.
குழந்தையைப்போல சார்பற்ற நிலையில் இருங்கள் இப்படிப்பட்ட விழிப்புணர்வு நிலைதான் நம்மை அமைதிக்கு இட்டுச்செல்லும் திரும்பிய பக்கமெல்லாம் இன்று கோவில்களாக இருக்கின்றன. இஷ்ட தெய்வங்களையும். தங்களது குலதெய்வங் களையும் மக்கள் வழிபடுகிறார்கள். ஆனால், மனதிற்குள் அமைதி என்பது துளிகூட இல்லை.
புத்தியில் சஞ்சலம். முடிவெடுக்க முடியாமல் மனம் ஊசலாடுகிறது. இந்த வாழ்க்கையே வீண் என்ற விரக்தி. கோபம், ஆங்காரம், சபலம், கர்வம் என அத்தனை உணர்வுகளும் நம்மை ஆட்டி வைக்கின்றன. தியானம் பழகுவதால் மட்டுமே மனதை ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
உங்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா? என்பதை உங்களின் புன்னகையைக் கொண்டே அறியலாம். ஒரு குழந்தை ஒரு நாளைக்கு 400 முறை புன்னகை சிந்துகிறது. பருவ வயதினர் 17 முறை புன்னகை சிந்துகிறார்கள். ஆனால், பெரியவர்கள் ஒருமுறை கூட சிரிப்பதில்லை.
ஒருவர் பெரிய பதவிக்குப் போகும்பொழுது மிகவும் விறைப்பானவராக மாறிவிடுகிறார். அவரின் முகமும், மனமும் இறுகிவிடுகிறது. எளிய மக்களால் அவரை நேரில் அணுக முடிவதில்லை. இறுக்கமான மனிதர்களால் நம்முடைய முன்னேற்றங்கள் தடைபடுகின்றன.
குறைகூறும் சமுதாயமாக நாம் மாறிவிட்டோம் என்று சொன்னால் அது மிகையல்ல. ஏனென்றால், இன்றைய சமுதாயம் அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. நம்மால் செய்ய முடியவில்லை என்றாலும் எதிரி செய்பவரிடம் நாம் குறை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறோம்.