
எப்பொழுதெல்லாம் நமது செயல்கள் நல்ல எண்ணங்களுடன் செயல்படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் உள்ளம் வருத்தப்படுவதில்லை. மாறாக மகிழ்ச்சியை அனுபவிக்கத் தூண்டுகிறது. மனம் செம்மையானால் எண்ணங்கள் தெளிவாகும். எண்ணங்கள் தெளிவானால் சிந்தனையும், செயல்களும் வலுவாகவும் ,நேர்மையாகவும் இருக்கும். நேர்மையான செயல்கள் மகிழ்ச்சியை உண்டாக்கும்.
நாம் எவ்வளவு பெரிய கல்வியை கற்றாலும் அனுபவம் என்னும் ஆசான் சொல்லித் தரும் பாடமே மிகச்சிறந்த பாடம். குறிப்பாக ஒரு குழந்தை வீட்டில் அழுகிறது என்றால், அதன் இளம் தாய்க்கு அது ஏன் அழுகிறது என்பது புரியாது. சட்டென்று என்ன செய்து அழுகையை அடக்குவது என்பதும் தெரியாமல் தவிப்பார்.
இதே அனுபவம் மிக்க முதியவர் ஒருவர் அந்த வீட்டில் இருந்தால் குழந்தை ஏன் அழுகிறது? அதற்கான காரணம் என்ன என்பதை புரிந்து கொண்டு அதற்கு வேண்டிய முதல் உதவிகளை செய்து அழுகையை அடக்குவார்.
அது மருந்தாகவும் இருக்கலாம் .விருந்தாகவும் இருக்கலாம். இதுதான் அனுபவம் சொல்லித் தரும் பாடம். இதற்கு பெரிய பெரிய கல்வியை கற்று இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை, வாழ்க்கையில் அனுபவித்து கற்ற குறிப்புகளை வைத்து எளிமையாக அதன் பிரச்னைகளைத் தீர்த்துவிட முடியும்.
பெரியவர்களும் தமக்கு தம் அனுபவத்திற்கு மரியாதை கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்வர். இப்படி சின்ன சின்ன சந்தோசங்களால் நிறைந்ததுதான் நம்முடைய வாழ்க்கை. அன்றாட வாழ்க்கையில் இது போன்ற மகிழ்ச்சியை அனுபவித்து வந்தாலே வாழ்க்கை சிறக்கும். முதியோர்களும் மேலும் மேலும் முதுமையை காரணம் காட்டி ஒதுங்கிக் கொள்ளாமல், உற்சாகமாக எதிலும் செயல்பட துணிவர்.
உறுதியான மனிதன் கண்ணீர் சிந்த மாட்டான் என்பது தவறு. ஒரு ராணுவ வீரன் உறுதி படைத்தவன். அந்த கணத்தில் கண்ணீர் சிந்தி உடனே கத்தியை கையில் எடுத்து சண்டைக்கு தயாராவான் மறுபடியும். உணர்ச்சி வெள்ளத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்க மாட்டான். அதுதான் அவனுக்கு அனுபவமும் செய்தொழில் பயிற்சியும் சொல்லிக் கொடுத்த பாடம். அனுபவம் என்பது ஒவ்வொரு ஆளுக்கு ஆள் மாறுபடும். தொழிலுக்குத் தொழில் மாறுபடும். வீட்டுக்கு வீடு மாறுபடும். ஒவ்வொன்றிலும் மாறுபட்டு அந்த மாறுதலை ரசிக்கும் பொழுதுதான் மனதுக்கு மகிழ்ச்சி கிட்டும். ஆஹா வாழ்க்கையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? கற்றுக்கொள்ள என்று சிந்திக்கத் தோன்றும்.
அனுபவ அறிவு வளர வளர மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதியே பல்வேறு விஷயங்களை ஆராயத்தூண்டும். அப்படி தூண்டும் பொழுது மனம் மகிழ்ச்சி அடையும். மனம் மகிழ்ச்சி அடைந்தால் எல்லோரிடமும் இதமாக பழகத்தோன்றும். அப்படி இதமாக பழகும் பொழுது நமக்கே இன்று புதிதாய் பிறந்தோம் என்று சொல்லத் தோன்றும். அதை கொடுப்பதும் எது? மகிழ்ச்சிதான். வேற என்ன? அப்படிப்பட்டதுதானே மகிழ்ச்சி.
நல்ல மனிதனுடன் கொண்ட உறவு என்பது கரும்பை போன்றது. கல்கண்டை போன்றது என்று கூறலாம். கரும்பை வெட்டினாலும் கசக்கி பிழிந்தாலும் கிடைப்பது என்னவோ இனிப்புதான். அதுபோல் கல்கண்டை எந்த பக்கம் சுவைத்தாலும் கிடைப்பதும் இனிப்புதான். கரும்பும் கற்கண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். கரும்பிலிருந்து கிடைப்பதுதான் கல்கண்டு. அதுபோல் ஒவ்வொரு அனுபவம் ஒரு மகிழ்ச்சிக்கு வித்திடும். இவைகள் தான் மனித உறவு மேம்பட அவசியமானது.
அனுபவம் என்பது எல்லாவற்றையும் சகிக்க, சீர் தூக்கி பார்த்து எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது. அப்படி கற்கும் பொழுது மகிழ்ச்சி உண்டாகிறது. மகிழ்ச்சி என்பது வேண்டும் என்ற தேடலில் கிடைப்பதில்லை. போதும் என்ற மனநிறைவில் உண்டாவதுதான்!