
வாழ்க்கை என்பது நாம் எந்த கோணத்தில் கொண்டு செல்கிறோமோ அந்த கோணத்திலேயேதான் நமக்கு நல்லது கெட்டது என அனைத்துமே நடக்கும். முதலில் நாம் எந்த ஒரு விஷயத்தையும் தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் நமக்கு ஒரு தீங்கு நடந்துவிட்டது என்பதால் அதை தீங்காகவும் நல்லது நடந்துவிட்டது என்பதால் அதை நல்லதாகவும் நாம் எண்ணி முடிவு செய்து விடக்கூடாது.
இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர். உண்மை தெரியாமல் பிறர் கூறுவதைக்காதில் வாங்கிக் கொள்ளக்கூடாது.
நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் பிறரின் தவறுகளை மனதிலிருந்து அழித்துவிட வேண்டும். அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுக்காக நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்து விடக்கூடாது.
ஒருவரால் துன்பத்தை சந்திக்க நேர்ந்தால், அதைவிடப் பலமாக அதற்குத் தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்று ஒரு போதும் எண்ணக்கூடாது. சிறிது சிந்தித்து, நளினமாக அதைக்கையாள வேண்டும்.
கடலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதினான் கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன் பிடித்துக் கொண்டு இருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின.
அவர் அக்கடற்கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.
அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பாசமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களைக் கொன்று குவிக்கின்றதே. இது கொடுமையான கடல் எனக் கரையில் எழுதினாள்.
ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக் கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க
மகிழ்ச்சியோடு இருக்கலாம்.. என எழுதினார். பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்து விட்டுச் சென்றது.
வாழ்க்கையை நாம் எந்தக் கோணத்தில் பார்க்கிறோமோ அந்தக் கோணத்தில் அது நமக்குத் தெரிகிறது. வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கின்றோமோ அதுதான் நமக்குக் கிடைக்கின்றது.
வாழ்க்கையைப் பற்றி மனிதர்களின் கண்ணோட்டமும், வாழ்க்கையை அவர்கள் அணுகும் முறையும் வேறுபட்டு இருப்பதால்தான் ஒரே உலகம் ஒவ்வொரு மனிதனையும் வெவ்வேறு விதமாகப் பார்க்க வைக்கிறது.
நண்பர்களாக இருக்கட்டும் அல்லது உறவினர்களாக இருக்கட்டும் யாரிடமும் நாம் எந்த கோணத்தில் அணுகவேண்டும் என்பதை முடிவு செய்து சரியான கோணத்தில் அணுகி வாழ்க்கையை வாழ்ந்து வெற்றி பெறுவோம்.