motivation image
motivation imagepixabay.com

பாராட்டு என்பது எப்பேற்பட்டது தெரியுமா?

Published on

சின்னச் சின்ன முயற்சிகள் மேற்கொள்ளும்பொழுது அதை தட்டிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி, பாராட்டினால், மேலும் அதை விரிவாக பெரிய அளவில் செய்ய ஒரு உந்து சக்தி கிடைக்கும். அப்படி ஒரு பாராட்டுதலால் என் தோழி அவள் சமையல் கலையில் வளர்ந்த விதத்தை இப்பதிவில் காண்போம். 

என் தோழி மிகவும் நன்றாக சமைப்பாள். அதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கொடுத்து ருசிக்க வைப்பாள். ஒரு முறை அவள் பிரியாணி செய்திருந்த போது பக்கத்து வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த எழுபது வயதிற்கும் மேற்பட்ட பெண்மணிக்கு கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றாள்.

அதைச் சாப்பிட்ட உடன் அந்த அம்மா மூன்றாவது மாடியில் இருந்து இறங்கி வந்து  என் தோழியைப் பார்த்து பிரியாணி மிகவும் சூப்பர் என்று மனதார பாராட்டி பேசினார்.

இதை கவனித்த என் தோழி ஒரு 'பிரியாணி நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்காக மூன்று மாடி ஏறி வந்தீர்கள்? நான் கீழே வரும்போது சொல்லி இருக்கலாம். அல்லது ஃபோனில் அழைத்து பேசினாலே போதுமே! 'என்று அடக்கத்துடன் கேட்டாள்.

அதற்கு அந்த பெரியம்மா, அந்த பிரியாணியை சாப்பிட்ட உடனே எனக்கு உன்னை பாராட்ட வேண்டும்போல் இருந்தது. அதனால் தான் வந்தேன் என்று கூறினார்.

அன்று அந்த பெரியம்மா கொடுத்த ஒரு உற்சாகமும், பாராட்டும் என் தோழியின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு  அந்தக் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு அவளுக்கு தெரிந்த சமையல் கலையை கற்றுக் கொடுத்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தாள். அதன் பிறகு பார்ட்டி ஃபங்ஷன் என்று அந்த அப்பார்ட்மெண்டிற்குள் நடக்கும் எல்லா விசேஷங்களுக்கும் சமையல் செய்ய ஒப்புதல் அளித்தாள். மற்றவர்களும் நம்பி முழு மனதோடு அவளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர். இன்று நல்ல சமையல் கலை அரசியாக திகழ்கிறாள். அவளின் வருமானத்தால் வீட்டில் வசதி ஏற்பட்டு குழந்தைகளை நல்ல விதமாக படிக்க வைத்து மேன்மைப் படுத்தி வருகிறாள். இப்பொழுது தனி வீட்டிற்கு குடி வந்து ஒரு மெஸ் வைத்து நடத்துகிறார். 

இதையும் படியுங்கள்:
இரத்த அழுத்தம் சமநிலையில் இருக்க உண்ண வேண்டிய ஏழு வகைப் பழங்கள்!
motivation image

ஆதலால் எந்த விஷயத்தையும் மனம் திறந்து பாராட்டுங்கள். அதனால் இதுபோன்ற கலைகள் வளரும். பெண்கள் துணிகரமாக இது போன்ற பிசினஸ் விஷயங்களில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு தன்னம்பிக்கை வளர இது போன்ற பாராட்டுதல்கள் மிக மிக அவசியமான ஒன்று என்பதை, அவளின் தொழிலில்  ஏற்பட்ட வளர்ச்சியில் இருந்து புரிந்து கொண்டேன்.

logo
Kalki Online
kalkionline.com