
மனித மேம்பாட்டுக்கு மிகவும் அவசியமான மூன்று பண்புகள் எது என்று கேட்டால் பணிவு, கனிவு, துணிவு என்றுதான் கூறவேண்டும். பொறுமை, விட்டுக் கொடுத்தல், தியாகம் என்ற மூன்று தன்மைகளை வாழ்வில் நடைமுறைப்படுத்திக்கொண்டு வாழ்ந்தால் இயல்பாக, நல்ல முறையில் வாழ்க்கையை வாழ்ந்துகாட்டலாம்.
இதற்கு இங்கு பணிவு என்று குறிப்பிடுவது அடிமைத்தனம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. ஒத்து போதல் என்று எண்ண வேண்டும். ஒத்து போதல் என்றால் ஒரு வீட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் மூத்தவர் சொல்லும் ஒரு கருத்தினை அலட்சியப் படுத்தாமல் எல்லோரும் பொறுமையாக கேட்டு நடக்க வேண்டும்.
அவர்கள் சொல்லும் கருத்தில் ஏதாவது விபரீதம் இருந்தால் அதை எடுத்துச் சொல்லலாம். அது பணிவுக்கு குறைவு என்று ஆகிவிடாது. என்றாலும் அவர் கூற வரும் பொழுதே கேட்காமல் காதை மூடிக்கொள்வதுதான் குற்றம். ஒருவர் சொல்லை மற்றவர் மதித்து செயல் புரிந்து வாழ்ந்து வந்தோமானால் அந்த கூட்டுறவு மனப்பான்மைதான் நமது உறவு முறையை, நட்பு உணர்வை மேம்படுத்தி காட்டும்.
கனிவு என்பது பிறர் விருப்பத்தை கருணையோடும் விளைவறிந்த விழிப்போடும் நிறைவேற்றும் இரக்க மனநிலைதான். ஒரு தாய் இருக்கிறாள். தாய் குழந்தையை எப்போதும் தன்னோடு இணைத்து பிடித்துக்கொண்டு அல்லது பிரிந்து போய் விடாமல் கண்காணித்துக் கொண்டே இருக்கிறாள் என்றால் அது அன்பு.
அதே நேரத்தில் அந்த குழந்தை வளர்வதற்கும் வாழ்வதற்கும் தேவையான பால், உணவு இவைகளை அது வளர்ச்சி பெரும் வரையில் ஊட்டிக்கொண்டே இருக்கிறாள் என்றால் அதுதான் கருணை. எப்பொழுதும் அன்போடு கூடியதுதான் கருணை என்பது. இயற்கையோடு இணைந்து பார்த்தால் அன்பும் கருணையும்தான் எதிலும் எங்கும் அமைந்திருக்கிறது.
அதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு என்றால் மா, பலா மரங்களில் பிஞ்சு விடுகிறது. அதனை சிறு காம்பின் மூலம் விழுந்து விடாமல் மரமானது பிடித்துக் கொண்டிருக்கிறது இது அன்பு. அவ்வாறு பிடித்துக்கொண்டே பிஞ்சு வளர்வதற்கு தேவையான ரசாயன நீரை அந்த மரம் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறது என்றால் அதுதான் கருணை.
உயிரினங்களில் மதர் தெரசாவும் அப்படிப்பட்டவர்தான். அவருக்கு நோபல் பரிசு கொடுத்த பொழுது வைக்கப்பட்ட விருந்திலிருந்த இனிப்புகளை எல்லாம் சேகரித்து இப்படியெல்லாம் இனிப்பு இருக்கிறது என்று பல ஏழை எளிய மக்களுக்கு தெரியாது என்று அதையும் எடுத்துக்கொண்டு கொடுத்தவர்தான் மதர் தெரசா.
எங்காவது மக்களுக்கு உதவுவதற்கு சென்றால் அல்லது காசு பணம் சேகரிப்பதற்கு சென்றால் அங்கு எங்கேயுமே பசித்தாலும் சாப்பிடாமல் வந்து விடுவார். வந்து தான் தங்கி இருக்கும் இடத்தில் உள்ள குழந்தைகளோடுதான் சேர்ந்து சாப்பிடுவார்.
ஏனென்றால் தனது பசி அடங்கிவிட்டால் மற்றவர்களின் பசியை தன்னால் உணர முடியாது என்பதற்காக அப்படி நடந்து கொள்வாராம். அவரின் இந்த அன்புக்கும் கருணைக்கும் எந்த ஒன்றையுமே ஈடாக கூறி விட முடியாது. அப்படி ஒரு தன்னிகரற்ற அன்பும் கருணையும் கொண்டவர்தான் அவர்.
துணிவு என்பது தன்னம்பிக்கை. இயற்கை அமைப்பை உணரும் பொழுது எல்லோரும் பிறந்திருப்பது ஒரே பூமியில். அனைவருக்கும் ஒளி வீசும் சூரியனும் ஒன்றே. இவற்றைக் கொண்டு மனித குலத்தோடு நட்புறவை வளர்த்துக் கொண்டு நான் வாழ்வேன் என்ற அச்சமில்லா தன்னம்பிக்கைதான் துணிவு ஆகும்.
ஆகவே பணிவு, கனிவு, துணிவு மூன்றையும் அவற்றின் பயன் உணர்ந்து பழகி இயல்பாக்கி கொண்டால் வாழ்வில் அன்பும் கருணையும் ஓங்கும். இதனால் நினைத்த எதிலும் வெற்றி நிச்சயம் என்பது உறுதி.