
மனிதனுடைய வாழ்க்கை ஆரோக்கியமுள்ளதாக அமைதல் வேண்டும். ஆரோக்கியமான வாழ்விலே மனிதன் இன்புற்று வாழ்தல் வேண்டும். மனிதனுடைய உடலும் ஆரோக்கியமுள்ளதாக இருக்கவேண்டும். உடலும் உள்ளமும் ஆரோக்கியமுள்ளவையாக இருந்தால்தான், வாழ்க்கை ஆரோக்கியமானதாக அமையும்.
நமக்கு வரும் துன்பங்களைக்கண்டு நாம் துவண்டுவிடக்கூடாது. துன்பங்களை அடியோடு மறந்துவிட முயற்சி செய்யவேண்டும். எதிர்காலத்தில் நேரிடப்போகும் துன்பங்களை முன்கூட்டியே எதிர்பார்த்து, அவற்றைக் காரணமாகக் கொண்டு பலர் இப்போதிருந்தே கவலைப்பட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.
வீரன் தன் வாழ்நாளில் ஒருமுறைதான் சாகின்றான். ஆனால் கோழையோ நாள்தோறும் சாவைத் தழுவிக்கொண்டிருக்கின்றான் என்று ஷேக்ஸ்பியர் கூறியதை மனதிற்கொள்ளுதல் வேண்டும். கோழைகளைப்போல் வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் கற்பனை செய்து கொண்டு, அதற்காகக் கவலை கொள்வது கூடாது.
நமக்கு நேரவிருக்கும் துன்பங்கள், சாவு முதலியவற்றிலிருந்து நம்மால் மீள முடியாது என்று தெரிந்திருந்தும், அவற்றிற்காக மன வருத்தமடைந்து கவலைப்படுவது உள்ளத்தையும் உடலையும் பெருமளவில் பாதித்துவிடும்.
வாழ்க்கை என்பது மலர்ப்படுக்கை போன்றதன்று. முட்கள் மட்டுமே நிரம்பியதன்று. வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
இந்த வாழ்க்கையில் இன்பம் காணவேண்டுமானால், எதிர் காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதையும், எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தோல்விபற்றிக் கவலைப் படுவதையும் தவிர்த்தல் வேண்டும்.
ஒருவனுடைய கோபம் அவனுக்குப் பகைவர்களைத்தான் தேடித்தரும். அச்சம் அவனைக் கொல்லாமல் கொல்லும். பொறாமை அவனது உள்ளத்தைப் பாதித்து, இன்பமயமான வாழ்வைத் துன்பம் நிரம்பியதாக மாற்றிவிடும்.
நம்முடைய வாழ்வை மற்றொருவர் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தல் கூடாது. மற்றொருவருக்கு ஏற்படக் கூடிய வெற்றிகளைக் கண்டு மனம் புழுங்கக்கூடாது.
நமக்குத் துன்பம் வரும்போதெல்லாம் நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைப் பார்த்து ஆறுதல் கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் உண்மையான துன்பங்கள் நேரிட்டாலும் இன்ப உணர்வோடு வாழமுடியும்.
மனிதனுக்கு உண்டாகும் கவலைகள், அவனது மனத்துயரத்தின் மறு வடிவங்களாகும்.
நம்முடைய கவலைகளில் மிகப் பெரும்பாலானவை. பணம் பற்றியவையாகவே அமைந்துள்ளன. வருவாய்க்குத் தக்கவாறு செலவு செய்யப் பழகிக் கொள்ளாததனாலேயே பணக்கவலைகள் உண்டாகின்றன.
ஒரு கணிசமான தொகை கையில் கிடைத்தவுடன் அதைத் தம் மனம் போனவாறு செலவு செய்யாமல், வருவாய்க்குத் தக்கவாறு செலவு செய்யவும் நாம் கற்றுக் கொண்டோமானால், பொருளாதாரக் கவலைகள் தோன்றுவதற்கு இடமே இருக்காது.
நமக்கு நேரிடும் சுக துக்கங்களுக்குக் காரணம், நமது செய்கைகளே என்பதை மனதில் கொண்டு, கவனமாகச் செயல்பட வேண்டும் பிறருக்குத் துன்பமும், வருத்தமும் நேரிடாத வகையில் நாம் நினைத்தலும், செயல்படுத்தலும் வேண்டும்.
வலிமையான நம்பிக்கையும், உண்மையும் கொண்டு செயல்பட்டு வாழ்வோமானால், கவலையற்ற வாழ்வில் வளமாகவும், இன்பமாக வாழலாம். வாழ்க்கையை மலர்ச்சோலையாகவும், முட்கள் நிறைந்த வெறும் காடாகவும் ஆக்கிக் கொள்வது நமது கைகளில்தான் உள்ளது. அதனை உணர்ந்து வாழ்ந்தால் என்றும் வசந்தமேதான்.