
ஒருவன் கெட்ட பழக்கத்தை கற்றுக்கொண்டிருந்தால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவது மிகவும் சுலபமாயிருக்கும். இதனை விளக்க ஒரு கதை உண்டு.
அறிவில் சிறந்த ஒரு வயோதிகர் காட்டுவழியில் ஒரு இளைஞனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் ஒரு சிறிய செடி அப்போதுதான் விதையிலிருந்து முளைவிட்டுக் கொண்டிருந்தது. பெரியவர் அந்த இளைஞனை பார்த்து அந்தச் சிறிய செடியை பிடுங்கி விடும்படிக் கூறினார்.
இளைஞன் தன்னுடைய இரு கைவிரல்களை மட்டுமே உபயோகித்து, அந்த இளம் செடியை சுலபமாக பூமியிலிருந்து பிடுங்கி எறிந்தான். அந்தப் புதிய செடிக்குப் பக்கத்தில் அடர்த்தியாக வளர்ந்த ஒரு சிறு காட்டுச்செடி ஒன்றை அந்தப் பெரியவர் இளைஞனுக்குச் சுட்டி காட்டி அதையும் பிடுங்கி எறியும்படி கூறினார்.
அந்த இளைஞன் ஒருகையால் அந்தக் காட்டுச்செடியை வளைத்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதை இழுத்துப் பிடுங்கி எறிந்தான்.
இன்னொரு இடத்தில் பூமியில் அடர்த்தியாக நன்கு வேரைப்பதிய வைத்துக் கொண்டிருந்த இன்னொரு செடியைக் காட்டி அதையும் பிடுங்கும்படி பெரியவர் தன்னுடன் கூட வந்த இளைஞனைக் கேட்டுக் கொண்டார்.
அந்த இளைஞன் இந்த முறை தன் இரு கைகளையும் உபயோகித்து தன் பலம் அனைத்தையும் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு அந்தச் செடியையும் பிடுங்கி எறிந்தான்.
அதற்குப்பின் அந்தப் பெரியவர் ஒரு பெரிய மரத்தைக் காட்டி அதையும் பிடுங்கும்படி கூறினார். அந்த இளைஞனால் அந்தப் பெரிய மத்தை அசைக்கக்கூட முடியவில்லை.
அந்தப் பெரியவர் இளைஞனிடம் பின்வருமாறு உபதேசம் செய்தார்.
கெட்ட பழக்கத்திற்கும், இப்போது தீ செய்ததற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. கெட்ட பழக்கங்களை கற்றுக்கொண்ட ஆரம்பத்திலேயே புதிதாக முதைத்த இளஞ்செடியைப் போன்று மிகச் சுலபமாக அவைகளை உள்ளத்திலிருந்து கிள்ளி எறிந்து விட முடியும். அந்த கெட்ட பழக்கங்கள் உன்னுடைய உள்ளத்தில் வேர்விட்டு பெரிய மரமாக வளர அனுமதித்துவிட்டால் அதற்குப்பின் அவைகளை உள்ளத்திலிருந்து அசைக்கக் கூடமுடியாது" என்றார்.
கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொண்டு, அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு அல்லல்படுவதை விட, கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொள்ளாமலிருப்பது மிகவும் நல்லது.
கெட்ட பழக்கத்தைக் கற்றுக் கொண்டவுடன், அதை அகற்ற மிகவும் கடினமான போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். குடிப்பது ஒரு கெட்ட பழக்கம், அதே போன்று புகைபிடிப்பது ஒரு கெட்ட பழக்கம். இப்படிப்பட்ட கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொள்வது சுலபமாகயிருக்கும். ஆனால் அதை விட்டொழிப்பது என்பது அத்தனை எளிதல்ல.
குடிக்கவும், புகை பிடிக்கவும் கற்றுக்கொண்ட பின்பு இவைகளுக்கு அடிமையாகி எண்ணற்றவர்கள் தங்கள் ஆரோக்கியததை இழந்து அல்லல்பட்டு வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தையும் தங்களுடைய செல்வத்தையும் வீணடித்து விடுகிறார்கள். இதுபோன்ற செயல்கள் நமக்கு தேவையில்லை.
தீய பழக்கங்களைக் கைக்கொண்டால் தீயவைகள் நம்மை முற்றுகையிட்டு வாழ்க்கையை நரகமாக ஆக்கிவிடும்.
நலமுடனும், வளமுடனும் வாழவே நாம் பிறந்திருக்கிறோம். வீணான பழக்கங்களில் மூழ்கி, வாழ்வை இழந்து சோக பிம்பங்களாக வாழப்பிறக்கவில்லை.
நல்ல பழக்கத்தை நம் அன்றாட வாழ்வின் வழக்கமாகக் கொண்டு வாழ்வோம்.