எப்படி வாழ்வாய் என்று பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுவதுதான் தன்னம்பிக்கை. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் தோன்றிட தானாகவே தன்னம்பிக்கை பிறக்கும். வாழ்க்கை எப்பொழுதுமே எளிமையானதுதான். நாம்தான் அதனை சிக்கலாக நினைத்து தன்னம்பிக்கை இழந்து உழல்கிறோம். முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை. நம்மால் முடியுமா என்று கேட்டால் அது அவநம்பிக்கை. எந்த ஒரு செயலையும் நம்மால் செய்ய முடியும் என்று நினைப்பதே தன்னம்பிக்கை.
தன்னம்பிக்கையை இழந்தால் நம் சுயமதிப்பை இழக்க வேண்டி வரும். அத்துடன் நம் மன ஆரோக்கியமும் குறையும். வாழ்க்கையில் எந்த சூழலிலும் நின்று போராடும் தைரியமே தேவை. உடல் வலிமை பெற்றவர்கள் எல்லாம் பலசாலி கிடையாது. தன்னம்பிக்கையுடன் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக பணியாற்றுபவர்களே சிறந்த பலசாலிகள்.
எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது. நம்மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்றால் என்ன செய்வது? தன்னம்பிக்கையை இழந்தால் துன்பம் வந்து சேரும். துன்பத்தை தூரமாக வைத்து, இன்பத்தை இதயத்தில் வைத்து தன்னம்பிக்கையை நமக்குள் வளர்த்தெடுக்க எந்நாளும் வெற்றிதான்.
தன்னம்பிக்கை உடைந்தால் ஆளுமைப் பண்புகள் குறைந்துவிடும். சில தனிநபர்கள் இயல்பாகவே அதிக உள்முக சிந்தனை கொண்டவர்களாகவோ அல்லது அதிக உணர்திறன் கொண்டவர்களாகவோ இருப்பார்கள். இது சமூகத் தொடர்புகளை அதிகமாக உணரவைக்கும். தன்னம்பிக்கை உடைந்தால் இந்த ஆளுமை பண்பு குறைந்துவிடும்.
தன்னம்பிக்கைக் குறைந்தால் எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். நம்மைப் பற்றியும், நம் சமூகத்திறன் களைப் பற்றியும் எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும். எனவே இவற்றிலிருந்து வெளிவர படிப்படியாக பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். தன்னம்பிக்கை குறைந்தால் எதையும் சமாளிக்கும் திறன் குறையும். இதற்கு நண்பர்கள், குடும்பத்தினரிடம் பேசுவது ஊக்கத்தை அளிப்பதுடன் சமாளிக்கும் உத்திகளையும் உருவாக்க உதவும்.
தன்னம்பிக்கை குறையும் இடத்தில் பதட்டமும், பயமும் ஏற்படும். எனவே தன்னம்பிக்கையை உருவாக்க சின்ன சின்ன வெற்றிகளையும் கொண்டாடப் பழகவேண்டும். தன்னம்பிக்கை இல்லையென்றால் தோல்வி பயம் நம்மை வந்தடையும். நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கும். இவையெல்லாம் நம் தன்னம்பிக்கையை குறைக்கும் விஷயங்கள். இதிலிருந்து வெளிவர படிப்படியாக பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். மற்றவர்களின் கருத்துக்களில் நாம் அதிக அக்கறை காட்டினால் அவை நம் தன்னம்பிக்கையை முடக்கிவிடும்.
தன்னம்பிக்கை மேலோங்க என்ன செய்ய வேண்டும்?
நான் தன்னம்பிக்கை கொண்டவன். என் தயக்கம் என்னைத் தடுக்க நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று முதலில் நம் மனதில் சொல்லிக்கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை உடையாமல் இருக்க "நேசிப்பது" என்பது மிகவும் அவசியம். நம் பெற்றோர், நம் குழந்தைகள் மற்றும் மனைவி நம்மை நேசிப்பதும், நாம் நம்மையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் நேசிப்பதும் நம் தன்னம்பிக்கையே உயர்த்தும்.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு.
நிமிர்ந்து நிற்பது, அமர்வது மற்றும் எதிரில் உள்ளவர்களின் கண்களைப் பார்த்து பேசுவது போன்றவை தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் குணங்கள்.
எந்த விஷயத்தையும் பாசிட்டிவாக அணுகவேண்டும். தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சாளர்களின் பேச்சை கேட்பதும், படிப்பதும், கண்ணாடி முன் நின்று "என்னால் முடியும்" என வாய்விட்டுக் சொல்வதும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.