
ஒருவர் தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்ள முடியும். ஒருவர் தனக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் எதிர்மறை சிந்தனைகள் மற்றும் வலி மிகுந்த உணர்ச்சிகள் மூலம் தன்னைத்தானே சிறைப் படுத்திக்கொள்ள முடியும்.
இது ஒருவரின் எண்ணங்களுக்கு அவரே பலியான உணர்வை ஏற்படுத்தும். அவற்றுக்கான காரணங்கள் மற்றும் இவற்றில் இருந்து எப்படி மீள்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ஒருவர் தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்ளும் காரணங்கள்;
மீண்டும் மீண்டும் தோன்றும் எதிர்மறை சிந்தனை;
ஒருவர் தனக்குள்ளேயே எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளில் சிக்கி சுழன்று கொண்டு இருப்பதும் அவற்றிலிருந்து வெளியே வர விரும்பாமல் மீண்டும் மீண்டும் அவற்றிலேயே ஆழ்ந்து கொண்டு இருப்பதும் ஒரு மிகப்பெரிய காரணம்.
விழிப்புணர்வு இல்லாமை;
தேவையற்ற எண்ணங்களை அகற்றத் தெரியாமல் மீண்டும் மீண்டும் அவற்றின் பிடியிலேயே சிக்கிக்கொண்டு அவற்றை தூண்டி விடுவதே எதற்கு இதற்கு காரணமாக அமைகிறது.
உள்விமர்சகர்;
எதிர்மறையான சுயபேச்சு மற்றும் அவநம்பிக்கையான கண்ணோட்டங்களுடன் ஒருவர் தன்னைத்தானே உள்ளுற விமர்சனம் செய்து கொள்கிறார். இதனால் தன்னைப் பற்றிய மோசமான எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன. அவற்றில் இருந்து மீள வழி தெரியாமல் அதற்குள்ளேயே சிக்கிக்கொண்டு தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொள்கிறார்.
சிறைப்படுத்தப்படுவதில் இருந்து விடுபடுவதற்கான வழிகள்;
மனநிறைவு;
தனக்கு வாழ்க்கையில் என்ன கிடைத்திருக்கிறது என்பதைப் பற்றிய மனநிறைவுடன் ஒருவர் வாழப் பழக வேண்டும். நிறைய ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக மெனக்கடல்களும் பெரிய அளவில் உழைப்பும் தேவை. அதற்காக தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக தனக்கு கிடைத்திருக்கும் சந்தோஷமான விஷயங்களைப் பற்றி நினைத்து மனநிறைவு கொள்ள வேண்டும்.சிந்தனையை நிறுத்துதல்;
நமது எண்ணங்களை அவை போன போக்கில் அலையவிடாமல், தேவையற்ற விரும்பத்தகாத எண்ணங்கள் தோன்றும்போது கண்களை மூடிக்கொண்டு சிந்தனையில் கவனம் செலுத்தி ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணி நிறுத்து என்று மனதிற்கு கட்டளை இட வேண்டும். இதை சுய விழிப்புணர்வுடன் செய்து வரும்போது தேவையில்லாத எண்ணங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
சில உத்திகள்;
தேவையற்ற எதிர்மறையான சுய பேச்சு உள்ளூர நிகழும் போது சில உத்திகளை கையாளலாம். தனக்குத்தானே நறுக்கென்று கிள்ளிக் கொள்வது, ரப்பர் பேண்டை மணிக்கட்டில் போட்டு லேசாக இழுப்பது போன்ற உடல் தூண்டுதல்களை பயன்படுத்தலாம். இவற்றை பயிற்சி செய்யும்போது மெல்ல மெல்ல எதிர்மறை உணர்விலிருந்து விடுதலை கிடைக்கலாம்.
நேர்மறை சுயபேச்சு;
எதிர்மறையாக தனக்குள்ளே பேசிக் கொள்வதற்கு பதிலாக நேர்மறையான உறுதிமொழிகளையும் சுய பேச்சுக்களையும் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி;
தேவையில்லாத விரும்பத்தகாத நினைவுகளோ எண்ணங்களோ தோன்றினால், உடனடியாக ஆழமாக மூச்சை உள் இழுத்து மெதுவாக வெளியே விட வேண்டும். இது உடலையும் மனதையும் தெளிவுபடுத்தும் மேலும் நிகழ்கால செயல்பாடுகளில் கவனம் செலுத்த வைக்கும்.
காட்சிப்படுத்துதல்;
தேவையற்ற எண்ணங்களை அகற்ற நேர்மறையான காட்சிப்படுத்துதலை மனக்கண்ணில் பயிற்சி செய்ய வேண்டும்.
திசை திருப்புதல்;
எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும்போது அவற்றை திசை திருப்ப உடனடியாக டிவியில் ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியைப் பார்க்கலாம். நடைபயிற்சி செல்லலாம். அல்லது நண்பரை அழைத்துப் பேசலாம், முடிந்தால் நண்பர்களை அழைத்துக்கொண்டு வெளியே செல்லலாம். இது உடனடியாக எதிர்மறை எண்ணங்களில் இருந்து திசை திருப்ப உதவவும்.
நன்றி உணர்வு;
நன்றி உணர்வுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒரு நோட்டில் தனக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களை பற்றி பட்டியல் போட்டு அதைப்பற்றி அதிகமாக சிந்திப்பதும் நேர்மறை எண்ணங்களை வளர்க்க உதவும்.