மகிழ்ச்சியாக இருப்பது, நமது அன்றாட வாழ்வின் அங்கமாக இருக்க வேண்டுமேயன்றி, எப்போதோ நடக்கும் நிகழ்வாக இருக்கக் கூடாது.
வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது எந்தப் பிரச்னையையும் தீர்க்க உதவாது என்பதை அவசியம் உணரவேண்டும்.
மகிழ்ச்சிக்கு அடிப்படையான விஷயமாக இருப்பது உடல் ஆரோக்கியம், ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டியது கட்டாயம். இதற்கு நேரத்துக்கு சாப்பிடுவதும் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதும் அவசியம்.
நம்மை ஏற்கெனவே மகிழ்ச்சிக்குள்ளாக்கிய விஷயங்களை சிறியதோ பெரியதோ, அவை குறித்த பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அவ்விஷயங்களை அடிக்கடி நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும்.
உதாரணமாக இனிய இசையைக் கேட்பது, நல்ல புத்தகத்தைப் படிப்பது போன்றவற்றை முயற்சிக்கலாம்.
மேலும் இம்மாதிரி தருணங்கள். ஒரு நாளைக்கு எத்தனை முறை நிகழ்கின்றன என்பது குறித்து கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
புன்னகைக்க மறவாதீர். அடிக்கடி புன்னகை புரிவது, மன அழுத் தத்தைக் குறைக்க உதவும். உண்மையிலேயே நாம் மகிழ்ச்சியாக இல்லையெனினும், பிறரை நோக்கிபுன்னகை புரிவதை நிறுத்தக்கூடாது. அது நாளடைவில் நம்முள்ளே பெரும் மாற்றத்தை உண்டாக்கும்.
தம் மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களைக் குறித்து தனியாக எழுதி வைக்க வேண்டும். பின்னர், அவை உண்மையிலேயே எதிர்மறையானதுதானா? அவற்றை நேர்மறையானதாக மாற்ற முடியுமா? அவற்றை நம்முடைய முன்னேற்றத்துக்கு எவ்வகையில் பயன்படுத்துலாம் என்பது குறித்து ஆராயவேண்டும்.
நமக்காக நேரம் ஒதுக்க வேண்டும். இந்த அவசர யுகத்தில், தினசரி நமக்காக நேரம் ஒதுக்க வேண்டியது அவசியமாகும். உதாரணமாக ஆனந்தமாகக் குளிப்பது, பூங்காவில் உலாவுவது போன்றவற்றுக்கு கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும்.
சுறுசுறுப்பு அவசியம். மகிழ்ச்சியாக இருக்க, சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டியதும் முக்கியம். வேலையில், குடும்பத்தில், வெளி வட்டாரத் தொடர்பில் என எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் கவலைக்கு இடமே இல்லை.
வாழ்க்கையில் தவறு புரிவது சகஜம்தான். எனினும் அதிலிருந்து பாடம் கற்க வேண்டியது முக்கியம்.
நம்முடைய பிரச்னைகளைக் குறித்து நெருங்கிய நண்பரிடமோ. உறவினரிடமோ மனம் விட்டுப் பேசும்போது மனபாரம் குறைவதோடு பிரச்னைகளுக்குத் தீர்வும் கிடைக்கலாம்.
எல்லோரும் பல்வேறு திறமைகளுடன்தான் பிறக்கிறோம். ஆனால், பலர் அவற்றை உணர்வதில்லை. உணர்ந்தாலும் சரியாகப் பயன்படுத்துவது இல்லை. நாம் எதில் திறமையாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து, அதில் பயணத்தைத் தொடர்ந்தால் வெற்றி நிச்ச யம். மகிழ்ச்சியும் நிலைக்கும்.