Experience is the best teacher
Experience

அனுபவம் என்னும் சிறந்த ஆசான்!

Published on

ன்பைத் தருபவர்களை விட அனுபவத்தை தருபவர்கள் தான் நம் வாழ்க்கையில் அதிகம். ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடத்தை வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுத்து விடும். தடுக்கி விழுந்தால் தூக்கி விட யாரும் இருப்பதில்லை. ஆனால் நிமிர்ந்து நடந்தால் தடுக்கி விட பலரும் இருப்பார்கள். அனுபவத்தை எந்த ஆசிரியராலும் நமக்கு கற்றுத் தர முடியாது. அனுபவித்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு தனக்காக வாழ்பவர்கள் குறைவு. அடுத்தவர்களை ஈர்ப்பதற்காகவும், அடுத்தவர்களின் எண்ணங் களுக்காகவுமே வாழ்க்கை நகர்கிறது. வாழ்வில் அனுபவம் என்னும் பாடம் நமக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுடன் மிகவும் கவனமாக பழகத் தெரிய வேண்டும். இல்லை எனில் கசப்பான அனுபவம் நமக்கு நிறைய கிடைக்கும். வாழ்வில் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் வாழப் பழக வேண்டும். இல்லையெனில் வேதனை தான் மிஞ்சும். அனுபவம் என்னும் அழகான பாடம் நமக்கு நிறைய கற்றுத் தருகிறது.

எந்த ஆசிரியராலும் கற்றுக் கொடுக்க முடியாத வாழ்க்கைப் பாடத்தை சில தோல்விகள் நமக்கு எளிதில் கற்றுத் தந்துவிடும். வலிகள் நிறைந்த பாடம் நமக்கு சிறந்த அனுபவமாக அமையும். போராடி வாழ்வதற்கு வாழ்க்கை ஒன்றும் போர்க்களம் இல்லை. எனவே ஆபத்தான மனிதர்களிடமிருந்து விலகி இருந்தால் கசப்பான அனுபவம் அதிகம் பெறாமல் தவிர்க்கலாம். அன்பை தருபவர்களை விட கசப்பான அனுபவத்தை தருபவர்கள் தான் வாழ்க்கையில் அதிகம். எனவே நமக்கான பாதையை நாம் தேர்ந்தெடுத்து அதன் வழியில் செல்வது நல்ல அனுபவத்தை பெற வைக்கும்.

வாழ்வில் யாருக்காகவும் நம்மை மாற்றிக் கொள்ளாமல் பிடித்ததை செய்து உண்மையுடனும், நேர்மையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக வாழ்வில் வெற்றி பெற நம் ரகசியங்களை பகிராமல் இருப்பது மிகவும் நல்லது. நம் எண்ணங்கள் அழகாக இருந்தால் செயலும் அற்புதமாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வாழ்வில் தோல்வி என்பதே கிடையாது. விருப்பமுடன் செயலாற்றத் தொடங்கினால் ஆயிரம் வழிகள் புலப்படும். துணியாத வரை வாழ்க்கை பயம் காட்டும். துணிந்து விட்டால் நமக்கு நல்ல வழி காட்டும்.

இதையும் படியுங்கள்:
தன்னம்பிக்கையோடு தடைகளை தெறிக்கவிடுங்கள்!
Experience is the best teacher

அனுபவம் என்னும் சிறந்த ஆசிரியர் நமக்கு நிறைய வாழ்க்கை பாடங்களை கற்றுத் தருகிறார் எனவே சகித்துக் கொண்டு வாழ்வதற்கு அல்ல வாழ்க்கை. சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை என்பதை உணர்ந்து கிடைத்த வாழ்க்கையை ரசித்து வாழப் பழகலாம். கருவறை முதல் கல்லறை வரை அனுபவத்தின் ஆளுமை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அனுபவம் நமக்கு சிறந்ததை கற்றுத் தரும் ஆசான்.

அனுபவம் என்பது வாழ்வில் பட்டு தெரிந்து கொள்வது. துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விட வேண்டும். ஆனால் அது கற்றுத் தந்த பாடத்தை மறக்க கூடாது. அனுபவம் என்பது நாம் கற்றுக் கொள்ளாததையும் பெற்றுக் கொடுக்கும் சிறந்த ஆசான். தேவையற்றதை தேவையில்லாத நேரத்தில் வாங்கினால் தேவையானதை விற்க வேண்டி வரும் என்று கற்றுத்தரும் சிறந்த ஆசான் அனுபவம்தான். சிக்கல்கள் வரும் பொழுது மனம் மலைத்து நிற்கும் அந்த சமயத்தில் சிக்கல்களைக் களைய  அனுபவம் என்னும் ஆசான்தான் கை கொடுக்கும்.

வாழ்க்கை என்னும் பட்டறையில் நாம் பட்ட அடிகளே அனுபவமாய் நின்று நம்மை பக்குவப்படுத்தும். கடலில் வழி தெரியாமல் கலங்கி நிற்பவருக்கு கலங்கரை விளக்கு எவ்வாறு வழிகாட்டுகிறதோ அது போல் அனுபவம் நமக்கு சிறந்த வழியைக் காட்டும். அனுபவத்தின் மூலம் பெற்ற பக்குவமும், வயது முதிர்ச்சியும் நம்மை சக மனிதர்களை புரிந்து கொள்ள உதவும். அனுபவம் எளிமையாகத் தான் இருக்கும். ஆனால் வலுவான சேதங்களிலிருந்து நம்மை காக்கும்.

ஆயிரம் ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்க முடியாத பாடத்தை அனுபவம் நமக்கு எளிதில் கற்றுத் தந்துவிடும். உண்மைதானே நண்பர்களே!

logo
Kalki Online
kalkionline.com