ஒரு மனிதர் தன் வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்பினால் அவருக்கு இலக்கு, லட்சியம், கடின உழைப்பு, திட்டம் தீட்டுதல் செயலாற்றுதல் போன்றவை முக்கியம். ஆனால் எல்லாவற்றுக்கும் அடித்தளமாக விளங்குவது கனவு காணுதல்.
அடிப்படை அம்சம்;
கனவு என்பது வெற்றியின் அடிப்படை அம்சமாக கருதப்படுகிறது. லட்சியம் உந்துதல் மற்றும் படைப்பாற்றலுக்கான அடித்தளமாக செயல்படுவது கனவு. வெற்றி என்பது ஒரு குறிப்பிட்ட வகையான மனிதர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்பது தவறு. முயற்சி செய்யும் யாருக்கு வேண்டுமானாலும் வெற்றி கிடைக்கும். அதற்கு கனவு காணும் உத்தி மிகவும் பயனளிக்கிறது
உந்துதல்;
கனவுகள் வெற்றி பெற நினைக்கும் மனிதர்களுக்கு ஒரு எரிபொருள் போல செயல்படுகிறது. சவால்கள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொண்டாலும் மனம் தளர்ந்து போகாமல் தொடர்ந்து செயலாற்ற கனவுகள் உந்துசக்தியாக வேலை செய்யும். கனவுகளை நனைவாக்க வேண்டும் என்கிற ஆசை, கடினமாக உழைக்கவும் விடாமுயற்சியுடன் செயல்படவும் தூண்டுகிறது.
பல வெற்றி பெற்ற மனிதர்களின் கூற்றுப்படி தாங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு தாங்கள் கண்ட கனவே முதல் காரணம் என்று கூறியிருக்கிறார்கள். இதுவரை இல்லாத சாத்தியக்கூறுகளை, கற்பனை செய்வதை, கனவு தருகிறது. புது வகையான சிந்தனை படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கிறது.
இலக்குகள் அமைப்பதில் உதவி;
இலக்குகளை அமைக்க கனவுகள் உதவுகின்றன. உதாரணமாக மிகவும் ஏழையாக இருக்கும் ஒரு மனிதன்தான் ஒரு செல்வந்தனாக வேண்டும் எனறு விரும்புகிறார் அப்போது கனவில்தான் ஒரு செல்வந்தன் ஆன பின்பு தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறார். பெரிய வீடு, கார், சொத்துக்கள் போன்றவற்றை அவர் மனக்கண்ணில் கனவு காணும்போது அவருடைய செல்வந்தனாக வேண்டும் என்கிற இலக்கு மிக உறுதியாக அமைகின்றது.
துணிச்சல்;
இலக்குகள் அமைந்த உடன் அதை செயல்படக்கூடிய திட்டங்களாக மாற்ற வேண்டும். ‘தன் ஆசை நிறைவேறுமா? கை கூடுமா’ என்று மனம் சந்தேகப்படும் வேளையில், ‘உன்னால் எதுவும் முடியும்’ என்று கனவு தைரியப்படுத்துகிறது. சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலை வழங்குகிறது.
வரம்புகளுக்கு அப்பால்;
கனவுகள் ஒரு மனிதனின் தற்போதைய வரம்புகளுக்கு அப்பால் சிந்திக்க வைக்கிறது. ‘இந்த நிலை மாறும். விரும்பியதை அடைவோம்’ என்கிற ஊக்கத்தை தருகிறது. எல்லைகளை தகர்க்கவும் தற்போதைய நிலையை சரி செய்யவும் கனவுகள்தான் ஒரு மனிதனுக்கு உறுதுணையாக இருக்கின்றன. சாத்தியமற்றதாக தோன்றிய விஷயங்களை சாதிக்க கனவுகள் கைகொடுக்கின்றன.
தெளிவான கனவு ஒரு மனிதனுக்கு இருக்கும்போது வாய்ப்புகள் இயல்பாகவே அவனை நோக்கி வர தொடங்கும்.
பேரார்வம் மற்றும் ஆற்றல்;
கனவு ஒரு மனிதனின் முயற்சிகளில் ஆர்வத்தை செலுத்துகிறது. ஆர்வம் ஆற்றலை தூண்டுகிறது. வெற்றியை நோக்கிய பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும் நிறைவாகவும் ஆக்குகிறது. இலக்குகளில் ஆர்வமாக இருக்கும்போது கடினமான வேலையை கூட மகிழ்ச்சியாக செய்யத் தூண்டும்.
இன்றைய அரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் நமது முன்னோர்களின் கனவுகளின் வாயிலாக விளைந்தவைகள் பெரிய கனவுகள் பெரும்பாலும் நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் செல்லக்கூடிய வைகளாக இருக்கும். கனவுகள் அதை காணும் நபருக்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் ஒன்றாகும்.
எதிர்காலத்தின் வடிவமைப்பாளர்;
ஒரு மனிதனின் எதிர்காலத்தை தானே வடிவமைக்கும் சக்தியை கனவு தருகிறது. கனவுகளை உணர்ச்சியுடன் தொடரும்போது ஒருவர் தன்னைச் சுற்றிலும் நேர்மறையான அதிர்வுகளை உருவாக்குகிறார். திறமை குறைவாக இருந்தாலும், கனவு காணும்போது தன்னுடைய திறமைகளை பட்டை தீட்டவும் புதிதாக கற்றுக் கொள்ளவும் செய்கிறார். எனவே கனவு என்பது வெற்றிக்கான அடித்தளமாகவும் ஆணிவேராகவும் அமைகிறது.