"வலியைக் கடந்து செல்ல இரண்டு வழிகள் உண்டு. அது உங்களை அழிக்க அனுமதிக்கலாம் அல்லது இன்னும் அதிகமாகக் கனவு காணவும், கடினமாக உழைக்கவும் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்."
அந்த தம்பதிகள் காதலால் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள். காதலின் அடையாளமாக அழகிய ஆண் மகன் பிறந்தான். ஆனந்த் என பெயரிட்டு ஆனந்தித்தனர். பிறந்து ஒரு வருடத்திலேயே ஆனந்திடம் ஏதோ ஒரு வித்தியாசம் தென்படுவதை உணர்ந்து மருத்துவரிடம் கேட்டால் அந்த குழந்தை கழுத்துக்கு கீழ் உள்ள பகுதிகள் இயங்காத சிறப்பு குழந்தை என சொல்லி அதிர்ச்சி தந்தனர்.
அந்த இளம் பெற்றோருக்கு மனதில் வலி. ஆனால் வெகு விரைவில் மீண்டு தங்கள் காதலின் அடையாளமாக உருவான அந்த குழந்தையின் மீது அவர்கள் அளவற்ற அன்பும் பாசமும் செலுத்தினர். தங்கள் குழந்தை ஒரு சிறப்பு குழந்தை என்று அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. உறவினர்கள் வீட்டுக்கு ஆனந்தை பார்த்து பேசும் எதிர்மறை வார்த்தைகளை கூட அவர்கள் தவிர்த்தார்கள்.
ஆனந்தை அழைத்துக்கொண்டு தங்களுக்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்து வசித்தனர். அவனுக்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் அளித்தனர். அவர்களின் அன்பினாலும் கருணையினாலும் ஆனந்த் உடலில் குறைபாடு இருந்தாலும் சிறந்த அறிவு கொண்டவனாக அனைத்திலும் திறமையானவனாக வளர்ந்தான். எதையும் கற்றுக் கொள்ளும் அதிக ஐக்யூ அவனுக்கு இருந்ததைப் புரிந்து கொண்ட பெற்றோர் துணிவுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்கவைத்தனர்.
இன்று ஆனந்த் மற்றவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை சொல்லும் சைக்காலஜிஸ்ட் ஆக திறம்பட பணியாற்றி வருகிறார். அனைவருக்கும் ஆனந்த் கூறுவது இதுதான் ‘’வாழ்க்கையில் வரும் வலிகளை நாம் எப்படி அதை கையாளுகிறோமோ அதை பொறுத்துதான் நமது வெற்றி அமையும். உங்களுக்கு ஏற்படும் வலி உங்கள் பாதையை முடக்கி தோல்வி தரும் அடர்ந்த இருள் வனமாகவும் மாற்றும் அல்லது எழுச்சியுடன் வெற்றி தரும் பிரகாசமான பாதையாகவும் மாற்றும். ஆனால் அதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தன்னம்பிக்கை உறுதி மட்டும் தான் நமக்குத் தேவை.
என் பெற்றோர் எனக்காக செய்யும் செயல்களைக் கண்டு நான் எப்படியாவது இந்த உலகில் சாதிக்கவேண்டும் என்று நினைத்தேன். என் புற வலிகளை புறக்கணித்தேன் என் அகவலிமையான மூளையை மட்டும் உபயோகித்தேன். என் பெற்றோருக்கும் பெருமையாக பெருமை சேர்க்கிறேன்."
ஆனந்த் என்பவர் ஒரு உதாரணம் மட்டுமே. இவர் போன்றே நிஜ வாழ்க்கையில் இருப்பவர்கள் அநேகம் பேர் உண்டு. தற்போது இவர் போன்ற சிறப்பு குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் பெருகி வருகிறது. இவர்களின் வலியும் வேதனையும் நிச்சயமாக மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. ஆனால் அதையெல்லாம் கடந்து இவர்கள் குறிப்பிடும்படியான சாதனைகளை செய்து மற்றவர்களை விட சிறந்த முறையில் சமூகத்திலும் தனது சொந்த வாழ்க்கையிலும் பணியாற்றி வருவதைக் காணலாம்.
நாமும் வெற்றிக்கு இடைஞ்சலாக வரும் வலிகளை அதே வெற்றியின் எரிபொருளாக மாற்றி சாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பலன் அடைவோம்.