
என் தோழிக்கு ஒரு பழக்கம். படித்த காலத்தில் முதல் மாதம் கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால், அடுத்த மாதாந்திர பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் வாங்கிவிடலாம் என்று எண்ணுவாள். ஆனால் அந்தப் பரீட்சை வரும் வரை இந்த மாதம் கணக்கு பரிட்சையை விட்டுவிட்டோமே, மதிப்பெண் வாங்கவில்லையே என்று நினைத்து நினைத்து அதை செயல்படுத்த விடாமல் நடைமுறைப்படுத்துவாள்.
ஆதலால் நடந்து முடிந்த பிரச்னை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக அதற்கு தீர்வுகாண முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியின் மீது நல்ல கவனம் செலுத்தும் போது தேவையற்ற சிந்தனைகள் எழாமல் இருக்கும். அப்பொழுது நினைத்ததை சாதிக்க எளிதாகும்.
வீட்டில் யாராவது கோபத்தில் திட்டிவிட்டால் அதையே நினைத்து நினைத்து மனம் சங்கடத்தில் ஆழ்ந்து போகும். அது விரும்பத்தகாத சிந்தனைகளுக்கு வழி வகுக்கும். ஆதலால் அது போன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நல்ல இசையைக் கேட்கலாம். நன்றாக ஆடலாம். சத்தம் போட்டு பாடலாம், படிக்கலாம். துணிமணிகளை அயர்ன் செய்யலாம். இப்படி கவனத்தை திசை மாற்று ம்பொழுது மனநிலை மேம்படும். விரும்பத்தகாத விஷயங்கள் மறைந்து மறந்தும் போகும். இந்த விஷயத்தில் மறதி நல்லதே.
நமக்கு ஏற்படும் கவலைகள் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு பிடிக்கவில்லை என்றால் பூஜை அறையில் அமர்ந்து சிறிது நேரம் பேசலாம். அதனால் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும். மற்றவர்களிடம் நம் சொந்த விஷயங்களை பகிர்ந்தால் நம்மைப் பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்று நினைப்பவர்கள் இந்த வழியைப் பின்பற்றலாம்.
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, சிரிப்பு பயிற்சி, ஆழ்ந்த சுவாச பயிற்சிகள் செய்வது உடலை தளர்வடையச் செய்து நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். மனதில் தெளிவை உண்டாக்கி மன அழுத்தத்தைப் போக்கும். அதிகம் சிந்திப்பதை தடுக்கும். என்டோர் பின் ஹார்மோன் வெளியீட்டை தூண்டும். இதனால் மனபாரம் குறையும். நடந்த நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வராது.
வித்தியாசமாக சமைத்து பாருங்கள் மனதில் இன்பம் குடியேறும். விருப்பப்பட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வது, விருப்பப்பட்டோருடன் செல்வது, இயற்கையான சூழல்கொண்ட கடல், ஆறு, மலை போன்ற இடங்களில் நேரத்தை செலவழிப்பது மனதை நிதானப்படுத்த உதவும். இதனால் வாழ்க்கையில் நடந்த பிடிக்காத சம்பவங்களை வெளியேற்ற வழி கிடைக்கும்.
இப்படிப்பட்ட வழிகளை பின்பற்றினால் வாழ்க்கை வசந்தமாகும். நற் சிந்தனை தோன்ற வழி வகுக்கும். ஆதலால் மனதின் வலிகளுக்கு மருந்தை விட மறதியே சிறந்தது. அதை மாற்ற முயற்சிப்பதும் நம் மனதின் எண்ணங்களே!