
நம்பிக்கை. இந்த ஒற்றை வார்த்தைக்கு உள்ள பலம் வேறு எந்த வார்த்தைக்கும் இல்லை என்றே சொல்லலாம். நம்பிக்கை ஒன்றையே மூலதனமாக வைத்து முன்னேறி வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் ஏராளம். நம்பிக்கையை இழந்து அதனால் வாழ்க்கையை இழந்த திறமைசாலிகள் ஏராளம்.
நம்பிக்கை என்பது யானையின் தும்பிக்கையைப்போல. பலம் வாய்ந்தது. யானை எவ்வளவு பலமான பொருட்களையும் அனாவசியமாகத் தனது தும்பிக்கையால் தூக்குவதைப் போல நம்பிக்கை உள்ளவன் எவ்வளவு பெரிய பிரச்சினையாயினும் அதை சுலபமாக சமாளித்து வெற்றி காண்பான்.
ஒரு சீடன் தன் குருவின் ஆற்றல் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தான். அவர்களின் குடிலுக்கருகில் ஒரு சிறிய நதி ஓடிக்கொண்டிருந்தது. ஒருசமயம் குரு நதியின் மறுகரையில் இருந்த தன் சிஷ்யனை அழைத்தார். குரு அழைத்ததும் உடனே குருவின் நாமத்தை உச்சரித்துக்கொண்டே அந்த நதியில் காலை வைத்து நடக்கத் தொடங்கினான். சற்று நேரத்தில் நடந்தே நதியைக் கடந்து குருவை அடைந்தான். இதைப் பார்த்த குருவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
நீ எப்படி நதியை நடந்து கடந்தாய் என்று கேட்க அது ஒன்றும் பிரமாதமில்லை. தங்கள் சக்தி மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு. தங்களின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே நடந்து நதியைக் கடந்துவிட்டேன் என்றான்.
இதைக் கேட்ட குருவிற்கு அகங்காரம் உண்டானது. என் பெயருக்கே இவ்வளவு சக்தி உள்ளதே. அப்போது அதற்கு உரியவனான எனக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்று நினைத்து உடனே எழுந்து சென்று அந்த நதியை நடந்து கடக்க முயற்சித்தார். ஆனால் பாவம். நீச்சல் தெரியாத அவர் நதியில் மூழ்கி இறந்து போனார். சீடனுக்கு தன் குருவின் ஆற்றல் மீது இருந்த அபார நம்பிக்கை அவனைக் காப்பாற்றியது. ஆனால் சக்தி மிக்க குருவிற்கோ அவருடைய ஆணவமே எமனாக முடிந்தது.
சிறு நம்பிக்கை பெரும் வெற்றியைத்தரும். கையில் ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாமல் தங்கள் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக வைத்து தொழில் வெற்றி கண்டு பெரும் செல்வந்தர்கள் ஆனவர்கள் உண்டு. வாழ்வில் வெற்றி பெற நம்பிக்கை மட்டுமே போதாது. கூடவே நேர்மையும் வேண்டும். துணிவும் வேண்டும். ஒரு விஷயத்தில் நம்பிக்கையோடு துணிச்சலாக எடுக்கும் முடிவே வெற்றிக்கு வழிவகுக்கும்.
முல்லாவிற்கு திருமணம் முடிந்துத் தன் மனைவி மற்றும் உறவினர்களோடு தனது சொந்த ஊருக்கு படகில் புறப்பட்டார். படகு தன் பயணத்தைத் தொடங்கியது. படகானது நடு ஆற்றில் சென்று கொண்டிருந்த சமயம் ஒரு சுழல் காற்று வீச படகானது அலைபாயச் செய்தது. படகு எந்த சமயத்திலும் ஆற்றில் மூழ்கிவிடலாம் என்ன நிலைமை. முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். இதைக் கண்ட முல்லாவின் மனைவி ஆச்சரியப்பட்டாள். அதைப் பற்றி முல்லாவிடம் கேட்டாள்.
இதற்கு முல்லா பதிலளிக்காமல் தன் மனைவியின் அருகில் சென்று தன்னிடமிருந்த கத்தியை எடுத்துத் தன் மனைவியின் கழுத்தில் வைத்தார். ஆனால் அவர் மனைவியோ எவ்வித பயமும் இன்றி இருந்தார். முல்லா தன் மனைவியிடம் கத்தியைக் கண்டால் உனக்கு பயமில்லையா என்று கேட்க அதற்கு அவர் மனைவி கத்தி கூர்மையானதாக இருக்கலாம். ஆனால் அதை கையில் வைத்திருப்பவர் என் மீது பிரியமுள்ள கணவர் அல்லவா. நான் ஏன் பயப்பட வேண்டும் என்றாள்.
உடனே முல்லா தன் மனைவியிடம் ஆற்றில் உருவான சூறாவளிச் சுழல் காற்றி அபாயகரமானதாக இருக்கலாம். ஆனால் அதை உருவாக்கிய இறைவன் என் மீது அன்பு கொண்டவர். அதனால்தான் எனக்கு பயமில்லை என்று பதிலளித்தார். அவர்கள் பயணித்த படகானது சுழலில் சிக்காமல் பத்திரமாகக் கரை சேர்ந்தது.
நீங்களும் முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். பின்னர் உங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வையுங்கள். வெற்றி உயர்வும் உங்களைத் தேடிவரும்.