உண்மையான புகழ்ச்சி என்பது எது தெரியுமா?

True praises
mark divine...Image credit - markdivine.com
Published on

ருவரை நேருக்கு நேர் பார்த்து புகழ்வது சரியான புகழ்ச்சியாகாது. அதை முகஸ்துதி என்று கூறுவர், ஒரு நபர் இல்லாத பொழுது அவரைப்பற்றி பலர் உயர்வாக பேசினால் அதைப் புகழ்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாம். அதேபோல ஒரு நபரை பற்றி அவர் யார் என்றே தெரியாத பொழுது, அவரிடமே அவரைப் பற்றி புகழ்ச்சியாக பேசுவதுதான் உண்மையான புகழ்ச்சி. 

அப்பொழுதெல்லாம் ஒரு அரசர் தன் ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை நிலவரத்தை கண்டுபிடித்து, அதற்கு தகுந்தாற்போல் தன்னைத் திருத்திக் கொண்டு நல்லாட்சி செய்வதற்காக மாற்று உடையில் நகர்வலம் வருவது உண்டு என்று படித்திருக்கிறோம். அப்படி வரும் பொழுது மக்கள் அரசரின் நிறை குறைகளைப் பற்றி எப்படி  சொல்கிறார்களோ அதற்கு தகுந்தாற்போல  நாட்டுக்கு நல்லது செய்த கதையும் உண்டு. அளவுக்கு அதிகமாக அரசரை விமர்சித்ததற்காக தண்டனை கொடுக்கச் சொல்லி மற்ற மந்திரிகள் தூண்டினாலும் , அதற்கு செவிமடுக்காத அரசர்கள் இருந்த கதையையும் படித்திருக்கிறோம். 

அரசர்தான் என்று இல்லை. புகழ்பெற்ற ஒருவரைப் பற்றி அந்த ஊரில் உள்ள சாதாரண எளிய மக்களும் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு கூறும் கதை ஒன்று இதோ.

மார்க்ட்வைன் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ஒரு ஊருக்கு சென்றிருக்கிறார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னால் முடி வெட்டிக் கொள்ளலாம் என்று சலூனுக்குச் சென்றிருந்தார். முடி வெட்டிக் கொள்ளும் பொழுது சலூன்காரன் "நீங்கள் நல்ல நேரத்தில்தான் இந்த ஊருக்கு வந்திருக்கிறீர்கள். இன்று மாலை பொதுக்கூட்டத்தில் மார்க்ட்வைன் பேசப்போகிறார் தெரியுமா? " என்று கேட்டாராம். 

சிரித்துக்கொண்டே அவர் பேச்சு ரசிக்கும்படி இருக்குமா? என்று கேட்டிருக்கிறார். "பிரமாதமாகப் பேசுவார். நீங்க ஒரு தடவை அவர் பேச்சைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்" என்றதும் வரலாம் என்று நினைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் ட்வைன். 

இதையும் படியுங்கள்:
பழி சொல்லும் யாரும் நமக்கு வழி சொல்லப் போவதில்லை!
True praises

டிக்கெட் வாங்கி விட்டீர்களா? என்று சலூன்காரன் கேட்டதற்கு ட்வைன் இல்லை என்று தலையை ஆட்ட... 

கஷ்டம்தான் டிக்கெட்டெல்லாம் விற்று தீர்ந்து போய்விட்டது. நின்று கொண்டுதான் நீங்கள் அவர் பேச்சைக் கேட்கவேண்டும் என்று சொல்ல, அதற்கு ட்வைன், "எப்போது பேசினாலும் நான் நின்றுதான் ஆக வேண்டும்" என்றாராம்.  இது அல்லவோ உண்மையான புகழ்ச்சி. 

ட்வைன் சென்றது சாதாரணமாக முடி வெட்டிக் கொள்வதற்குத்தான். அவரைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு அல்ல. அப்படி இருந்தும் அவரைப் பற்றி மற்றவர்கள் கூற முடிந்த கருத்தை கேட்கும் இன்பம் கிடைத்தது ட்வையினுக்கு. அப்படி என்றால் அவர் பேச்சு எப்படி இன்பம் நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும் என்று நாமே முடிவு கட்டிக் கொள்ளலாம். 

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்கிறார் வள்ளுவர். ஆதலால் செய்யும் செயலை சிறப்பாகச் செய்வோம். அதற்குரிய புகழை அது கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்புவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com