
திருமணம் ஆனவுடன் அல்லது அதற்கு முன்பு பார்த்த ஒரு செயல் திருமணத்திற்கு பின்பு எதிர்மறையாகப்படுவது இயல்பு. என் தோழி அவள் திருமணம் செய்துகொள்ள போகும் மாமா மகனைப் பற்றி கூறும் பொழுது அவன் நன்றாக சினிமா பார்ப்பான். அவனை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். என்னையும் நிறைய சினிமாவுக்கு கூட்டிக்கொண்டு போவார்தானே என்று சந்தோஷமாகச் சொல்லி சிரித்தாள்.
பிறகு திருமணம் ஆகி சில வருடங்கள் கழித்து அவளை சந்தித்த பொழுது இருவரும் நலம் விசாரித்தோம். அப்பொழுது எப்படி இருக்கிறாய்? என்றதுதான் தாமதம். இருக்கிறேன்… ஏன் கேட்கிறாய்? எப்பப் பார்த்தாலும் சினிமா என்று சினிமா பைத்தியமாவே இருக்கிறார் அவர். நான் சொல்வதையே கேட்க மாட்டேங்கிறார். பைசா பூரா அதிலேயே செலவாகிறது என்று சொல்லி வருத்தப்பட்டாள். இதுதான் திருமணத்திற்கு முன்பும் பின்பும் உள்ள நடைமுறை வாழ்க்கை சிக்கல்.
இன்னும் சில கூட்டுக் குடும்பங்களில் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு கூட சின்னஞ்சிறுசுகளை தவறாக புரிந்து கொள்வது நடைமுறையில் உள்ளது. மருமகள் வேலை முடிந்து சிறிது நேரம் தாமதித்து வந்தாலும் சண்டை போடுகிறவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சில குடும்பங்களில் அம்மா தன்கூட பிறந்த அக்கா, தங்கைகள் மனைவியைத் திட்டினாலும் ,அதை நாசூக்காக அவர்களிடமும் எடுத்துக்கூறி, மனைவியையும் விட்டுக் கொடுக்காமல் பாராட்டுதலுக்கு உகந்த வார்த்தைகளை எடுத்துக்கூறி மனைவியையும் ஆறுதல்படுத்தி, அதே சமயம் மனம் நோகாத படிக்கு பெற்றோரையும் திருப்திபடுத்தி வாழும் முதிர்ந்த பக்குவம் கொண்ட ஆண்மகன் மற்றும் தம்பதியர்களையும் பார்க்க முடிகிறது.
அப்படிப்பட்ட பெண்களுக்கு கணவர் மிகவும் உறுதி தன்மை வாய்ந்தவராக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி பேச மிகவும் விருப்பம் உடையவர் களாகவும், நம்பிக்கை உள்ளவர்களாகவும் பெண்மணிகள் திகழ்வதை நிறைய காணமுடிகிறது. வேறொன்றுமில்லை துணையை பரஸ்பரம் நம்பினால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதற்கு இதைவிட ஒரு சான்று பகிரமுடியாது.
மேலும் தம்பதியர் இருவரும் ஈகோ பார்க்காமல் நடந்து கொள்வது, எல்லா பொறுப்புகளையும் இருவரும் பகிர்ந்து கொள்வது, எதையும் மனம் விட்டு வெளிப்படையாகப் பேசி முடிவெடுப்பது, அவரவர் கோணத்தில் அவரவரையும் வழி நடத்துவது, முடிந்து போனதை தூசி தட்டி எடுத்து மீண்டும் பேசாமல் இருப்பது, இருவரின் நண்பர்களையும் இருவரும் நன்றாகத் தெரிந்து வைத்து பழகுவது, போன்ற செயல்களில் இருவரும் மனம் ஒருமித்து செயல்பட்டால் திருமண வாழ்வில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் ஏற்படாது.
அதற்கு தம்பதிகள் செய்ய வேண்டியது மனதில் உறுதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். பெரியவர்கள் இளைய தலைமுறையினரின் செயலுக்கு அதிக விமர்சனம் செய்யாமல், நல்ல விஷயங்களை கண்டுபிடித்து பாராட்டி, அவர்களின் தனித்துவமான சுதந்திரத்தை கண்டுகொள்ளாமல் விடுவதுதான் குடும்ப மகிழ்ச்சிக்கு நிரந்தர வழி.